For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா பெயரைச் சொன்னாலே கொந்தளிக்கும் மக்கள்!- ஆர்கே நகர் களத்தில் ஒன் இந்தியா!

Google Oneindia Tamil News

இந்தியாவே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்கே நகர் தொகுதி மக்கள் மனதில் என்ன இருக்கிறது? தொகுதியை வலம் வந்தோம்.

ஆர்கே நகர் தொகுதி ஒரு அறிமுகம்

ஆர்கே நகர் தொகுதி ஒரு அறிமுகம்

தொகுதி முழுக்கவே கடல் வாசனை தான். தொகுதியின் எந்த இடத்தில் இருந்தும் கடல் நடைதூரம் தான். எல்லா தரப்பு மக்களும் கலந்திருக்கும் சென்னைத் தொகுதிகளுக்கு சளைத்ததில்லை ஆர்கே நகர். வசதியான வணிகர்கள், நடுத்தர வர்க்கம், அடித்தட்டு மக்கள் என்று எல்லா தரப்பு மக்களும் வசிக்கிறார்கள். முக்கியமாக மீனவர்களும் கூலித்தொழிலாளர்களும் தான் அதிகம். சாதி ரீதியாக கணக்கெடுத்தாலும் அப்படித்தான்... தண்டையார்பேட்டை பகுதியில் மீனவர்களும், நேரு நகர் நேதாஜி நகர் பகுதிகளில் இசுலாமியர்களும், புது மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தெலுங்கு பேசும் மக்களும், எழில் நகர் பகுதியில் நாடார் சமுதாய மக்களும் என்று நான்கைந்து சமுதாய மக்களை உள்ளடக்கியிருக்கிறது ஆர்கே நகர்.

பிரச்னைகள்

பிரச்னைகள்

மக்களின் முக்கிய பிரச்னை தண்ணீர். வாரத்துக்கு இரண்டு நாட்கள் கூட வருவதில்லை. அதிலும் சாக்கடை தண்ணீர் கலந்து தொற்று நோய் பரவும் அபாயத்துடனேயே காலத்தை கழிக்கின்றனர். பெரும்பாலானோரின் வாழ்வாதாரமான மீன் பிடித்தொழிலும் கூலி வேலையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. லோடு பிரச்னையால் கூலி வேலை குறைந்துகொண்டே இருக்கிறது. ஆயில் கொட்டி மீன் விற்பனை பாதிக்கப்பட்டதால் மீனவர்களுக்கும் அவதி.

அடுத்து முதியோர் ஓய்வூதியத் தொகை பிரச்னை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியில் வழங்கி மூதாட்டிகளை அலைக்கழிக்கின்றனர் அதிகாரிகள் என்று புலம்புகிறார்கள். எல்லா பகுதிகளைப் போலவே இங்கும் ரேஷன் பிரச்னை இருக்கிறது. அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களே பற்றாக்குறையாம். கிடைப்பதில்லை என்கிறார்கள்.

திமுகவுக்கு வாய்ப்பு

திமுகவுக்கு வாய்ப்பு

முதலில் கொருக்குப்பேட்டையில் நுழைந்தோம். ஒரு டீக்கடையில் முகமது என்பவர் நம்மை அடையாளம் கண்டு பேசினார். மளிகைக் கடை வைத்திருக்கிறார். ‘இங்கே அதிமுக வருமாங்கறதே தான். ஓபிஎஸ், தீபா ரெண்டு பேருக்குமே நல்ல சப்போர்ட் இருக்கு. தீபா என்னதான் தடுமாறினாலும் அம்மாவோட வாரிசை விட்டுக்கொடுக்கக் கூடாதுன்னு லேடீஸ் நினைக்கிறாங்க. திமுகவுக்கு ஆதரவு அதிகரிக்கவும் இல்லை. குறையவும் இல்லை. ஆனா அதிமுக ஓட்டுகள் பிரியறதால திமுக வர்றதுக்கு சான்ஸ் அதிகம் இருக்கு. ஆனா சசிகலாவுக்கு வெறுப்பு தான் அதிகம்,' என்றார்.

பிஜேபிக்கு டெபாசிட்டே கிடைக்காது

பிஜேபிக்கு டெபாசிட்டே கிடைக்காது

அருகில் வந்த ஆட்டோ டிரைவர், ‘இந்த முறை ஓட்டுப் போடவே இஷ்டம் இல்ல சார். நாம எப்பவுமே கட்சி பார்த்து ஓட்டு போடறது இல்லை. இங்கே நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. கழிவு நீர் பிரச்னையை யாருமே கண்டுக்கலை. கட்டின ஹாஸ்பிடல தொறக்காம வெச்சிருக்காங்க. இப்ப தேர்தல் வந்ததால் இன்னும் ரெண்டு மாசம் ஆகும்...' என்று ஆதங்கப்பட்டார்.

