வி.என். ஜானகி.. ஜெயலலிதா.. வி.கே. சசிகலா.. 3 பெண் தலைவர்களை உருவாக்கிய அதிமுக

எம்ஜிஆருக்கு பிறக்கு ஜானகி, ஜெயலலிதா, சசிகலா என்று மூன்று பெண் தலைவர்களை அதிமுக உருவாக்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 29 ஆண்டுகளில், ஜானகி, ஜெயலலிதா, சசிகலா என்று தொடர்ந்து மூன்று பெண் தலைவர்களை அதிமுக உருவாக்கியுள்ளது.

திமுகவில் பொருளாளராக இருந்த எம்ஜிஆர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டப் பின்னர், 1972ம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார். அதன் பிறகு தேர்தலின் வெற்றி பெற்று மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் எம்ஜிஆர். பின்னர் உடல் நலக் கோளாறு காரணமாக 1987ம் ஆண்டு காலமானார்.

அவர் மறைந்த பின்னர் 29 ஆண்டுகளில், அவரது மனைவியாக வி.என். ஜானகி அதிமுகவின் தலையாகவும் முதல்வராகவும் உருவானார். பின்னர், கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக உயர்ந்து முதல்வராக காலமானார். அடுத்து அந்த இடத்தை நிரப்ப வி.கே. சசிகலா தயாராகிவிட்டார்

வி.என். ஜானகி

எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி. எம்ஜிஆர் மறைந்த உடன் முதல்வராக பொறுப்பேற்ற இவர்தான் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர். எம்ஜிஆர் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த போது அவரின் நிழலாய் இருந்தவர் வி.என். ஜானகி. கணவர் மறைந்ததையடுத்து, அவர், 1988ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற இவர், சட்டமன்றத்தில் தனது தலைமை மீதான நம்பிக்கையை நிருபிக்க முடியாததால் ஆட்சிப் பொறுப்பை இழந்தார்.

தலைவியாக உருவான ஜெயலலிதா

இதனைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக பிளந்தது. அடுத்து 1989ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜானகி, ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுகவின் இரண்டு அணிகளும் தோல்வி அடைந்த நிலையில், ‘ஜ' மற்றும் ‘ஜெ' அணிகள் மூத்த தலைவர்களின் முயற்சியால் இணைந்தன.

ஜெயலலிதா

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக எம்ஜிஆரால் பதவி வழங்கப்பட்ட ஜெயலலிதா, ஏற்கனவே தொண்டர்களிடம் பிரபலமாகி இருந்தார். அது அவருக்கு கூடுதல் பலமாக இருந்தது. 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ராஜீவ் காந்தி பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையின் அனுதாப அலைகள் முழுவதும் ஜெயலலிதாவை தமிழ் நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராக ஆக்கியது.

6 முறை பதவி

அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக மாறிய ஜெயலலிதா சொல்வது எல்லாம் வேதமானது. தொடர்ந்து நான்கு முறை தேர்தலில் வெற்றி பெற்றும், 2 முறை சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய பின்னர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது என 6 முறை முதல்வராக பொறுப்பேற்றவர் ஜெயலலிதா.

ஜெ மறைவு

தொடர்ந்து வெற்றியை நுகர்ந்து வந்த ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி காலமானார்.

சசிகலா

இதனை அடுத்து யார் பொதுச் செயலாளர் என்று அதிமுகவில் கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு பதிலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று தலைமை நிர்வாகிகள் அறிவித்து, இன்று தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்கள். சசிகலாவும் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆக, அதிமுகவின் 3வது பெண் தலைவராக சசிகலா உருவாகிவிட்டார்.

1972ல் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி இருந்தாலும், அவர் இறந்து 29 ஆண்டுகளில் வி.என். ஜானகி, ஜெயலலிதா, சசிகலா என்ற மூன்று பெண் தலைவர்களை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

English summary
V.K. Sasikala is the 3rd woman leader of ADMK, after death of MGR.
Please Wait while comments are loading...