For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: 2 ஆண்டுகளாக ‘அட்டாக்’ பாண்டியை தேடும் போலீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டு நாளையுடன் (31-ம் தேதி) 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான அட்டாக் பாண்டி இன்னமும் கைது செய்யப்படவில்லை.

தழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொடூரக் கொலை.

Pottu suresh murder case: ‘Attack’ Pandi in Kerala or Andaman and Nicobar Islands?

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி (மு.க.அழகிரியின் பிறந்தநாளுக்கு மறுதினம்)தன்னுடைய காண்ட்ராக்ட் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு டி.வி.எஸ். நகரில் இருக்கும் வீட்டுக்கு வரும் வழியில் படுகொலை செய்யப்பட்டார்.

தி.மு.க. ஆட்சியில் அழகிரிக்கு நிகராக பவர்ஃபுல்லாக வலம்வந்த பொட்டு சுரேசின் கொலை அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் இருந்து மதுரைக்குப் பிழைக்க வந்தது பொட்டு சுரேஷ் குடும்பம். ஆரம்பத்தில் குடும்பம் நடத்தவே ரொம்ப கஷ்டப்பட்டவர், இவர் செய்யாத வேலை இல்லை. சாலையோரத்தில் ரெடிமேட் ஆடைகள் வியாபாரம் செய்தவர்.

அப்போதே கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதிகளுடன் பழக ஆரம்பித்தார். தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அப்போது மதுரை தி.மு.க.வில் ஜமீன்தார் போல செயல்பட்ட பி.டி.ஆரின் வீட்டில் எடுபிடியானார். அதை வைத்து பலபேரின் அறிமுகம் கிடைத்தது. எப்போதும் குங்குமப் பொட்டு வைத்திருப்பதால் பி.டி.ஆர்.தான் சாதா சுரேஷை 'பொட்டு' சுரேஷ் ஆக்கினார்.

அப்படியே அழகிரியின் நண்பர் முலம் அழகிரி அணிக்குத் தாவினார். அழகிரியின் பர்சனலான விஷயங்களைச் செய்யும் அளவுக்கு அங்கு வளர ஆரம்பித்தார். காண்ட்ராக்ட், கமிஷன், தொழில் ஆரம்பிப்பது என்று வளர்ந்த அவர், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஆட்டி வைக்குமளவுக்கு அழகிரியால் அதிகாரம் கொடுக்கப்பட்டார்.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்டோரால் ‘தென் தமிழகத்தின் துணை முதல்வர்' என்று விமர்சிக்கப்பட்ட பொட்டு சுரேஷை திமுகவினரே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெட்டி சாய்த்தனர். அந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் 17பேர் சிறைக்குச் சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்துவிட்டனர்.

பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால், முதல் குற்றவாளியாக கூறப்படும் அட்டாக் பாண்டியை இன்னும் கைதுசெய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது போலீஸ்.

பொட்டுவின் அதிகாரம்

மு.க.அழகிரியின் நண்பராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த திமுக ஆட்சியின்போது அரசு வட்டாரங்களில் அதிகாரமிக்க நபராக வலம் வந்தவர். 2011ல் அதிமுக ஆட்சி மாறியதும், அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள் காரணமாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார்.

அழகிரியின் பிறந்தநாள்

2013 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மதுரையே குலுங்கும் அளவில் தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அழகிரியின் பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அது, பொட்டு சுரேஷ் பல்வேறு வழக்குகளால் சிறைக்கு சென்று வந்த நேரம் என்பதால் அடக்கியே வாசித்தார் பொட்டு சுரேஷ்.

அழகிரியின் விசுவாசிதான்

கட்சி மாறப்போகிறார், அழகிரியை காட்டிக்கொடுக்கப் போகிறார் என்று வதந்திகள் உலா வந்த காலம். அதனால், அழகிரியால் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு வந்தார் பொட்டு சுரேஷ். 'அப்படியெல்லாம் இல்லை. நான் எப்பவும் அழகிரியின் விசுவாசிதான்" என்பதைக் காட்டும் வகையில் அந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு முன்பாக அழகிரியைச் சந்தித்து வாழ்த்து கூறினார்.

37 வெட்டுக்காயங்கள்

பிறந்தநாளுக்கு மறுநாள் 31 ஆம் தேதி மாலை சொக்கிகுளத்தில் இருக்கும் தன்னுடைய காண்ட்ராக்ட் அலுவலகத்தை விட்டு, காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் பொட்டு. அவரது காரை பின் தொடர்ந்து வந்தவர்களை காரை வழிமறித்து வெட்டி சாய்த்தனர். அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே பொட்டு சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 37 வெட்டுக் காயங்கள் இருந்தன.

அட்டாக் பாண்டி

பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டதும் விசாரணையில் இறங்கிய சுப்ரமணியபுரம் போலீஸ், முதலில் தேடியது அட்டாக் பாண்டியைத்தான். காரணம் பொட்டுவுக்கும் அட்டாக்குக்கும் பல வருடங்களாகவே பகை வளர்ந்து வந்தது திமுக அறிந்த விஷயம்.

அழுத அழகிரி

பொட்டுவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அழகிரி, 'என் நண்பனை இழந்துவிட்டேன்' என்று கதறினார். அப்போது பொட்டுவின் மனைவி அழகிரியிடம், ‘நம்ம ஆட்களே கொன்னுட்டாங்களே' என்று அழுதார். ஆனால் அதற்கு பின் அழகிரி தன் நண்பனின் வழக்கு சம்பந்தமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காரணம், அழகிரி மீதும் அவர் மகன் துரை தயாநிதி போன்றவர்கள் மீதும் சந்தேகத்தைத் திருப்புவதுபோல் போலீஸ் விசாரித்து வந்ததுதான். மன்னன், எஸ்ஸார் கோபி போன்றோர் விசாரிக்கப்பட்டனர்.

