For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் கொலைமிரட்டல்… அலையும் அரிவாள் மனிதர்கள்… சகாயத்திற்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: தொடர் கொலை மிரட்டல் காரணமாகவும், அரசியல் கட்சித்தலைவர்களின் வலியுறுத்தல் காரணமாகவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கும், அவரது அலுவலகத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்திவருகிறார். சகாயத்திற்கு ஈரோட்டில் இருந்து கொலை மிரட்டல் வந்தது. அதைத் தொடர்ந்து சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கடந்த வாரம் 9ஆம் கட்ட விசாரணை நடத்தியபோது சென்னையில் இருந்து கொலைமிரட்டல் கடிதம் வந்தது. கிரானைட் விசாரணையில் உண்மையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் கொலை செய்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரு மிரட்டல்கள் குறித்தும் மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சகாயத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரினர். இதையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அச்சமின்றி விசாரணை

அச்சமின்றி விசாரணை

இரண்டு முறை கொலை மிரட்டல் கடிதங்கள் வந்த பிறகும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கிரானைட் விவகாரத்தில் விறுவிறுவென ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார் சகாயம். அவரது குழுவினரும் மிரட்டலைப் பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ வாக்குமூலம்

வீடியோ வாக்குமூலம்

மேலூர் மற்றும் இ.மலம்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சகாயம் குழுவினரிடம் புகார் மனுக்களை அளித்தனர். இதனையடுத்து புகாருக்கு உள்ளான இடங்களுக்கு நேரில் சென்ற விசாரணைக் குழுவினர், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது புகார் அளித்தவர்களின் வாக்குமூலங்களை வீடியோ மூலம் அவர்கள் பதிவு செய்தனர்.

மிரட்டல் மனிதர்கள்

மிரட்டல் மனிதர்கள்

இதனிடையே குவாரிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட சகாயம் குழுவைச் சேர்ந்த அலுவலர்களை கண்காணிப்பது, மிரட்டும் பாணியில் சிலர் வந்து செல்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த 25ஆம் தேதி மதுரை மேலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த சகாயம் குழுவினரை நோக்கி ஒரு கும்பல் வீச்சரிவாளுடன் பாய்ந்திருக்கிறது.

மர்ம மனிதர்கள் நடமாட்டம்

மர்ம மனிதர்கள் நடமாட்டம்

சகாயம் குழுவைச் சேர்ந்த ஆல்பர்ட்டும், ஜெய்சிங்கும் குண்டல்பட்டி மக்களிடம் நின்று விசாரித்துக்கொண்டு இருந்த போது இவர்களை நெருங்குவதற்குச் சற்று முன்னதாக முதுகுப் பக்கத்தில் தயாராக மறைத்து வைத்திருந்த அரிவாளை உருவினானாம். சட்டென்று இதனை கவனித்த ஜெய்சிங், தனது கைத்துப்பாக்கியை எடுக்க, அதைப் பார்த்த அரிவாளுடன் வந்தவன், எதிர்ப்புறம் உள்ள சாலையை நோக்கி ஓடவே கிராம மக்கள், அவனை விடாமல் துரத்திப்பிடித்தனராம். ஆனாலும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளவே கிராம மக்கள் அவனை விட்டுவிட்டனராம்.

இந்தச் சம்பவம் பற்றி உடனடியாக சகாயத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சகாயம், ''புகார் கொடுக்கலாம். உடனடியாக நீங்கள் கிளம்பி வந்துவிடுங்கள்'' என்று அவர்களை அங்கிருந்து புறப்பட வைத்தார்.

திட்டமிட்ட விபத்து

திட்டமிட்ட விபத்து

சகாயம் அலுவலகத்தில் பணியாற்றும் ஓய்வுபெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம். இருமுறை அடையாளம் தெரியாத நபரால் மோட்டார் சைக்கிளில் மோதப்பட்டுள்ளார். இதில் மீனாட்சி சுந்தரம் கீழே விழுந்து கண்ணுக்கு அருகில் அடிபட்டதில் ஒன்பது தையல்கள் போட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

அசராத சகாயம்

அசராத சகாயம்

சகாயம் மற்றும் அவரைச் சுற்றி உள்ள நபர்கள் அனைவருக்கும் அவர்களுக்கே தெரியாமல் பல்வேறு விபரீதங்கள் நடந்துவருவதால் பெரும் அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். ஆனாலும் அசராத சகாயம் குழுவினரின் 10ஆம் கட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், மத்திய - மாநில அரசுகளின் கீழ் இயங்கும் 28 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தாக்கல் செய்த விவரங்களை ஆவணங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

10 ஆம் கட்ட விசாரணை

10 ஆம் கட்ட விசாரணை

கிரானைட் குவாரிகளில் விபத்தில் சிக்கிய பலர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த மருத்துவமனை அலுவலர் களிடமும் சகாயம் நேற்று விசாரணை நடத்தினார்.

7 போலீசார் பாதுகாப்பு

7 போலீசார் பாதுகாப்பு

கொலைமிரட்டல் புகாரை அடுத்து நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சகாயத்திற்கு விமான நிலையத்தில் இருந்தே கூடுதல் போலீஸார் உடன் சென்றனர்.

இதுவரை சகாயத்துடன் காரில் ஒரு காவலர் மட்டும் சென்றார். இனிமேல் சகாயம் காருக்கு முன் போலீஸ் வாகனம் நிரந்தரமாகச் செல்லவும், அதில் துப்பாக்கி ஏந்திய 2 காவலர்கள் உட்பட மொத்தம் 7 பேர் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மேலும் சகாயத்தின் மதுரை அலுவலகம் முன்பும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். விசாரணைக்கு வருபவர்கள் போலீஸ் சோதனைக்கு பின்னரே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எப்படியோ அரசியல் கட்சியினரில் வற்புறுத்தலுக்கு பணிந்து சகாயத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளித்துவிட்டனர் என்று மதுரைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்

English summary
Gun holding policemen have been given for Sagayam for protection as death threat is looming large in Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X