For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்வி பெறும் உரிமைச் சட்டம்.. மதிக்காத பள்ளிகளுக்கு வெகுமதி அளிக்க துடிப்பதா?: ராமதாஸ் காட்டம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மதிக்காத தனியார் பள்ளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி அளிக்க தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Right to education act: Ramadoss condemns TN govt.'s action

தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி மாணவர்களைச் சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்துவதற்காக ரூ 97.05 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதற்காக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தெளிவில்லாமலும், குழப்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

கல்வி பெறுவதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் அப்பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலுள்ள நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை இந்தச் சட்டம் இன்று வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக பணக்கார மாணவர்களைக் கொண்டு இந்த இடங்களை நிரப்பும் தனியார் பள்ளிகள், அவ்வாறு சேர்க்கப்பட்ட அனைவரும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று ஆவணங்களில் பதிவு செய்துவிடுகின்றன. இந்த மோசடியை புள்ளிவிவரங்களுடன் நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். ஆனால், தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக செயல்படும் தமிழக அரசு இன்று வரை, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ, சேர்க்கையை முறைப்படுத்தவோ முன்வரவில்லை.

இந்த நிலையில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் சுமார் ரூ.150 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை என்றும், இதனால் நடப்பாண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் மாணவர்களைச் சேர்க்கப் போவதில்லை என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசுக்கு மிரட்டல் விடுத்தன.

இதையடுத்து கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்த்ததற்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.97.04 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்யும்படி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5ஆம் தேதி கடிதம் எழுதினார். ஆனால், அக்கடிதத்தை மத்திய அரசு பொருட்படுத்தாத நிலையில், தமிழக அரசே அதன் சொந்த நிதியிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு ரூ.97.05 கோடியை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 2013&14 ஆம் ஆண்டில் 49,864 மாணவர்களும், 2014&15 ஆம் ஆண்டில் 86,729 மாணவர்களும் சேர்க்கப்பட்டதாகவும், இதற்காக முறையே ரூ.25.14 கோடியும், ரூ. 71.91 கோடியும் வழங்கப்பட இருப்பதாகவும் கடந்த 16.05.2015 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 102&ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் எண்ணிக்கை தனியார் பள்ளிகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலானது தானே தவிர, அரசு அமைப்பால் தணிக்கை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது அல்ல.

கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களைச் சேர்த்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த 25% ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினருக்கு பதிலாக பணக்கார மாணவர்களை சேர்த்து தவறாக கணக்குக் காட்டப் பட்டிருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாற்றுகள் எழுந்து வரும் நிலையில், அவற்றை புறக்கணித்துவிட்டு தனியார் பள்ளிகள் தந்த விவரங்களை அப்படியே ஏற்று பணம் வழங்கக்கூடாது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் தவறாக கணக்கு காட்டி சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர்களுக்காக அரசும் கட்டணம் செலுத்துவது தவறாகும்.

அதுமட்டுமின்றி, கல்வி பெறும் உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கைத் தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. உதாரணமாக 2013&14 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின்படி 1.43 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்களில் 11% (15,730 ) மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதாக அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 31%(44,330) மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதாக மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை தெரிவித்திருந்தார். ஆனால், இந்த இரு புள்ளி விவரங்களுக்கும் தொடர்பின்றி 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக அரசு கூறுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல், 2014&15 ஆம் ஆண்டில் 2,959 மாணவர்கள் இந்தச் சட்டப்படி சேர்க்கப்பட்டதாக தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன; 89,941 பேர் சேர்க்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு பொருந்தாத வகையில் 86,729 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக எந்த அடிப்படையில் அரசு கூறுகிறது என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, ஒன்றாம் வகுப்பு முதல் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்; அப்போதிலிருந்து தான் தனியார் பள்ளிகளுக்கு பணம் வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி மழலையர் வகுப்புகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கு பணம் வழங்குவது சரியல்ல. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மதிக்காத தனியார் பள்ளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி அளிக்க தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே, கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் நடந்ததாக கூறப்படும் மாணவர் சேர்க்கை குறித்து நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அடங்கியக் குழுவைக் கொண்டு விரிவானத் தணிக்கை நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss has condemned the TN government for longing to pay the private schools that flout right to education act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X