போர்சே கார் விபத்து: போதையில் ஆட்டோ டிரைவரின் உயிரை பறித்த கார் ரேஸ் வீரர் ஜாமீன் கேட்டு மனு

சென்னை : குடிபோதையில் போர்சே காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி ஆட்டோ டிரைவரின் உயிரைப் பறித்த கார் ரேஸ் வீரர் விகாஷ், ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இதுகுறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அதிவேகமாக வந்த போர்சே கார் ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 12 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன. இந்தக் கோர விபத்தில் ஆட்டோக்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்த டிரைவர்களும் படுகாயமடைந்தனர். டிரைவர் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 11பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த விகாஷ் மற்றும் அவரது நண்பர் சரண் இருவரும் குடிபோதையில் தாறுமாறாக போர்சே காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் விகாஷ் என்பவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகன் என்றும் அவர் தான் காரை ஓட்டிச்சென்றார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விகாஷ் 2ஆம் ஆண்டு சட்டப்படிப்பு பயின்று வருகிறார் என்றும், இவர் கார் பந்தயவீரர் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய அளவில் நடந்த கார் பந்தயப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

கார் பந்தைய வீரர் விகாஷ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் இறுதிப் போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. வெற்றிபெற்ற அணி சார்பில் நடந்த விருந்தில் விகாஷ், சரண் இருவரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த விருந்தில் அளவுக்கதிகமாக மது அருந்தியுள்ளனர். பின் அவருடைய போர்சே சொகுசுக் காரில் வீடு திரும்பியபோது கண்மூடித்தனமாக காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

இருவரும் கைது

காரில் வந்த இருவரும் 80 சதவிகித அளவுக்கு ஆல்கஹால் அருந்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருவர் மீதும் 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்தை ஏற்படுத்திய சொகுசுக் கார் மற்றும் சேதமடைந்த ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போர்சே சொகுசுக் கார் ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அநாதையான குழந்தை

இந்நிலையில், விகாஷ் ஏற்படுத்திய கார் விபத்தில் பலியான ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் ஐந்து வயதுப் பெண் குழந்தை அநாதையாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. திருத்தணி அருகேயுள்ள அகூர் என்னும் கிராமத்தில் உயிரிழந்த ஆறுமுகத்தின் ஐந்து வயதுப் பெண் குழந்தையான ரஞ்சனா அவளது பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார்.

பெற்றோர்களை இழந்த குழந்தை

கடந்த மே மாதம் ஆறுமுகம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுமுகத்தின் மனைவி புஷ்பாவும் மூத்தமகளான ஏழு வயது புஷ்பாவும் இறந்துவிட்டனர். இந்நிலையில்தான் ரஞ்சனா பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். ஆறுமுகம் சென்னையில் ஆட்டோ ஓட்டி, சம்பாதித்து ரஞ்சனாவுக்கு செலவுக்குக் காசு கொடுத்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே அம்மாவையும் உடன் பிறந்த சகோதரியையும் இழந்த நிலையில், அடுத்த நான்காவது மாதத்திலேயே அப்பாவையும் இழந்து வாழும் வழியறியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாள் ரஞ்சனா. குடிபோதைக்கும் பணத்துக்கும் இந்தக் குழந்தை அனாதையாகியுள்ளது.

ஜாமீன் கேட்டு மனு

போலீஸாரால் கைது செய்யப்பட்ட விகாஷ், சரண்குமார் ஆகிய இருவரும் தங்க ளுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச் சந்திரன், இதுகுறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

தொடரும் மதுபோதை விபத்துகள்

ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிபோதையில் காரை ஓட்டி முனுசாமி என்ற கூலித்தொழிலாளி இறக்க காரண மாக இருந்ததாக ஐஸ்வர்யா என்ற இளம்பெண் கைது செய்யப் பட்டு ஜாமீனில் உள்ளார். இதேபோல் நடிகர் அருண் விஜய் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் கார் விபத்து

கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு நாள் அதிகாலையில், பிரபல தொழிலதிபர் மகன் ஷாஜி என்பவர் போதையில் பென்ஸ் கார் ஓட்டிச் சென்று , நடைபாதையில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் மீது மோதினார். இதில் ஒருவர் உயிரிழந்தார். அதுபோன்று மும்பையில் நடிகர் சல்மான் கான் 2002ஆம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மது விருந்து பார்ட்டிகள்

'வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் நண்பர்களோடு இணைந்து செல்வாக்குமிக்கவர்கள் செய்யும் செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். குடிபோதையில் விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுவரை விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

English summary
Vikas Anand, the accused in the Porsche car accident in Chennai that claimed the life of an autorickshaw driver and injured 10 others on Monday morning, approached the principal sessions court here on Wednesday seeking bail.
Please Wait while comments are loading...

Videos