For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் செய்தது ஜெயலலிதா... மக்களுக்கு தண்டனையா? கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் செய்த ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக நலத்திட்டங்களை முடக்கிவைத்து மக்களுக்கு தண்டனை தருவது எப்படி நியாயமாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா முதல்வராக வந்து கொடியசைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகளில் 460 புதிய பேருந்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 260 பேரூந்துகள், ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பிறகு தான் இயக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிமனைகளில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 06.03.2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன். 6 மாதங்களாக அந்த பேரூந்துகள் இயக்கப்படாததால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2.88 கோடி இழப்பும், ரூ.58.50 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக முடங்கிக் கிடக்கும் பேருந்துகள் தொடர்பாக வாரமிருமுறை இதழ் ஒன்றில் அண்மையில் செய்திக் கட்டுரை வெளியாகிருந்தது.

அமைச்சரின் விளக்கம்

அமைச்சரின் விளக்கம்

கோடிக்கணக்கில் செலவழித்து வாங்கப்பட்ட பேரூந்துகள் பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி அப்பத்திரிகையின் செய்தியாளர் எழுப்பிய வினாவுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில்,‘‘ 10 பேருந்துகள் வேலை முடிந்ததும் பயன்பாட்டுக்கு அனுப்பிவிட முடியாது. குறைந்தது 400 பேருந்துகள் தயாரானாலே அவற்றை பயன்பாட்டுக்கு அனுப்பிவிடுவோம். எங்கள் மீது ஏதாவது குற்றச்சாற்றுகளை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிற்சங்கத்தினர் இப்படி சொல்கிறார்கள். இதில் உண்மை இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வெறும் 10 பேரூந்துகள் மட்டுமே இயக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் தரப்பு முயன்றிருக்கிறது. இது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.

முடக்கப்பட்ட பேருந்துகள்

முடக்கப்பட்ட பேருந்துகள்

மார்ச் மாதத் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் 260 பேரூந்துகள் மட்டுமே முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 15.04.2015 நிலவரப்படி மொத்தம் 430 பேரூந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் இருநூறுக்கும் அதிகமான பேரூந்துகள் கடந்த ஆகஸ்ட் முதல் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

பழுதடைந்த புதிய பேருந்துகள்

பழுதடைந்த புதிய பேருந்துகள்

கும்பகோணம் கோட்டத்துடன் இணைக்கப்பட்ட பணிமனைகளில் மட்டும் 51 பேரூந்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழையிலும், வெயிலிலும் பராமரிக்கப்படாமல் கிடப்பதால் பழுதடைந்து வரும் அப்பேருந்துகள் இன்னும் சில மாதங்களில் ஓடும் திறனை இழந்துவிடும்.

4.64 கோடி இழப்பு

4.64 கோடி இழப்பு

மொத்தம் 460 பேரூந்துகள் 2 முதல் 9 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கான வட்டி, காலாண்டு வரி, தேய்மானம் ஆகிய வகையில் மட்டும் சுமார் ரூ.4.64 கோடி இழப்பும், ரூ.91.35 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை; விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேருந்துகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் போதிய நிதி இல்லாதது தான் என்று கூறப்படுகிறது.

ஜெ.வுக்காக காத்திருப்பதா?

ஜெ.வுக்காக காத்திருப்பதா?

இத்தகைய சூழலில் தயார் நிலையில் உள்ள பேருந்துகளை இயக்கி வருவாய் ஈட்டுவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற பிறகு தான் இயக்குவோம் என்று அடம்பிடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

முடங்கிய திட்டங்கள்

முடங்கிய திட்டங்கள்

சென்னை பெருநகரத் தொடர்வண்டித் திட்டம், சென்னை கோயம்பேடு தானியச் சந்தை வளாகம், தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள், செயல்படுத்தி முடிக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் என பல்லாயிரக்கணக்கான திட்டங்கள் ஜெயலலிதாவுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு தண்டனையா?

மக்களுக்கு தண்டனையா?

ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா தான். அதற்கான தண்டனையை அவர் தான் அனுபவிக்க வேண்டும். அதை விடுத்து மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்கி அவர்களைத் தண்டிப்பது சரியல்ல. மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் நடத்தும் துதிபாடல்கள் மற்றும் ஊழல்களுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கடும் தண்டனை வழங்குவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
PMK leader S. Ramadoss on Friday urged the State government to operate all the 460 buses acquired for the eight divisions of the state transport corporations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X