For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட்டக்களத்தில் பூத்த புரட்சிப் பூக்களுக்கு ஒரு கடிதம்! - சீமான்

By Shankar
Google Oneindia Tamil News

எனதருமை இளையோரே, மாணவர்களே...

நெகிழும் உள்ளத்தோடு உங்களை இரு கரம் கொண்டு தழுவி வாழ்த்துகிறேன்.
நம்பிக்கை ஒளி சுடர்கிற எதிர்காலம் ஒன்று நம் முன்னால் இருக்கிறது என்பதை ஜல்லிக்கட்டு தடை உடைய நடந்த இப்போராட்டத்தின் ஊடாக தமிழர்களுக்கு பேரறிவிப்பு செய்திருக்கிறீர்கள்...

ஆம்.

தமிழக வரலாற்றில் மின்னும் பொன்னெழுத்துகளால் எழுதத்தக்க ஒரு மாபெரும் புரட்சி உணர்வுகளால் நிரம்பி ததும்பிய போராட்டத்தை நீங்கள் நிகழ்த்தி இருக்கிறீர்கள். வரலாற்றின் ஏடுகளில் கரைந்து போகாத போராட்டக் காவியம் ஒன்றினை கம்பீரமாக எழுதி இருக்கிறீர்கள்.

Seeman's letter to students who participate in Jallikkattu protestes

வரலாறு தளரா நம்பிக்கைகளோடு, வற்றா மன வலிமை உடைய புரட்சியாளர்களுக்கு மட்டுமே சொந்தமானது. வெற்றி தோல்விக்கு எல்லாம் அப்பாற்பட்டு சமரசமில்லாமல், இலட்சியங்களுக்காக எதையும் இழக்க துணிந்து போராடியவர்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களே உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

மாபெரும் நம்பிக்கைகளை விதைத்த எழுச்சி மிகுந்த இப்போராட்டம் வெற்றியா தோல்வியா என்று ஆராயவோ, கவலைப்படவோ ஏதுமில்லை. இனம் சார்ந்து கூடினோம். அறம் சார்ந்து இறுதிவரை நின்றோம். இந்த மண்ணின் வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்று கூடலை நிகழ்த்தி சத்தியத்தின் பிள்ளைகளாக வன்முறையை விலக்கி, இறுதிவரை இலட்சியத்தில் உறுதிக் கொண்டு வென்றிருக்கிறீர்கள் . இதுவே மிகப்பெரும் வெற்றி.

Seeman's letter to students who participate in Jallikkattu protestes

எனதருமை தம்பி தங்கைகளே..

உங்களில் பலர் இதுவரை இல்லாத புது வாழ்க்கையை என்றுமே மறக்க இயலா இந்த 6 நாட்களில் வாழ்ந்திருக்கிறீர்கள்.. இது வரை உங்களை பேணி காத்த தாய்-தந்தை, உற்றார்-உறவினர் இல்லாது உங்களது தேவைகளை நீங்களே நிறைவேற்றிக் கொண்டு 6 நாட்களை வெற்றிக்கரமாக கடந்து இருக்கிறீர்கள்.

இதுவரை பெறாத புது வித அனுபவங்களை பெற்று இருக்கிறீர்கள். அதிலிருந்து சிலவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள, அதைப் பற்றிச் சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..

கொண்ட கொள்கைக்காக சமரசமில்லாமல்.. சுடும் வெயிலிலும், கொட்டும் பனியிலும், நடுங்க வைக்கும் மழையிலும், நனைக்கும் வியர்வையிலும் தெருவில் இறங்கி பதாகை ஏந்தி நிற்பதும் தொண்டைகிழிய முழக்கமிடுவதும் எப்படி இருக்கிறது?
தன் வீடு, தன் குடும்பம் என தன்னலம் கொண்ட சுயநல சிந்தனைகளை அறுத்துப் போட்டு விட்டு, பொது நோக்கங்களோடு சமூக இயங்கியலோடு இணைந்து இயங்கிய உணர்வு எப்படி இருக்கிறது?

Seeman's letter to students who participate in Jallikkattu protestes

போராட்டம் என்பது வெறும் ஆயுதம் தாங்குவது மட்டும் அல்ல. அனைவரும் ரோட்டில் நிற்பதும் அல்ல. அது அதிகார அடக்குமுறைகளுக்கு எதிரான அறைகூவல் என்பதை உளமார்ந்து உணர்ந்த தருணம் எப்படி இருக்கிறது?

