For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் தூய காற்று விற்பனைக்கு! அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடித்து வரும் நாம் காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் அந்த அளவிற்கு காசு மாடைந்து விட்டது. இந்தியாவில் பெருநகரங்களில் காற்று மாசடைந்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது.

மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுகின்றனர். தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வது போல தற்போது துாய்மையான, 'ஆக்ஸிஜன்' எனப்படும் பிராண வாயு குடுவை, சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Pure oxygen selling in Chennai

எழும்பூரில், 'இனவேட்டிவ்' என்ற தனியார் நிறுவனம், ஆக்ஸிஜன் குடுவைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஒரு குடுவையில், 120 முறை சுவாசிக்கும் அளவிற்கான, 99.6 சதவீதம் துாய்மையான ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு உள்ளது. எளிதாக அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் உள்ள அந்த குடுவையின் விலை, 975ரூபாயாகும்.

டெல்லி, சென்னை போன்ற மாநகரங்களில், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அதிகரித்து வருகிறது. துாய்மையான ஆக்ஸிஜன் குடுவைகள் விற்பனைக்கு வந்துள்ள தகவல்வரவேற்கத்தக்கது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், குடுவைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் நல்லது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூச்சு திணறல் உள்ளவர்கள், மலையேற்றம், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இக்குடுவைகள் பயனுள்ளதாக இருக்கும். நாள் முழுவதும், துாசி காற்றில், வெளியில் அலைந்து வருவோர், மருத்துவர் ஆலோசனையின் படி, ஓரிரு முறை இக்குடுவையில் உள்ள ஆக்ஸிஜனை சுவாசித்தால் புத்துணர்ச்சி பெற வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. அங்கு தொழில் துறையும் அதிக அளவு வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாது குளிர்காலத்தில் வீடுகளில் குளிர்காய்வதற்கு நிலக்கரி எரிப்பதால் வெளியேறுகிற புகையாலும் காற்றில் மாசு பெருகி வருகிறது.

இதுவரை இல்லாத அதிக அளவிலான பனி மூட்டத்தால் சீனாவில் பனிப் புகை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் தொடக்கத்தில் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்கள் காற்றை விற்பனைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கனடா நாட்டில் உள்ள பான்ப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வரும் கனடா நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து காசு கொடுத்து வாங்குகிறது சீனா.

ஒரு பாட்டில் காற்று இந்திய மதிப்பின்படி ரூ.1700க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்ப் மலையின் காற்று இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காற்று 10 மணி நேரம் வரை இருக்கும்.

அதே நிலையே தற்போது இந்தியாவின் பெருநகரங்களும் சந்தித்து வருகின்றன. இப்போதே டெல்லி மிக அதிக அளவு மாசடைந்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த, டீசல் வாகனங்களை பதிவு செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்ணிக்கைக் கொண்ட வாகனங்கள் இயக்கம் என பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டார் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

இந்த நிலையிலேயே சென்னையில் காற்று விற்பனையை ஒரு நிறுவனம் ஆரம்பித்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதா என்ற கவலைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு காலத்தில் தண்ணிய போய் காசு கொடுத்து வாங்கறதான்னு கேட்டவர்களே பாட்டில்களில் விற்கும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கத் தொடங்கிவிட்டனர். அதே போன்ற நிலை இனி காற்றுக்கும் வர வெகுநாட்கள் இல்லை. அதே நேரத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தல் இன்றி இப்படியான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்பதை அரசாங்கம் அனுமதிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சிலர் அரசு முறையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Pure oxygen air bottels selling in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X