பழனி என்பவர் ‘அதிமுகவுக்கு அம்மாவுக்கு விழுந்த அளவுக்கு ஓட்டு விழாது சார். சசிகலா மேல அவ்வளவு வெறுப்பு. ஜெயலலிதா சாவுல இன்னும் சந்தேகம் இருக்கு. மர்மங்கள் எல்லாம் வெளில வரணும். மக்களுக்கு தெளிவுபடுத்தணும். ஓபிஎஸ்சும் தீபாவும் ஒண்ணா நின்னுருக்கணும். அப்ப ஓட்டு பிரியாது. சிதறாது. ஸ்ட்ராங்கா ஜெயிச்சுருக்கலாம். தீபாவுக்கு அரசியல் அனுபவம் இல்லை. ஓபிஎஸ் காட்டுற வழில கொஞ்ச நாள் போறது தான் அவங்களுக்கு நல்லது. ஆனா ஒண்ணு இவங்களை தவிர இந்த பிஜேபிலாம் டெபாசிட்டே தாங்காதுங்க' என்று சிரித்தார்.

பழைய வண்னாரபேட்டை பகுதியில் நிறைய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உட்கார்ந்திருந்தனர். தேர்தல் பற்றி பேசினால் விரக்தியை வெளிப்படுத்தினர். இன்பரசு என்பவர் ‘யார் வந்தா என்ன சார். எங்களுக்கு இன்னிக்கு வேலை இல்லை. இப்படிதான் டெய்லி ஆவுது. அம்மா இருந்த வரைக்கும் அவங்க நல்லது பண்ணுவாங்ககற நம்பிக்கை இருந்துச்சு. அவங்க கதையையும் முடிச்சுட்டாங்க. ஒரு பக்கம் வேலை இல்லை. இன்னொரு பக்கம் வெலவாசி ஏறுது. என்னத்த சொல்றது' என்றார். சம்பத் என்பவர் ‘என் ஓட்டு ஓபிஎஸ்சுக்கு தான். அரசியல் தெரியாதவங்க அரசியலுக்குள்ள வரக்கூடாது. அதுக்குள்ளயே தடுமாறுறாங்க. மூத்தவர் ஓபிஎஸ்சையே மதிக்க மாட்றாங்க. அதனால தீபாவுக்கு ஓட்டு போட மாட்டேன். ஓபிஎஸ்சுக்கு தான்'.

பழைய வண்ணாரப்பேட்டையில் காய்கறிக்கடையில் பெண்கள் சிலரை சந்தித்தோம். லதா என்பவரும் கலாவதி என்பவரும் சசிகலாவுக்கு எதிராக பொங்கி விட்டனர். 'பத்தாயிரம் ரூபாய் என்ன லட்சம் ரூபாய் கொடுத்தாலும் சசிகலாவுக்கு ஓட்டுப் போட மாட்டோம். சுயேட்சைக்கு கூட ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்போம். சசிகலாவை விரட்டணும். எங்க அம்மாவை அநியாயமா கொன்னுட்டாங்கப்பா' என்று கண்ணீர் விடுகின்றனர்.

இன்னும் சில பெண்களை தண்டையார்பேட்டையில் சந்தித்துப் பேசினோம். வரலட்சுமி என்பவர் ‘மாற்றம் வரணும். போட்டி போடறவங்க யாருமே எங்க தொகுதிக்கு நல்லது பண்ணலை. புது வேட்பாளர்னா என் ஓட்டு அவங்களுக்கு தான்' என்று பொங்கினார்.

காமாட்சி என்பவர் ‘எல்லாரும் அரசியலுக்கு அனுபவம் இருந்தா வந்தாங்க. உள்ள வந்து கத்துக்க வேண்டியது தான். நமக்காக தன்னோட வாழ்க்கையையே இழந்தவங்க அம்மா. அவங்க குடும்பத்துலருந்து ஒருத்தங்க வரட்டுமே... காசு கொடுத்தா வாங்கிட்டு தீபாவுக்கு ஓட்டு போடுவோம்' என்று சொன்னார்.

English summary
Oneindia Tamil's spot report of RK Nagar voters opinion about their candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X