இதுவரை அடிமை வாழ்க்கை வாழ்ந்து பழகிவிட்டு இன்று உரத்த குரலில் நேர்மையாக அதிகாரத்தை எதிர்த்து கம்பீரமாக முழங்கும் போது உருவாகும் அந்த இலட்சியத் திமிர் எப்படி இருக்கிறது?

'இவங்களுக்கு வேற வேலையே இல்லைப்பா. சும்மா சும்மா தெருவில் நின்று கோஷம் போடுவாங்க' என்று கிண்டல் அடிப்பவர்களுக்காகவும், என்னதான் நாம் போராடினாலும் கண்டுக் கொள்ளாமல் கடந்து விட்டு தனக்கான குற்ற உணர்வை மறைக்க எல்லாமே அரசியல், பிழைப்புதான்பா என்று நக்கல் அடிப்பவர்களுக்கும் சேர்த்தே போராடும் அரசியல் முதிர்ச்சி எப்படி இருக்கிறது?

அன்பையும், அரவணைப்பையும், நட்பையும், நாகரீகத்தையும் மட்டுமே பார்த்துப் பழகியிருந்த வாழ்வில் துரோகத்தையும், கூடி கெடுப்பதையும்,சுயநல மடைமாற்றங்களையும் எதிர்க்கொண்டதும், வலி சுமந்ததும் எவ்வாறு இருந்தது..?

வீட்டிலும் வெளியிலும் உங்களின் தேவைக்காக அடுத்தவரை நம்பி வாழ்ந்த வாழ்க்கைக்கு மாற்றாக உங்களின் சுய தேவையையும் பூர்த்தி செய்துக் கொண்டு, அடுத்தவர் தேவைக்காக உழைத்ததும், உங்களையும் மீறி உங்களுள் துளிர்க்கும் உங்கள் ஆளுமைத்திறனையும் நீங்களே உணர்ந்ததும் எப்படி இருக்கிறது?
மாட்டிற்கான போராட்டத்தை ஒடுக்கச் சொந்த இனத்தவனே இந்த அடி அடிக்கும் பொழுது ஈழத்தில் நம் உறவுகள் நாட்டிற்காகப் போராடிய பொழுது வேறொரு இனத்தவன் எப்படி அடித்திருப்பான் என்று யோசிக்கையில் உறைக்கும் அப்பட்டமான உண்மை எப்படி இருக்கிறது?

Seeman's letter to students who participate in Jallikkattu protestes

போராட்டத்தில் பேசுவதற்காகவும் மற்றவர்களுக்கு விளக்குவதற்காகவும் சமூக அவலங்களை நுணுக்கமாகத் தெரிந்துகொள்ளத் தேடி படிப்பதும், அறிவார்ந்தவர்கள் பேச்சை கேட்பதும் எப்படி இருக்கிறது?

பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட, போட்டியும் பொறாமையும் உடைய சுயநல வாழ்க்கையிலிருந்து சிறிதேனும் விடுபட்டு பொதுநலமும் பிறர் மீது அன்பும் பெருகும் மனநிலையும், போராட்டக்களத்தில் அருகே அமர்ந்திருக்கும் குழந்தையின் புன்னகையில் தன்னைத்தானே தொலைப்பதும் எப்படி இருக்கிறது?

இதுவரைக்கும் ஊர் சுற்றவும், விளையாட்டு பேச்சு பேசவும், கூடி மகிழவும், கொண்டாடித் தீர்க்கவும் இருந்த நண்பர்கள் ஒரு உயர்ந்த இலட்சிய நோக்கத்திற்காக பணிகளைப் பிரித்துக்கொண்டு செய்து அதை முடித்ததும் கூடி மகிழ்வதும் எப்படி இருக்கிறது?

சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்திய காலம் மாறி பயனுள்ள செய்திகளையும் போராட்டப் படங்களையும் பதிவிட்ட பின் அதுவரை உங்கள் மீது படிந்திருந்த பார்வை மாறி நட்பு வட்டத்திடமிருந்தும், உறவினர்களிடம் இருந்தும் புதிதாக வரும் பாராட்டு தருகிற பெருமிதம் எப்படி இருக்கிறது?

இதுவரை வெறும் மாடு தானே அது தரும் பால் தானே, அது போடும் சாணம் தானே என்றெல்லாம் எண்ணியிருந்த போது இந்த தடைக்கு பின்னால் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சர்வதேச சதியையும், பன்னாட்டு அரசியலையும், நம் மீது தொடுக்கப்படும் பண்பாட்டுப் போரையும் அறிந்து எப்படியாவது நம் நாட்டு மாட்டினத்தை காக்கவேண்டும் என்ற துடிப்பும், வேட்கையும் நித்தமும் தூங்கவிடாமல் செய்வது எப்படி இருக்கிறது?