ஆதரவாளர்கள் சரண்டர்

கொலையாளிகளைப் பிடிக்க மாநகர காவல் துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நடந்த 2-வது நாளில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகிய இருவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசுக்கு தெரியவர, அவர்கள் இருவரும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

‘அட்டாக் பாண்டியை கொல்ல பொட்டு திட்டமிட்டார்; நாங்கள் முந்திக் கொண்டோம்' என்று வாக்குமூலம் கூறிய இவர்கள், கொலைக்கு முன் சென்னையில் மு.க.ஸ்டாலினை அட்டாக் பாண்டி சந்தித்ததாகவும், தொடர்ந்து, அழகிரி மகன் தயாநிதி அட்டாக் பாண்டியை சந்தித்ததாகவும் கூறியிருந்தனர். எனவே, இந்த வழக்கில் ஸ்டாலின் அல்லது அழகிரியின் பெயர் சேர்க்கப்படுமா என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது.

தனிப்பட்ட விரோதம்

இறுதியில் அட்டாக் பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்கு காரணம் என்ற முடிவுக்கு வந்த போலீஸார், 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இன்றுவரை அட்டாக் பாண்டியை போலீசால் நெருங்க முடியவில்லை.

தேடப்படும் குற்றவாளி

தலைமறைவான அட்டாக் பாண்டியை வெளியே கொண்டு வரும் நோக்கில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால், அவரது சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கிய போலீஸ், கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அட்டாக் பாண்டியை அறிவித்தது.

அந்தமானுக்கு ஓட்டம்

பண பலம் படைத்த ஒருவரின் உதவியுடன் வெளிநாட்டில் அட்டாக் பாண்டி செட்டில் ஆகிவிட்டதாகவும், அந்தமானில் மறைந்து வாழ்வதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதேசமயம் பொட்டு சுரேஷால் பாதிக்கப்பட்ட போலீஸாரால்தான் அட்டாக் பாண்டி இன்னும் பிடிபடாமல் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தெய்வம் தப்பமுடியாது

இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ‘போலீஸ் தரப்பிலிருந்து மேலாக எந்தப் பதிலும் இல்லை' என்கிறார் பொட்டு சுரேஷின் தம்பியும் வழக்கறிஞருமான என். சரவணன்.

‘கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பலாம். தெய்வத்திடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் தப்பிக்க முடியாது. கொலையில் சம்பந்தப்பட்ட சிலரை இப்போதே தெய்வம் தண்டிக்க ஆரம்பித்துவிட்டது கண்கூடாகத் தெரிகிறது' என்கின்றனர். பொட்டு சுரேசின் அண்ணன்கள் என். அசோகன், என். குமார்.

அட்டாக் விசுவாசம்

ஒரு நாளிதழ் கருத்து கணிப்பு வெளியிட்டு அழகிரியைக் கோபப்படுத்த, அந்தப் பத்திரிகை அலுவலகத்தை தன் ஆட்களோடு எரிக்கச் சென்றவர் அட்டாக். அதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த வழக்கில் விடுதலையாகி வந்தார். தனக்காக இவ்வளவு செய்கிறானே என்று அழகிரியின் பாசத்துக்கு ஆளானார். அதனால்தான் அவருக்கு மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் என்ற பெரிய பதவியை வாங்கிக்கொடுத்தார். அதோடு ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக மாறினார் அட்டாக். அவரைப் பார்த்து எல்லோரும் பயந்த நேரத்தில், அவருக்கு குடைச்சலைக் கொடுத்தவர் பொட்டு சுரேஷ்.

தலைமறைவு

பொட்டு கொலைச் சம்பவத்தின்போது திமுக தொண்டரணி மாவட்ட அமைப்பாளராக இருந்தார் அட்டாக் பாண்டி. பொட்டு கொலை வழக்கில் அட்டாக் பாண்டியை என்கவுண்டரில் போட திட்டமிருப்பதாக அஞ்சுகின்றனர் அவரது உறவினர்கள். எனவேதான் அவர் தலைமறைவாக திரிவதாக கூறப்படுகிறது.

கோலாகல கொண்டாட்டம்

ஜனவரி 30 ஆம் தேதி அழகிரியின் பிறந்தநாளுக்கு மதுரை நகரெங்கும் விழாக்கோலமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் அழகிரியை வாழ்த்துகிற போர்டுகள்தான். ஆனால், மறுநாள் பொட்டுவின் நினைவு தினத்தை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.

கண்ணீர் அஞ்சலி கூட இல்லையே

கொலை வழக்கை வேகமாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும்படி சொல்வதற்கு பொட்டு குடும்பத்திலும் யாருமில்லை. அவர் கடைசி வரை விசுவாசமாக இருந்த அழகிரியும் வலியுறுத்தவில்லை. தி.மு.க. தலைமையும் இவ்வழக்கு பற்றி கருத்து சொல்லவில்லை. பொட்டுவின் பல கோடிக்கணக்கான பணம், பல தொழில்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அவர் இறந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் அப்படியே அமுக்கிக்கொண்டார்கள். அவர் உயிரோடு இருந்தபோது வாழ்த்தி போஸ்டர் அடித்தவர்கள் எல்லோரும், அவர் இறந்ததுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கூட ஒட்டவில்லை என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

பொட்டு கொலைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் மதுரை மீனாட்சியம்மனுக்கே வெளிச்சம்.

English summary
The hunt for ‘Attack’ Pandi’, a key suspect in the murder of DMK functionary ‘Pottu’ Suresh, could lead the police to places like Kerala and the Andamans, where he was suspected to be lying low.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X