For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி ரத்து.. குலக்கல்விக்கே வழி வகுக்கும்.. ராமதாஸ் கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்தால் அது குலக்கல்வி முறைக்கே வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர் ராம்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் ரத்து செய்யப் போவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார். இந்தியாவின் சமூக, பொருளாதார சூழல் குறித்த புரிதலின்றி இத்தகைய முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Ramadoss statement about Cancels of compulsory passing in schools

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்காக மத்திய அமைச்சர் கூறும் காரணங்கள் பொருத்தவற்றவை. அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிப்பதால் தான் கல்வித்தரம் குறைந்து விட்டதாக மத்திய அரசு கூறுகிறது. இத்தகைய கட்டாயத் தேர்ச்சி முறை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நீண்ட காலமாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடைமுறையில் இருந்து வருகிறது.

எனினும், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி சட்டப்பூர்வமாக்கப் பட்டது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இத்தேர்ச்சி முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், கல்வித்தரம் குறைந்து விட்டதாக அதற்குள்ளாகவே மத்திய அரசு எவ்வாறு கண்டறிந்தது என்பது தெரியவில்லை. இதற்காக மத்திய அரசு ஏதேனும் ஆய்வு நடத்தியதா, அதற்காக என்ன அளவுகோலை பயன்படுத்தியது? என்பதை அரசு விளக்க வேண்டும்.

கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யும் விஷயத்தில் மத்திய அமைச்சர் கூறியுள்ள சில கருத்துக்கள் மிகவும் மோசமானவை. ''பெரும்பாலான அரசு பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளே நடத்தப் படுவதில்லை. கிட்டத்தட்ட மதிய உணவுப் பள்ளிகளாகவே அவை இயங்குகின்றன. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பிறகு வீட்டுக்கு சென்று விடுகின்றனர்'' என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார். ஏழை மாணவர்களை இதை விட மோசமாக கொச்சைப்படுத்த முடியாது. கர்மவீரர் காமராசரும், எம்.ஜி.ஆரும் இந்த கோணத்தில் சிந்தித்திருந்தால் கல்வியில் தமிழகம் முன்னேறி இருக்க முடியாது. தேசிய அளவில் மதிய உணவுத்திட்டம் என்ற உன்னதத் திட்டம் வந்திருக்க முடியாது.

மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள உலகத்தைப் பார்க்காமல், மேல்தட்டில் உள்ள பணக்காரர்களின் உலகத்தை மட்டும் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் அப்படித் தான் இருக்கிறது என்று நினைப்பதன் விளைவு தான் இதுபோன்ற விசித்திரமான சிந்தனைகள் ஏற்படுகின்றன. கல்வித் தரத்தைப் பற்றிக் கவலைப்படுவதற்கு முன்பாக அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான ஒரு கருவி தான் மதிய உணவுத் திட்டமாகும். இந்தியாவில் பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க முடியாததால் தான் பள்ளிகளுக்கு அனுப்புகின்றன என்பது உண்மை தான்.

அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அழைத்து வரும் முயற்சியே இன்னும் வெற்றி பெறவில்லை. அந்த முயற்சி வெற்றி பெற்ற பிறகு கல்வித் தரத்தை மதிப்பிடுவது குறித்து சிந்திக்கலாம். மாறாக, ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்தால் இப்போதுள்ள மாணவர்களில் 25 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பள்ளிகளுக்கு வருவதையே நிறுத்தி விடுவர். இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 5 அல்லது 8 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தால் அதன்பின் அவர்களை தொடர்ந்து படிக்க குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். மாறாக மாணவர்கள் அவர்களின் பெற்றோர் செய்யும் தொழிலுக்கு உதவியாக அனுப்பி வைக்கப்படுவர். மாணவிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படும். இவ்வாறாக மத்திய அரசின் கட்டாயத் தேர்ச்சி ரத்து திட்டம் குலக்கல்வி முறைக்கும், குழந்தை திருமண முறைக்கும் தான் சமூகத்தை இட்டுச் செல்லும்.

Recommended Video

    Anbumani Ramadoss Slammed Tamil Nadu Government-Oneindia Tamil

    பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்வதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும் என்பது ஏற்க முடியாத ஒன்று. உலகின் தலைசிறந்த கல்வி முறையைக் கொண்டுள்ள பின்லாந்தில் ஏழு வயதில் பள்ளிக்கல்வியைத் தொடங்கும் மாணவர்களுக்கு 13 வயது வரை எந்தத் தேர்வு நடத்தப்படுவதில்லை. 16 வயதில் தான் முறைப்படியான தேர்வை அவர்கள் எழுதுகின்றனர். அந்த நாட்டில் தான் ஐரோப்பாவிலேயே அதிகபட்சமாக 66% மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்கின்றனர்.

    இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யும் முடிவைக் கைவிட்டு, வேறு வழிகளில் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    English summary
    pmk chief Dr.Ramadoss statement about Cancels of compulsory passing in schools
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X