For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாகக் கையாண்டது: ஆளுநர் ரோசய்யா புகழாரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தொற்று நோய் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பதினான்காவது சட்டமன்றப் பேரவையின் 2016 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடரை ஆளுநர் ரோசய்யா தொடங்கி வைத்து, ஆளுநர் ரோசய்யா உரையாற்றிப் பேசினார்.

Rossaiah listed Tamilnadu government take steps for its growth

அந்த உரையின் முக்கிய அம்சங்கள்:

• பதினான்காவது சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத்தொடர் என்ற முறையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களையும், ஆழ்ந்த கருத்துக்களையும் வழங்கி, இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் ஆற்றிய அரும் பணியை, பதிவு செய்யும் வகையில் இந்தக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

•முதல்வர் ஜெயலலிதாவின் ஆற்றல்மிகு சீரிய தலைமையின் கீழ் 2011 ஆம் ஆண்டு மே திங்களில், இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், மக்கள் நலம் பேணுவதையே அரசு கொள்கைகளின் அடித்தளமாகக் கொண்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலனளிக்கக்கூடிய வகையில் எண்ணற்ற பல சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பலனாக அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நலத்திட்டங்களைத் திட்டமிட்டு செயலாக்குவதில் முன்னோடி மாநிலமாகவும், பிற மாநிலங்கள் பின்பற்றத் தக்க முன்மாதிரி மக்கள் நல அரசாகவும், தமிழக அரசு உருப்பெற்றுள்ளது என்பதை பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

•அண்மையில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில், ஜெயலலிதா வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரும் வெற்றியைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மாபெரும் வெற்றி, அறிவுக் கூர்மையும் மதிநுட்பமும் வாய்ந்த அவரது தலைமையின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

• சமுதாய சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கு, தமிழ்நாடு பெருமளவிலான நிதியைப் பயன்படுத்தி வருகிறது. கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுடன் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் உயர் செலவினங்கள் மூலம், நமது நாட்டில் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் உயர் அளவை நமது மாநிலம் எட்டியுள்ளது. வளர்ந்துவரும் பொருளாதார நாடுகள் எதிர்கொள்ளும் இரு முக்கிய சவால்களான வறுமையையும், வேலை வாய்ப்பின்மையையும் முழுமையாக அகற்றிட இந்த அரசு திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருகிறது.

•நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் வாயிலாகவும், திட்டங்களை ஒருங்கிணைத்தும், கிராமப்புறங்களிலும் நகர்ப்புரங்களிலும் காணப்படும் வறுமையைக் குறைக்க சிறப்பான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பின்மையைக் குறைக்கவும், மனிதவள ஆதாயத்தை முழுமையாகப் பயன்படுத்தவும், திறன்பெறாத இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கவும், படித்த இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், தேவையான பல்வேறு செயல் திட்டங்களுக்கு மாநில திறன் மேம்பாட்டு இயக்கம் அனுமதியளித்து நிதியை வழங்கி வருகிறது. மேற்கண்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண செயல்படுத்தப்படும் மத்திய அரசுத் திட்டங்கள், மாநிலத் திட்டங்களோடு நிதி ஆதாரங்கள் மற்றும் திட்டமிடல் ஆகிய இரண்டு வழிவகைகளிலும் திறம்பட ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

•வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் போது கடந்த நூறு ஆண்டு காலத்தில் பெய்திராத அளவிற்கு ஒரே நாளில் கொட்டித் தீர்த்த மழையுடன், குறுகிய காலகட்டத்தில் நான்கு முறை பெய்த தொடர் கனமழையினால், மிகக் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டு, சென்னையின் பெரும் பகுதிகளும், கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளும் வெள்ளத்தால் மூழ்கியதை அறிவீர்கள். பயிர்கள், கால்நடைகள், பொதுக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குப் பெரும் சேதத்தை இது விளைவித்ததோடு, மனித உயிரிழப்புகளையும் இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது.

•ஜெயலலிதாவின் திறமையான தலைமையின் கீழ் இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னேற்பாடுகளும் உயிரிழப்புகளைக் குறைக்க வழிவகுத்தபோதிலும், இந்தப் பெரும் வெள்ளம், கடுமையான வெள்ள பாதிப்பின் சுவடுகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

•மாநில அரசு துரிதமாகச் செயல்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இத்துடன், மத்திய அரசு அமைப்புகளுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு, வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக 7,244 நிவாரண முகாம்களைத் திறந்து, 23.51 லட்சம் நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1.36 கோடி உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்கு நான்கு நாட்கள் இலவசப் பேருந்துப் பயணம் அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் 1.54 கோடி பயணிகள் பெரும் பயன்பெற்றனர்.

•தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொடையாளர்களின் உதவிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, நிவாரணப் பொருட்களை அளிப்பதற்கான பணிகள் செவ்வனே மேற்கொள்ளப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் 36,840 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சென்னை மாநகரத்தில் வெள்ளத்திற்குப் பின் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்துவதற்கான மாபெரும் துப்புரவுப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

•இத்தகைய பெரும் பேரிடர் ஏற்பட்ட போதிலும், மாநில சுகாதாரத்துறையின் திறமையான நடவடிக்கைகளால் தொற்றுநோய் பரவ விடாமல் தடுத்தது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் திறம்படச் செயலாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, மொத்த மாநில நிர்வாகமும் இரவு பகலாக உழைத்தது என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

•ஜெயலலிதாவின் மதிநுட்பம் மிக்க தலைமையின் கீழ் செயல்படும் இந்த அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டு வந்தது. வெள்ளத்தின்போது சேதமான, பட்டா, கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள், எரிவாயு இணைப்பு அட்டைகள், ஆதார் அடையாள அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், விற்பனைப் பத்திரங்கள் போன்ற ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

•பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கூடுதல் சீருடைத் தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்தப் பெருவெள்ளத்திற்குப் பிறகு மக்களை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பச் செய்ய மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில், ஒற்றுமையுணர்வு, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தோடு தாமாகவே முன்வந்து உதவி செய்த எண்ணற்ற பொதுமக்களுக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு, எனது பாராட்டுதலைப் பதிவு செய்யவும் விரும்புகிறேன்.

•பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்த விவரங்களுடன் 8,481 கோடி ரூபாய் நிதியுதவி கோரி, நவம்பர் மாதம் 23 ஆம் நாள் முதற்கட்டமாக இந்த அரசால் மத்திய அரசுக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பை அளவிட மத்திய அரசால் மத்தியக்குழு உடனடியாக அனுப்பப்பட்டது. இதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் மீண்டும் பெய்த பெரும் மழையால் கூடுதல் சேதம் ஏற்பட்டது. இதனை பிரதமர் மோடி நேரடியாக ஆய்வு செய்து, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 2015 டிசம்பர் மாதம் 3 ஆம் நாளன்று, 1,000 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக வழங்கியது. இதற்காக மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

•இந்த வெள்ள பாதிப்பை மிகக் கடுமையான இயற்கைச் சீற்றமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளையும், மறுசீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்வதற்குத் தேவையான 17,432 கோடி ரூபாய் நிதியுதவி கோரி, கூடுதல் கோரிக்கை மனுவும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்புப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்வதற்காகக் கோரப்பட்ட நிதியுதவியை உடனடியாக அளித்திடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

•இத்தருணத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிய பல்வேறு மாநில அரசுகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் மற்றும் நல்லுள்ளம் கொண்டோரின் உதவியை நன்றியுடன் ஏற்று பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

•பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் கிடைக்கும் வகையில் நிவாரணத் தொகுப்பை மாநில அரசு அறிவித்து செயல்படுத்தியுள்ளது. சாலைகள், பாலங்கள், சிறு பாலங்கள், பாசனக் கட்டமைப்புகள், கட்டடங்கள் போன்ற பாதிக்கப்பட்ட பொதுக் கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் சரிசெய்வதற்காக 595.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

•குடிசைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், பகுதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அக்குடிசைகளில் வசித்த குடும்பங்களுக்குத் தலா 5,000 ரூபாய் நிவாரணமாக இந்த அரசு வழங்கியுள்ளது. மேலும், வீடுகளில் வெள்ளம் புகுந்து, உடைகள், பாத்திரங்கள் போன்ற தனிப்பட்ட உடமைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு, குடிசைகள் பாதிக்கப்பட்டு வெள்ளமும் புகுந்திருந்தால், மொத்தமாக 10,000 ரூபாயை நிதியுதவியாக இந்த அரசு வழங்கியுள்ளது. இந்த நிவாரண உதவி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாகச் சேரும் வகையில் அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே வழங்கியது இந்த அரசின் பாராட்டத்தக்க சாதனையாகும்.

•குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட 5 இலட்சம் குடும்பங்களுக்கு 273.10 கோடி ரூபாயும், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 25 இலட்சம் குடும்பங்களுக்கு 1,274 கோடி ரூபாயும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிர் இழப்பினால் பாதிக்கப்பட்ட 4,81,975 விவசாயிகளுக்கு 3.82 இலட்சம் ஹெக்டேர் பரப்பிற்கு, 451.15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை வெள்ள நிவாரணத்திற்காக மாநில அரசு 2,640 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. மாநிலத்தை வெள்ளம் பாதித்த மாநிலமாக அறிவித்திருப்பதால், பயிர்க் கடன்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைக் கடன்கள் உள்ளிட்ட இதரக் கடன் வசூலையும் ஒத்தி வைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

•குறிப்பிட்ட கால வரையறைக்குள் திட்டமிட்ட வகையில் நமது மாநிலம் உயர் வளர்ச்சியை எட்டச் செய்வதற்காக, தொலைநோக்குத் திட்டம் 2023 என்ற உயர் இலக்கைக் கொண்ட இலட்சியத் திட்டத்தை வடிவமைத்து செயலாக்கியது இந்த அரசின் பாராட்டத்தக்க சாதனைகளுள் ஒன்றாகும்.

