For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'எத்தை தின்றால் பித்தம் தெளியும்'.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்ப சதி:ராமதாஸ் குற்றச்சாட்டு

மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் சிலரது சதியால் சீர்குலைய அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: 'எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான சில சக்திகள் எப்படியாவது இந்த போராட்டத்தை தடம் புரளச் செய்துவிட வேண்டும் எனத் துடிக்கின்றனர் என்று பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும், தமிழர்களின் கலாச்சார எதிரியான பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கட்டுப்பாட்டிற்கு உதாரணமாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தை திசை திருப்புவதற்கு சில சீரழிவு சக்திகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 Ramadoss support for students protest for jallikattu

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முதலிலும், அதன்பின்னர் சென்னை மெரினாவிலும் தொடங்கிய மாணவர் போராட்டங்கள் இன்று மக்கள் போராட்டமாக மாறி தமிழகம் முழுவதும் விரிவடைந்துள்ளன. தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் அறவழிப் போராட்டங்கள் நடப்பதையும், அதில் மகளிர், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்பதையும் பார்க்க முடிகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் பெரும் வெற்றி பெற்றதற்கு காரணம், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அமைதியாக நடத்தப்படுவது தான்.

வழக்கமாக சில நூறு பேர் கூடினாலே உற்சாக மிகுதியில் சில வன்முறைகள் நடப்பது வாடிக்கையாகி விட்ட சூழலில், சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியும் சிறு சலசலப்பு கூட இல்லாமல் போராட்டம் தொடர்கிறது. மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் எந்த இடையூறுமின்றி போக்குவரத்து நடைபெறுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையினருக்கு மாணவர்கள் உதவுகின்றனர்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களும் அமைதி மற்றும் எழுச்சியின் வடிவமாக அமைந்திருக்கின்றன. அரிதிலும் அரிதாக காவல்துறையினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மாணவர்களின் போராட்ட அணுகுமுறையை தமிழக காவல்துறை வெளிப்படையாக பாராட்டியிருக்கிறது. இவையெல்லாம் கடந்த காலங்களில் நிகழ்ந்த போராட்டக்களங்களில் பார்க்க முடியாத ஒன்றாகும். இந்த பெருமைகள் அனைத்தும் மாணவர்களையே சேரும்.

ஆனால், அழகிய ஓவியத்தின் நடுவே கருப்பு மையை சிதற விட்டது போல சில இடங்களில் சில நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. மதுரை வைகை பாலத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கோவை, நாகர்கோவில் பயணிகள் ரயிலை சிலர் தடுத்து நிறுத்தினர். ரயில் முற்றுகைப் போராட்டம் இரவைத் தாண்டி இன்றும் நீடிப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதேபோல், திண்டுக்கல்லிலும் ரயில்கள் மறித்து நிறுத்தப்பட்டதால் தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. சேலத்திலும் ரயில்களை மறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. சேலத்தில் நடந்த போராட்டத்தின் போது லோகேஷ் என்ற மாணவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார். ஒரு சில இடங்களில் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் வெற்றிக்கு காரணமே யாருக்கும் பாதிப்பில்லாதவாறு நடத்தப்படுவது தான். மாணவர்களின் இந்த போராட்டத்தால் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருவோருக்கும், இந்தப் போராட்டத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் ஈட்ட முயன்று தோல்வியடைந்த சக்திகளுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெறுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.

'எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் உள்ள அந்த சக்திகளும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான சில சக்திகளும் எப்படியாவது இந்த போராட்டத்தை தடம் புரளச் செய்துவிட வேண்டும் எனத் துடிக்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு உள்ள நற்பெயரை கெடுத்து விட்டால் போராட்டத்தை வீழ்த்தி விடலாம் என்ற தீய நோக்குடன், தங்கள் ஆதரவாளர்களை மாணவர்கள் மத்தியில் ஊடுருவச் செய்து போராட்டத்தை திசை திருப்புவதற்கு முயல்கிறார்களோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

'ஆயிரம் கைகூடி அமைந்ததாம் மண்டபம்... ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம்' என்பதைப் போல மாணவச் செல்வங்களில் அமைதி, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றால் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் சிலரது சதியால் சீர்குலைய அனுமதிக்கக் கூடாது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை காவல்துறையினர் கடத்திச் சென்று தாக்கினர், மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை தாக்கி கலைக்க திட்டம், காவல்துறை தாக்குதலில் மாணவர்கள் சாவு என்றெல்லாம் பரப்பப்படும் வதந்திகளை மாணவர்கள் நம்பக் கூடாது.

ஜனவரி 16-ம் தேதி தொடங்கி இன்று வரை 5 நாட்களாக யாருக்கும் பாதிப்பில்லாமல் எவ்வாறு போராட்டம் நடைபெறுகிறதோ, அதே அணுகுமுறை நீடிக்க வேண்டும். ரயில் மறியல், பேருந்து மறியல் உள்ளிட்ட செயல்களில் மாணவர்கள் ஒருபோதும் ஈடுபடக் கூடாது. மாணவர்கள் தொடங்கிய எந்த போராட்டமும் வெற்றி பெறாமல் இருந்ததில்லை. அதைப்போலவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டமும் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK chief Ramadoss support for students, youths protest for jallikattu in various place in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X