For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரானைட், தாதுமணல் கொள்ளையில் அதிமுக, திமுகவுக்கு சமபங்கு உண்டு: ராமதாஸ் குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் கொள்ளையாக இருந்தாலும் சரி, தாதுமணல் கொள்ளையாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை வேடிக்கை பார்ப்பதாக இருந்தாலும் சரி அதில் அதிமுக, திமுகவுக்கு ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் சமபங்கு உண்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மதுரையில் முழு கிரானைட் மலையையே மறைக்க முயன்றிருக்கிறார் ஜெயலலிதா. கிரானைட் ஊழலை மூடி மறைக்கத் துடிக்கும் ஜெயலலிதா, அந்த ஊழலில் தமது அரசு நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியிருகிறார். அவரது இந்த மலையளவு பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள்.

 Ramadoss allication on DMK and ADMK

மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,‘‘ முந்தைய திமுக ஆட்சியில் தான் அதிக அளவில் கிரானைட் கொள்ளை நடைபெற்றது. கிரானைட் கொள்ளை குறித்த சட்ட ஆணையர் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் இந்த கருத்தில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் நிறைந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கிரானைட் கொள்ளை பெருமளவில் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

அதேநேரத்தில் அதிமுக ஆட்சியில் கிரானைட் கொள்ளையே நடக்கவில்லை என்பதையோ, சட்ட ஆணையர் சகாயம் குழு அறிக்கையின் அடிப்படையில் அதிமுக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையைக் கூற வேண்டுமானால் கிரானைட் கொள்ளை குறித்த விசாரணையை முடக்கி, குற்றவாளிகளை காப்பதில் தான் அதிமுக அரசு தீவிரம் காட்டியது.

2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்றதும் கிரானைட் கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது உண்மை தான். அதற்கு காரணம் கிரானைட் கொள்ளையர்களுக்கும், அதிமுக மேலிடத்திற்கும் இடையிலான கொடுக்கல் & வாங்கல் தகராறு தானே தவிர, கிரானைட் கொள்ளையை தடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. அதிமுக அரசின் நடவடிக்கைகள் தீவிரமடைந்த பின்னர், கிரானைட் நிறுவன உரிமையாளர்கள் அதிமுக மேலிடத்தின் கோபத்தை உரிய முறையில் தணித்தனர். அதன்பின்னர் கிரானைட் கொள்ளையர்கள் மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க சகாயம் குழுவை அமைத்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது, அதை ஏற்க மறுத்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அம்மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், சகாயம் தலைமையில் குழுவை அமைக்காமல் தமிழக அரசு தாமதம் செய்ததால், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கிரானைட் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதா அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், சகாயம் குழு அறிக்கை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கிரானைட் கொள்ளை பற்றி சி.பி.ஐ&யின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட சகாயம் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அந்தக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.

அதன்பின் இந்த வழக்கு 3 முறை விசாரணைக்கு வந்த போதிலும் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் மவுனம் கடைபிடித்து வருகிறது. உண்மை இவ்வாறு இருக்கும் போது, சகாயம் குழு அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறுவது கலப்படமற்ற பச்சைப் பொய் ஆகும்.

கிரானைட் கொள்ளையரை காப்பதில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான். இதற்குக் காரணம் கிரானைட் கொள்ளைக்கு அடித்தளம் அமைத்தவர்களே இந்த இருவர் தான்.

கிரானைட் கொள்ளையாக இருந்தாலும் சரி, தாதுமணல் கொள்ளையாக இருந்தாலும் சரி, ஜல்லிக் கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை வேடிக்கை பார்ப்பதாக இருந்தாலும் சரி அதில் அதிமுக, திமுகவுக்கு சமபங்கு உண்டு. இந்த துரோகத்திலிருந்து அவர்கள் தப்ப முடியாது. அவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அவர்களுக்கான தண்டனையை மே 16 ஆம் தேதி வழங்குவார்கள். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Pmk founder Ramadoss allication on DMK and ADMK partie's
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X