•இத்திட்டத்தின்படி தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் போன்ற செயலாக்க அமைப்புகளும், அரசுத் துறை தனியார் பங்களிப்பு சட்ட விதிகள் போன்ற சட்டபூர்வ வரைமுறைகளும், தமிழ்நாடு கட்டமைப்பு நிதியம், தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மற்றும் செயற்திட்ட தயாரிப்பு நிதியம் போன்ற நிதி ஆதார அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

•கண்டறியப்பட்ட 217 திட்டங்களில், 84 திட்டங்களின் செயலாக்கம் வேகமாக நடந்து வருகிறது. பிற திட்டங்கள் பல்வேறு நிலையில் செயல் வடிவம் பெற்று வருகின்றன. கட்டமைப்புகளுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டும் வழிமுறைகளை அமைப்பு முறையில் ஒருங்கிணைக்கும் இத்தகைய சிறப்பு முயற்சி ஒரு மாநில அரசால் மேற்கொள்ளப்படுவது நமது நாட்டில் இதுவே முதன்முறையாகும் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

•கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், மாநிலத்தின் பகுதிகளுக்கிடையே காணப்படும் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகளைக் களைந்திட மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி என்ற நிதியத்தை இந்த அரசு அமைத்துள்ளது.

•இந்த நிதியம் மூலம் 105 பின்தங்கிய வட்டாரங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த சமச்சீர் வளர்ச்சி என்ற குறிக்கோளை எய்துவதற்காக, 230 கோடி ரூபாய் செலவில் 445 திட்டங்களுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக எளிதில் செல்லமுடியாத மலைப்பகுதிகளிலும், மிகவும் பின்தங்கிய பகுதிகளிலும் வாழும் மக்களையும் பயன்பெறச் செய்து, முக்கிய சமூகப் பொருளாதாரக் குறியீடுகளில் உள்ள இடைவெளியைக் குறைக்க வழி ஏற்பட்டுள்ளது.

•தமிழ்மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு இந்த அரசு எப்போதுமே உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதன்முறையாக, இசை மற்றும் கவின் கலைகளுக்கென தனிப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. தகுதி வாய்ந்த அறிஞர்களின் இலக்கியச் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்த் தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, ஜி.யூ. போப் விருது, அம்மா இலக்கிய விருது போன்ற பல விருதுகள் இந்த அரசால் நிறுவப்பட்டுள்ளன.

•புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளான ஏப்ரல் மாதம் 29 ஆம் நாளை ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் தினமாகக் கொண்டாட இந்த அரசு முடிவெடுத்துள்ளது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த அரசு பல நினைவிடங்களை அமைத்ததோடு, பல சிலைகளையும் நிறுவியுள்ளது.

•அறிவியல், மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலனில் உயர் பங்களிப்பாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை வழங்க இந்த அரசு முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. அவரது பிறந்த நாளான அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இளைஞர் எழுச்சி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது சாலப் பொருத்தமானது. ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடத்தை அமைப்பதற்காக 1.36 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

• இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பொறுப்பாக்காமல் நல்லிணக்கம் குறித்த சர்வதேசத் தீர்மானங்களையும், உணர்வுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் இலங்கை அரசின் போக்கினைக் கண்டு உலகெங்கிலும் உள்ள தமிழினம் வெகுண்டெழுந்துள்ளது. இதைத் தணிக்கும் விதமாக, அன்றைய இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள், ஜெனிவா ஒப்பந்த விதிமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசு எடுத்த தொடர் முயற்சி நினைவு கூறத்தக்கது.

• இலங்கைத் தமிழர்கள் மீது இத்தகைய கடுங் குற்றங்களைப் புரிந்தவர்கள் உரிய நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்று இன்றைய இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மாமன்றத்தில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கு அவர்களின் நிலங்களைத் திரும்ப அளித்து அவர்கள் சம வாழ்வுரிமையுடன் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டுமென இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

• பாக் நீரிணைப்புப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களின் படகுகளை சிறைப்பிடிக்கும் இலங்கைக் கடற்படையினரின் செயல்கள் கடும் கண்டனத்திற்குரியவையாகும். இந்த மீனவர்கள் விடுதலையான பின்னரும் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை விட மறுக்கும் இலங்கையின் போக்கு, பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு முடிவில்லாத் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

•கச்சத்தீவை மீட்டு, நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டி இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டியது நமது கடமையாகும். இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தினைக் கருத்தில் கொண்டு வெகு விரைவில் ஒரு இணக்கமான நிரந்தரத் தீர்வை எட்டிட மத்திய அரசும், இலங்கை அரசும் இணைந்து முயற்சி செய்யும் என நம்புகிறேன்.

•ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்காக சூரை மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த அரசு எடுத்து வரும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். பாக் நீரிணைப்புப் பகுதியில் மீன்பிடிப்பைக் குறைக்கவும், இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத ஆழ்கடல் மீன்வள ஆதாரங்களைப் பயன்படுத்தும் வகையில் ஆழ்கடல் மீன்பிடித் திறனை விரிவுபடுத்தவும், இந்த அரசால் கோரப்பட்டுள்ள 1,520 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் அதற்குத் தேவைப்படும் கட்டமைப்பிற்கான மொத்த நிதியுதவியை விரைந்து அளிக்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

•நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள், வாகனங்கள், ஆயுதத் தளவாடங்கள், கூடுதல் பணியிடங்கள், காவல் நிலையங்களுக்கான சொந்தக் கட்டடங்கள், காவலர்களுக்கான வீட்டுவசதி போன்ற கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மாநிலக் காவல்துறைக்கு இந்த அரசு வழங்கியுள்ளது. மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளதால் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப் பூங்காவாகத் தமிழகம் மாறியுள்ளது.

• குற்றச் செயல்கள் செய்பவர்களை கடுமையாகக் கையாள காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால், காவல் துறையினரின் ஊக்கம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மாநிலக் காவல்துறையின் தொடர் கண்காணிப்பு, உறுதியான நடவடிக்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலமாக சமூகவிரோத சக்திகள் ஒடுக்கப்பட்டு அனைத்து வகையிலான தீவிரவாதங்களும் தடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல்பாட்டினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. நமது மாநில காவல்துறை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, மக்களின் மனதில் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் உருவாக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

• மாநிலங்களுக்கிடையேயான பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகளில், மாநிலத்தின் சட்டபூர்வ உரிமைகளை நிலைநாட்டிட முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட அயரா முயற்சிகளும், அவற்றில் அவர் கண்ட வெற்றிகளும் நாம் அனைவரும் அறிந்தவையே. 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடி அளவிற்கு தமிழ்நாடு உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு, இத்தகைய பாராட்டத்தக்க வெற்றிகளுள் ஒன்றாகும்.

• தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில், 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு மாநில அரசு உயர்த்தியதற்கு, முதல்வர் ஜெயலலிதா எடுத்த ஒருங்கிணைந்த தொடர்முயற்சிகளின் பலனாகப் பெற்ற மேற்கூறிய தீர்ப்பே முழு காரணமாகும். அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்திற்கு நீர்மட்டத்தை மேலும் உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளையும் இந்த அரசு தொடங்கியுள்ளது.

• காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பினை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாணையாக 19.02.2013 நாளிட்ட அரசிதழில் மத்திய அரசு வெளியிடச் செய்து மாநிலத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகள் மகத்தானவையாகும். காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் தாமதமின்றி அமைக்க வேண்டுமென இந்த அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறது.

•நதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை, குறிப்பாக, மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-பாலாறு-காவேரி-வைகை மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த வேண்டுமென்ற தொடர் கோரிக்கையை இந்த அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.

•தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் ஏற்கெனவே சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ள பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டுமெனவும் இந்த அரசு கேட்டுக்கொள்கிறது. நாட்டின் நீர்வளத்தை உகந்த முறையில் பயன்படுத்திட மாநிலங்களுக்கிடையே பாயும் அனைத்து நதிகளும் முன்னுரிமை அடிப்படையில் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

•பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு உறுதியான, தெளிவான நிலைப்பாடுகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த வரியை நடைமுறைப்படுத்த அரசியல் திருத்தச் சட்ட முன்வடிவு கொண்டுவரப்படுவதற்கு முன்பாக, இழப்பீடு ஈடுசெய்யும் காலம், இழப்பினைக் கணக்கிடும் முறை, நிகர வருவாய் இழப்பு ஏற்படாத வரி அளவு, குறைந்தபட்ச வரி கட்டு, வரிவிலக்கு அளிக்க வேண்டிய பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான வரிவிதிப்பு முறை, இரட்டை நிர்வாகக் கட்டுப்பாடு குறித்த தெளிவு ஆகிய முக்கிய இனங்களின் மீது ஒருமித்த கருத்தை எட்டிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிதி சுயாட்சி மற்றும் நிரந்தர வருவாய் இழப்பு ஆகியன குறித்த மாநிலங்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

•பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதகமான சூழல் மாநிலத்தின் நிதிநிலையை மோசமாகப் பாதித்துள்ளது. இத்துடன், தொடர்ந்து வரும் பொருளாதாரத் தேக்க நிலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவால் பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் குறைந்து வருவது போன்ற பாதிப்புகளுடன், மத்திய அரசுத் திட்டங்களின் நிதிப் பங்களிப்பு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் மாநிலத்தின் நிதிச்சுமையை மேலும் கூடுதலாக்கியுள்ளன.

