For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவுக்கு தொடரும் பின்னடைவு- மக்கள் நலன் கூட்டியக்கத்தை 'கூட்டணி'யாக மாற்றுவதா? தா.பா. போர்க்கொடி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலன் கூட்டியக்கத்தை தேர்தல் கூட்டணியாக மாற்றுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகள் இணைந்து மக்கள் நலனுக்கான கூட்டியக்கமாக உதயமானது. ஆனால் இந்த கூட்டியக்கத்தின் தொடக்கத்திலேயே காந்திய மக்கள் இயக்கம் கழன்று கொண்டது.

பின்னர் 5 கட்சிகளைக் கொண்ட கூட்டியக்கமாக இது செயல்பட்டு வந்த நிலையில் இதை அப்படியே சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மனித நேய மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டியக்கத்தில் இருந்து விலகியது.

திருவாரூரில்...

திருவாரூரில்...

இதனைத் தொடர்ந்து 4 கட்சிகளைக் கொண்ட தேர்தல் கூட்டணியை திருவாரூரில் அக்டோபர் 5-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ அறிவித்தார். அதேநேரத்தில் அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை தி.மு.க. ஒன்றிணைக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தி.மு.க.வுக்கு தூதுவிட்டிருந்தார்.

வைகோ நியமனம்

வைகோ நியமனம்

இதனால் தேர்தல் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. வைகோ அறிவித்தது போல திருவாரூரில் அக்டோபர் 5-ந் தேதி அதிகாரப்பூர்வமாக 4 கட்சி தேர்தல் கூட்டணி என அறிவிக்கப்படவில்லை. வரும் 23-ந் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக வைகோ நியமிக்கப்பட்டார்

கலகக் குரல் பாண்டியன்

கலகக் குரல் பாண்டியன்

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன், மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தை தேர்தல் கூட்டணியாக மாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடம்பெறாத கூட்டணியில்தான் இருப்போம். தி.மு.க. அணியில் காங்கிரஸ் இருந்ததால் கடந்த காலத்தில் அக்கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. தற்போது அ.தி.மு.க, பா.ஜ.க. இடையே கூட்டணி அமையும் என்கிறார்கள்.. இதுவரை அதிகாரப்பூர்வமாக அப்படி எதுவும் அமையவில்லை.

மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் என்பது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும்வரை நீடிக்கும். இதற்கும் தேர்தலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனக் கூறி மக்கள் நலனுக்கான கூட்டியக்கம், தேர்தல் கூட்டணியாக மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இ.கம்யூவில் போர்க்கொடி

இ.கம்யூவில் போர்க்கொடி

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயும் மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தின் தேர்தல் வெற்றி குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய கட்சிகளுடனான உறவை முற்றிலும் துண்டித்துக் கொள்வதையும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

முத்தரசன் மழுப்பல்

முத்தரசன் மழுப்பல்

தா. பாண்டியனின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் தேர்தலுக்கான கூட்டணியாக மாறுமா? மாறாதா? என்பது வரும் 23-ந் தேதியன்று தெரிவிப்போம். தற்போதுவரை மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் 'இயக்கமாகத்தான் இருக்கிறது. கூட்டணியாக உருமாறவில்லை. ஆகையால் தா. பாண்டியனின் கருத்து சரிதான் என்று மழுப்பலான பதிலளித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்துள்ள இந்த கலகக் குரல் வைகோ உள்ளிட்ட மக்கள் நலனுக்கான கூட்டியக்கத் தலைவர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Senior CPI leader D Pandian has opposed the PWF to become an electoral alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X