For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பிக்கை ஒளி கிடைத்திருக்கிறது... போராடி வென்ற பிரியதர்ஷினியின் சிறப்பு பேட்டி

Google Oneindia Tamil News

- விஜயலட்சுமி ராமச்சந்திரன்

சென்னை: பிரியதர்ஷினி....கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தன்னை காதலித்து ஏமாற்றிய ஐபிஎஸ் அதிகாரியை சட்டத்தின் முன்னால் நிறுத்த முயன்று, பல சோதனைகளைக் கடந்து இன்று வென்றிருக்கிறார்.

வாழ்க்கையே கானல் நீராய் கண்முன் தெரிந்தாலும் இன்னும் உத்வேகத்துடன் போராடத் தயாராய் இருக்கும் பிரியதர்ஷினி, 'ஒன் இந்தியா'விற்காக மனம் திறந்தார்.

Priyadharshini’s exclusive interview…

3 வருடப் போராட்டத்தின் இறுதியில் கிடைத்த வெற்றி அவருக்குள் இருந்த வேதனைக்கு ஒரு சின்ன நம்பிக்கையாக அமைந்துள்ளது என்ற போதிலும் அவருக்குள் இன்னும் இருக்கும் அந்த வேதனை எட்டிப் பார்க்காமல் இல்லை.

பிரியதர்ஷனி நம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

கேள்வி- நீதி கிடைத்த இந்த நிமிடம் எப்படி இருக்கின்றது உங்களுக்கு?

பிரியதர்ஷனி - மிகுந்த சந்தோசமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட மூன்று வருட போராட்டத்திற்கு பின்பு நம்பிக்கைக்கான ஒரு ஒளி கிடைத்ததாக உணர்கின்றேன்.

கேள்வி- நீதி கிடைத்ததில் தாமதம் ஏற்பட்டதாக உணர்கிறீர்களா?

பிரியதர்ஷினி- கண்டிப்பாக....கிட்டதட்ட மூன்று வருடங்களாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டிருக்கின்றது. காரணம் அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதுதான். ஒரு சாதாரண மனிதன் மேல் தொடுக்கப்பட்ட வழக்காக இருந்தால் எப்போதோ வழக்கு முடிவிற்கே வந்திருக்கும். ஆனாலும், என்னுடைய பொறுமைக்கும், ஒவ்வொரு படியிலும் தளராத என்னுடைய முயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே இதனை உணர்கின்றேன்.

கேள்வி- நமது தற்போதைய திருமணச் சட்டம் யாருக்கு சாதகமாக இருப்பதாக நினைக்கின்றீர்களா?

பிரியதர்ஷினி- திருமணச் சட்டம் பற்றி எனக்கு தெரியவில்லை.ஆனால், வரதட்சணை தடுப்புச் சட்டம் மூலம் என்னதான் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிந்தாலும் அது பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாக அமைவதில்லை.

என்னுடைய வழக்கைப் பொறுத்தவரை அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால் கூட நடவடிக்கை காலதாமதமாகி இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

பேப்பரில் படிப்பது போல அல்ல வரதட்சணைக் கொடுமை என்பது. மன உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம் அது.மனிதனை மனிதனாக பார்க்காத வரையில், பெண்களை ஒரு வருவாய் சாதனமாக பார்ப்பது குறையும் வரை இந்த நிலை மாறாது.

கேள்வி- படித்தவர், படிக்காதவர் யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட நிலை தொடர என்ன காரணம்?

பிரியதர்ஷினி- இந்த மாதிரியான அதிகாரிகள் மேலிடத்தில் அமர்வதால்தான் இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதாக நான் நினைக்கின்றேன் .அதனால்தான் இந்த வழக்கை நான் இவ்வளவு தீவிரமாக நடத்தினேன்.

இது போன்ற அதிகாரிகள் மேலிடத்தில் அமர்ந்தால் எப்படி நீதி கிடைக்கும்? நாளைக்கே இன்னொரு பெண் அவரிடம் சென்று புகார் செய்தாலும் அவருக்கு இது புத்தியில் உரைக்காது என்பதே உண்மை.

சமூகத்தை பற்றி பேசுவதை விட, சமூகத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே இப்படிப்பட்ட நிலையில் இருப்பது நாட்டின் கேள்விக்குறியான அதிகாரத்தைதான் முன்வைக்கின்றது.

கேள்வி- உங்களுடைய ஐஏஎஸ் கனவை மீண்டும் தொடர்வதாக எண்ணம் இருக்கின்றதா?

பிரியதர்ஷினி- இல்லை...தொடர்வதாக எண்ணம் இல்லை.

கேள்வி- வருண்குமாரை தண்டிப்பது மட்டும்தான் உங்கள் நோக்கமா? இல்லை.. அவர் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்ள சாத்தியக்கூறுகள் இருகின்றதா?

பிரியதர்ஷினி- அவருடன் வாழும் எண்ணம் எப்போதோ என்னை விட்டுப் போய் விட்டது. ஏனெனில் காசுக்காக பெண்ணை விரும்பும் மனிதரை நான் மனிதனாக மதிக்கக் கூட தயாராக இல்லை.

அவரே மீண்டும் திருந்தி வந்தாலும் திருமணம் செய்ய முடியாது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பே அவர் வேறொரு ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

அந்தப் பெண் தற்போது சிவகாசியில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு என்னால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடியும். அவருடைய தவறுகளுக்காக தற்போது பாதிக்கப்பட்டுள்ளது அந்தப் பெண்ணும்தான் என்றார் பிரியதர்ஷினி.

தான் நம்பி ஏமாந்த நபருக்கு எதிராக திடமான மனோபலத்துடன் போராடி வென்றுள்ள பிரியதர்ஷினி, அந்த நபரை நம்பி வந்த பெண்ணுக்காக வருத்தப்படுவது உண்மையிலேயே அவர் மிகப் பெரிய பெருந்தன்மையான மனதுக்காரர், ஈர மனம் கொண்டவர் என்பதையே காட்டுகிறது.

இனி மீதம் உள்ள வாழ்க்கையிலும் பிரியதர்ஷினி வெல்லட்டும்...

English summary
Piriyadharshini who is the girl struggled for justice in the case of Varun kumar. He is an IPS officer cheated the girl with the name of love. Her exclusive interview for One India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X