•எனினும், வளர்ச்சியிலும், பொருளாதார வளத்திலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை எட்டிட வேண்டும் என்ற நோக்கில், அனைத்து நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் மாநில அரசு தொடர்ந்து தொய்வின்றி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.

•சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு அம்மா திட்டம், இ-சேவை மையங்கள் மூலம் சேவைகளை வழங்குவது போன்ற பல்வேறு புதுமையான திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. நில உடமைப் பதிவுகளைக் கணினிமயமாக்குவதில் இந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளால் சென்னையில் வசிக்கும் மக்கள் இ-சேவை மையங்கள் மூலமாக கணினிவழிப் பட்டாக்களை விரைவில் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

•சேவைகள் மக்களைச் சிறப்பாகச் சென்றடையவும், திட்டங்களைத் திறம்படக் கண்காணிக்கவும், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பெற்று வரும் மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். அகண்ட இணையதள வசதிகளை அளித்து கிராம ஊராட்சிகளை தகவல் தொடர்பு வசதி மூலம் இணைப்பதற்காக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், மாநில நிர்வாகத்திலும், பொதுச் சேவைகளை மக்களுக்கு அளிப்பதிலும் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வருமென உறுதியாக நம்புகிறேன்.

• பொதுமக்களுக்கும் வருவாய்த் துறைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தி வருவாய் நிர்வாகத்தைத் தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பொதுச் சேவைகளை மேம்படுத்தவும் அவை எளிதில் கிடைக்கச் செய்யும் வகையிலும் இந்த அரசு புதிய வருவாய் வட்டங்களையும், வருவாய் கோட்டங்களையும் உருவாக்கியுள்ளது. பொதுச் சேவைகள் அளிப்பதை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட பல முன்னோடி முயற்சிகளில் விரைவு பட்டா மாறுதல் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகியன குறிப்பிடத்தக்கன. புதுமையான விரைவு பட்டா மாறுதல் திட்டத்தின் கீழ் இதுவரை 59 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

• பல்வேறு புதுமையான முயற்சிகள் மூலம் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால், 2006-2007 முதல் 2010-2011 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் உணவு தானிய உற்பத்தியில், மாநிலத்தில் எட்டப்பட்ட முந்தைய உயர் அளவான 82.64 இலட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சி, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக உற்பத்தி செய்து நமது மாநிலம் சாதனை படைத்துள்ளது.

•உயர்ந்த அளவு உணவு தானிய உற்பத்தியையும், பயறு உற்பத்தியையும் எட்டியதற்காக மத்திய அரசின் க்ரிஷி கர்மான் விருதை நமது மாநிலம் இருமுறை பெற்றுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டிலும் அதிகபட்ச சிறுதானிய உற்பத்தியை எட்டியதற்காக, இந்த விருதிற்கு நமது மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

•பண்ணை உற்பத்தித் திறனைஅதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும், தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான விரிவாக்கச் சேவைகள் அளித்ததற்காக, தேசிய மின் ஆளுமை தங்கப் பதக்கத்தையும் 2014-2015 ஆம் ஆண்டில் நமது மாநிலம் பெற்றுள்ளது. தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செம்மை நெல் சாகுபடி முறை, பயிர் பலவகையாக்கம், உயர் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் ஆகியவை மூலமாக நெல் உற்பத்தியில் 44 சதவீதமும், மக்காச் சோளம் உற்பத்தியில் 42 சதவீதமும், பயறு வகைகள் உற்பத்தியில் 45 சதவீதமும் சராசரி வேளாண் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது. இதனை உலக வங்கி பாராட்டியுள்ளதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

• சிறப்பாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலமாக சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் இந்த அரசு பெருக்கியுள்ளது. மிகப் பெரும் அளவில் கால்நடை பராமரிப்புத் துறைக்கான கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

•பால்வளத் துறைக்கு இந்த அரசு அளித்த முக்கியத்துவத்தின் மூலமாக மாநிலத்தின் பால் பதப்படுத்தும் கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பால் பண்ணைகளின் கட்டமைப்பு 593 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் வகையில் பெரம்பலூரில் புதிய பால் பதப்படுத்தும் நிலையம் ஒன்றை அமைக்க இந்த அரசு எடுத்துள்ள முயற்சியை நான் மனமாரப் பாராட்டுகிறேன். மேலும், தீவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் கோழி வளர்ப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இத்துறைக்கு மேலும் வலுசேர்த்துள்ளன.

•அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் இரண்டு கோடி குடும்பங்களுக்கு விலையில்லா அரிசியும், மானிய விலையில் பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெயின் விலை பெருமளவு உயர்ந்துள்ள போதும், பொது மக்களின் நலன் கருதி இப்பொருட்களை மிகக் குறைந்த விலையில் இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை உவகையோடு கொண்டாடும் வகையில் 1.91 கோடி அரிசி பெறும் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் 100 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியதற்காக முதல்வரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

•அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்குவதுடன், இந்த அரசு எடுத்த குறிப்பிட்ட சந்தை குறுக்கீடு நடவடிக்கைகள், பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் அடக்க விலையிலேயே மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளன. பண்ணை பசுமைக் காய்கறிக் கடைகள், அம்மா மருந்தகங்கள், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்ற இந்த அரசு எடுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகள் ஏழை எளியோருக்கு பயனளித்துள்ளதோடு பல பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.

•முதல்வரின் சிந்தையில் உருவான முன்னோடித் திட்டமான அம்மா உணவகத் திட்டம், மற்ற மாநிலங்களும் பின்பற்ற உகந்த திட்டமாக அனைவராலும் போற்றப்படுகிறது. இதுவரை திறக்கப்பட்டுள்ள 106 அம்மா மருந்தகங்கள் ஏழை எளியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. நாடெங்கிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவரும் இவ்வேளையில், நமது மாநிலத்தில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் குடும்பங்களை இவ்விலை உயர்விலிருந்து பாதுகாப்பதில் இம்முயற்சிகள் பெருமளவு உதவியுள்ளன.

• இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, மாநிலத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவி வந்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மின் உற்பத்தித் திட்டப் பணிகளை விரைவுபடுத்தி முடித்தும், நடுத்தரகால மற்றும் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்தும், முதல்வர் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளால் மாநிலத்தின் மின் உற்பத்தி உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு தற்போது மின் மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது.

•மாநில மின்வழித் தொகுப்பில் 7,485 மெகாவாட் உற்பத்தித் திறனை இந்த அரசு கூடுதலாகச் சேர்த்துள்ளது மனநிறைவளிக்கிறது. இந்த அரசின் முன்னோடிக் கொள்கையான சூரியஒளி மின் உற்பத்திக் கொள்கை, முதல்வரின் தொலைநோக்குப் பார்வைக்கு மேலும் ஒரு சான்றாகும். முதல்வரால் 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய சூரியஒளி மின் உற்பத்திக் கொள்கையின் பயனாக அண்மையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், 5,345 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தித் திட்டங்களுக்கான 35,356 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய முன்னோடி முயற்சிகளால், ஏற்கனவே நமது நாட்டிலேயே அதிக அளவிலான காற்றாலை மின் உற்பத்தித் திறனைப் பெற்றுள்ள தமிழகம், சூரியஒளி மின் உற்பத்தியிலும் முதன்மை மாநிலமாக உருவெடுத்திட இயலும்.

• நமது பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகளே உயிர்நாடியாகும். முதல்வரின் செயல்திறன்மிக்க தலைமையின் கீழ் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தி வலுப்படுத்துவதற்கு எப்போதுமே உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. புறவழிச் சாலைகள், வெளிவட்டச் சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் போன்றவற்றை அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சீரான வாகனப் போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

•கடந்த நான்கரை ஆண்டுகளில் விரிவான சாலை அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 14,841 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை மேற்கொள்ள இந்த அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன் 5,171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,169 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருவது இந்த அரசின் மேலும் ஒரு சாதனையாகும். சாலைப் பாராமரிப்பின் தரத்தை உயர்த்துவதற்கான மேலும் ஒரு முக்கிய முயற்சியாக, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் கோட்டங்களில் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

• குக்கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டமும் சுற்றுச் சூழலுக்கு உகந்த சூரியஒளி மின்வசதி கொண்ட முதல்வரின் பசுமை வீடுகள் திட்டமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

•முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் 5,940 கோடி ரூபாய் செலவில் மூன்று லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை மேம்பாடு போன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

• 2005 ஆம் ஆண்டு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, 120 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வுத் திட்டத்தின் முதல்கட்ட திட்டப் பணிகளைத் தொடர்ந்து, மேலும் 95 வட்டாரங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுவாழ்வுத் திட்டத்தின் இரண்டாவது கட்ட திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

•பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி ஆணையம் உதவியுடன் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சுனாமிக்குப் பிறகான நிலையான வாழ்வாதாரத் திட்டம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

•நமது நாட்டிலேயே மிக வேகமாக நகர்மயமாகி வரும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. வேகமான நகர்மயமாதலால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் வகையில், முதல்வரின் சீரிய தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அரசு, ஆண்டு தோறும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலான சென்னைப் பெருநகர வளர்ச்சி இயக்கம் மற்றும் 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலான ஒருங்கிணைந்த நகர்ப்பகுதி வளர்ச்சி இயக்கம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், நகர்ப்புரக் கட்டமைப்பை வலுப்படுத்த 2015-2016 ஆம் ஆண்டிலிருந்து உலக வங்கி உதவியுடன் 3,831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

•அம்ருத் திட்டத்தின் கீழ் 32 நகரங்களையும், திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் 12 நகரங்களையும் சேர்க்க வேண்டுமென்ற மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நகர்ப்புற கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான இந்த அரசின் முயற்சிகளுக்கு இத்திட்டங்கள் வலு சேர்க்கும் எனவும் நம்புகிறேன்.

•தமிழகத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் குறைத்திட, இந்த அரசு குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பல சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில், நாளொன்றுக்கு 468 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தித் திறனைக் கூடுதலாக இந்த அரசு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்க சாதனையாகும். பதினெட்டு நகராட்சிகளிலும், 23 பேரூராட்சிகளிலும் 579.77 கோடி ரூபாய் செலவில் பல்வேறு குடிநீர்த் திட்டங்களும், 680 குடிநீர் ஆதாரங்களுக்கு நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும் வகையிலான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

•இந்த அரசு மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளால் மாநிலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அளவு மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு ஏற்கெனவே இருந்த அளவிற்காவது உயர்த்த வேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறது.

•அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை எட்டிட சென்னை மற்றும் பிற மாநகரங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக, 11,344 வீடுகளையும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக 45,473 வீடுகளையும் கட்டுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிதியாண்டில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 12,500 வீடுகளும், பேரூராட்சிகளில் 20,000 பசுமை வீடுகளும் கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்குப் பின்னர் உடனடியாக 10,000 வீடுகளை ஒதுக்கீடு செய்து அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக முதல்வர் எடுத்த நடவடிக்கைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அவருடைய இத்தகைய முயற்சிகள், வீட்டு வசதி தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாங்கக்கூடிய விலையில் வீடுகள் கிடைக்கச் செய்து, சென்னை மாநகரத்தை குடிசைப் பகுதிகள் அற்ற மாநகரமாக மாற்றிட வழி ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

•கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் பயணிகள் சேவையை 29.6.2015 அன்று முதல்வர் தொடங்கி வைத்திருப்பதும், விரைவில் எஞ்சியுள்ள வழித்தடங்களிலும் பயணிகள் சேவை தொடங்கப்பட உள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.

•சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை வண்ணாரப் பேட்டையிலிருந்து திருவொற்றியூர் / விம்கோ நகர் வரை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதலை வழங்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

•சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணியாக 88 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று வழித்தடப் பணிகளை சுமார் 44,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் உதவியைப் பெறுவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது சென்னையில் மெட்ரோ ரயில் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த நமது மாநிலத்திற்கு உதவும்.

•நமது மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்த அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் பெரும் வெற்றி கண்டுள்ளன. சென்னையில், 2015 செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட இருமடங்கு கூடுதலாக, அதாவது 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் குவிந்திருப்பது இந்த அரசின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

•1991 முதல் 2011 ஆம் ஆண்டுவரையிலான 20 ஆண்டு காலத்தில் கையெழுத்திடப்பட்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாகக் கிடைத்த மொத்த முதலீடுகளைக் காட்டிலும், இந்த மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முதலீட்டு அளவு அதிகமாகும் என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

•இந்த மாநாட்டின்போது மட்டும் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டிய இத்தகைய பேரார்வமே நமது மாநிலத்தில் தொழில் முதலீட்டிற்கு உகந்த சூழல் நிலவி வருகிறது என்பதற்குச் சான்றாகும்.

• முனைப்பான கொள்கைகளின் மூலமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையை வளம்பெறச் செய்ய இந்த அரசு உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நமது நாட்டிலேயே உயர் அளவாக 1,13,039 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 77 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய 12 லட்சம் பதிவு பெற்ற இத்தகைய தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சாலை மேம்பாட்டுத் திட்டம், விற்பனைக்கான உதவிகள், கட்டண மானியங்கள், முதலீட்டு மானியம், மின் உற்பத்தி மானியம் போன்ற இந்த அரசின் பல்வேறு முயற்சிகள் இத்துறையின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.

•வளர்ந்த நாடுகளுக்கு இணையான மக்கள் நல்வாழ்வுத் தரத்தை எட்ட வேண்டும் என்பது தொலைநோக்குப் பார்வை 2023-ல் வகுக்கப்பட்டுள்ள இலக்குகளுள் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 13.27 லட்சம் நோயாளிகளும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 31.19 லட்சம் கர்ப்பிணிப் பெண்களும் பயனடைந்துள்ளனர்.

•மருத்துவக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டி, அம்மா மகப்பேறு சஞ்சீவி, பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் அமைத்தல், தாய்ப்பால் வங்கி போன்ற பல்வேறு திட்டங்கள், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நலனுக்கான மருத்துவச் சேவைகளின் தரத்தை உயர்த்த உதவியுள்ளன. நமது நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களில், சிசு இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும், மகப்பேறு இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் மூன்றாவது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

•பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த நிதி ஒதுக்கீடுகளிலிருந்தே பள்ளிக்கல்விக்கு இந்த அரசு அளித்துவரும் முக்கியத்துவத்தை உணர முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 12,475 கோடி ரூபாய் செலவில் விலையில்லா மடிக்கணினிகள், இடைநிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பேருந்துப் பயண அட்டைகள், மிதி வண்டிகள், போக்குவரத்து வசதிகளை வழங்கி வருவதிலிருந்து, தரமான கல்வியை வழங்கிட வேண்டுமென்பதில் முதல்வர் காட்டிவரும் முனைப்பு தெளிவாகிறது.

• தொடக்கநிலை மற்றும் இடைநிலைக் கல்வியில் மாணவர் ஆசிரியர் விகிதம், முறையே 29.18 லிருந்து 25.11 ஆகவும், 35.20 லிருந்து 21.94 ஆகவும் குறைந்துள்ளது. கல்வி வசதி எளிதில் கிடைப்பதையும், கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் நிதிக் குறைவை ஈடு செய்து அப்பணிகளை மேற்கொள்வதிலும் இந்த அரசு காட்டிவரும் முன் முயற்சிகளால், இடைநிலைக் கல்வியில் நிகர மாணவர் சேர்க்கை 94.71 சதவீதமாக உயர்ந்து நாட்டிலேயே முதன்மை நிலையை நமது மாநிலம் எட்டியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், கல்விச் சேவைகளை அளிப்பதில் நமது நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது.

•உயர் கல்வியின் தரத்தை உயர்த்திடவும், அனைத்து மாணவர்களும் தங்குதடையின்றி உயர் கல்வி பயில சமவாய்ப்பு அளிக்கும் வகையிலும், உயர் கல்விக்கான செலவைக் குறைக்கவும், அவை எளிதில் கிடைக்கச் செய்யவும் இந்த அரசு அயராது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக, கடந்த மே 2011 முதல், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 39 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் இந்த அரசு தொடங்கியுள்ளது. ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டக் கல்லூரியும், பெருங்குடியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகமும் அமைக்கப்பட்டு, சட்டக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

• முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 2,84,609 மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி கற்க வாய்ப்புப் பெற்று பயனடைந்துள்ளனர். இத்தகைய முயற்சிகளின் பயனாக, தேசிய அளவில் 23.6 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தமிழகத்தில் 44.8 சதவீதத்தை எட்டியுள்ளது. சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களின் நலன் கருதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை, அரசே எடுத்து நடத்திட எடுக்கப்பட்ட முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. இதுவரை, இந்தப் பல்கலைக்கழகத்திற்கு 476.64 கோடி ரூபாய் நிதியுதவியாக இந்த அரசு அளித்துள்ளது.

• பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் போன்ற நலிவடைந்த பிரிவினரின் நிலையினை மேம்படுத்திட இந்த அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது. சமூக பாதுகாப்பு உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை மாதம் ஒன்றுக்கு 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது.

•எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமும், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை வெகுவாக மேம்படுத்தியுள்ளன. திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தாலிக்குத் தங்கம், தொட்டில் குழந்தைத் திட்டம், திருநங்கைகளுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம், முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு விடுதி வளாகம் போன்ற திட்டங்கள் நலிந்த பிரிவினருக்கான சமூக பாதுகாப்பினை உறுதி செய்துள்ளன.

•ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினரின் நலத்தினை பேணுவதில் இந்த அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வருவாயை உயர்த்துவதற்காகச் செயல்படுத்தப்படும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சுழற்சி நிதி மற்றும் நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்கள் இவர்களை பொருளாதாரத்தில் வளம்பெறச் செய்துள்ளன. உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கும் விரிவுபடுத்தியது இந்த அரசின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். நிதிச்சுமையின்றி இப்பிரிவினர் உயர்கல்வி பெற இத்திட்டம் வழிவகுத்துள்ளது.

•இந்த அரசின் பல்வேறு கொள்கைகள், திட்டங்கள் பற்றி நான் இங்கு எடுத்துரைத்துள்ளேன். அனைத்துத் துறைகளிலும் ஒப்பற்ற சாதனைகளைப் படைத்துள்ள நமது மாநிலம், எதிர்காலத்திலும் இதேபோன்ற முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடும். முதல்வரின் மதிநுட்பம் வாய்ந்த வழிகாட்டுதலின்படி இந்த அரசு மேற்கொண்ட புதுமையான முயற்சிகளின் விளைவாக, நாட்டிலேயே முதன்மை நிலையை நமது மாநிலம் அடையும் என்று நான் நம்புகிறேன்'' என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Assembly session began today with Governor's speech. In his speech, Tamilnadu Governor Rosaiah accused Central Government by saying that its poor policies has bothered growth of Tamilnadu. He also listed the various steps taken by the Tamilnadu government for its growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X