இதுவரை பெரிதாக நீங்கள் நேசித்து மதித்து வந்த ஆளுமைகள் மக்களுக்கு பிரச்சனை என்று வந்த உடன் ஓடி ஒளிவதையும், அவர்கள் எடுக்கும் சுயநல நிலைப்பாட்டினைப் பார்த்து இதுநாள் வரை அவர்கள் மீது கட்டி வைத்திருந்த பிம்பங்கள் சரிந்து விழுவதையும் உணருகையில் எப்படி இருக்கிறது?

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தன்னிகரற்ற தமிழ்த் தேசிய இனத்தின் மொழி, பண்பாடு. பாரம்பரியம், வீரம், நம் முன்னோர்கள் வகுத்து வைத்த அறநெறி அனைத்தும் இன்றும் நம்முள் இருப்பதைப் போராட்டக்களத்தில் உணர்ந்த பிறகு வந்த நெகிழ்ச்சி எப்படி இருக்கிறது?

அனைத்திற்கும் மேலாக முழு நாளையும் போராட்டத்தில் கழித்துவிட்டு அசதியாக வீடு வந்து சேர்ந்து இருப்பதை உண்டுவிட்டுப் படுக்கையில் வரும் சற்றே புன்னகையுடன் கலந்து வரும் மனநிறைவு எப்படி இருக்கிறது?

ஆம்.

எனதருமை தம்பி தங்கைகளே காதலைப் போல போராட்ட உணர்வும் நம்மிடத்தில் இருந்தே துளிர்ப்பது.. களத்தில் நின்று அனுபவித்தவனுக்குத்தான் அது புரியும்.
அதை நிறைந்து அனுபவித்து...இன்று இலட்சிய உறுதி தருகிற பெருமிதத்தில் இன்று நிறைவுற்று இருப்பீர்கள். தமிழ்ச் சமூகத்தில் நீண்ட நெடிய நாட்களாக வேரூன்றி தழைத்திருந்த சாதி மத வேறுபாடுகளை தமிழர் என்கிற இனமான உணர்ச்சியால் தகர்த்து இருக்கிறீர்கள்.

ஆண்-பெண் பேதம் அழித்து, நள்ளிரவில் போராட்டக் களத்தில் உடன் தங்கும் பெண்ணோடு தந்தைமை காட்டி, தங்கைகளும் உடன் தங்கும் ஆணோடு தாய்மைக் காட்டி உலகையே வியக்க வைத்து இருக்கிறீர்கள். இந்தியாவின் தலை நகரத்திலும், இன்னும் பிற பகுதிகளிலும் நள்ளிரவு என்பது பெண்களுக்கு கொடும் நினைவாக, பேரச்சமாக, பாலியல் துன்புறுத்தல் நிரம்பிய பயங்கரமாக இருக்க , இந்த 6 நாள் போராட்டத்தில் ஒரு பெண் கூட பாதிக்கப்படாமல், சிறு அசைவினால் கூட சிதைக்கப்படாமல் பாதுகாப்பாய் இல்லம் திரும்பி இருப்பது உங்களின் களங்கமற்ற இதயத்தைக் காட்டுகிறது.

இப்போராட்டத்திலிருந்து அரசியலை அகற்ற முயன்றவர்களை அகற்றி, போராட்டம் என்பதே மகத்தான அரசியல் நடவடிக்கைதான் என்பதை உணர்த்தி வென்றிருக்கும் நீங்கள் காலகாலமாக போற்றப்பட வேண்டியவர்கள்.

அன்புத் தம்பி, தங்கைகளே..

புதிய புதிய உறவுகளும், நட்புகளும், அனுபவங்களும் உங்களை செழிக்க வைத்திருக்கும். இதனுடாக நீங்கள் அடைந்திருக்கும் அறிவு எதனாலும் விலைமதிக்க முடியாதது.

அறிவும், உணர்ச்சியும் ஒரே புள்ளியில் இணையும் போராட்டமாக இது நிகழ்ந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இனி அநீதிகளுக்கு எதிராக குரல் அடங்காது, தாய் மண்ணை காக்க எழும்பும் முழக்கம் இனி முடங்காது என்கிற நம்பிக்கை எனக்குள் நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

இப்போராட்டம் வாயிலாக உணர வேண்டியது இதுதான். சல்லிக்கட்டிற்கு மீதான தடையை நீக்க இணைந்த உங்களது கரங்கள், விண்ணை தொட்ட உங்களது முழக்கங்கள் தொடர்ச்சியாக தாய் மண்ணைக் காக்க, நம் நதி நீர் உரிமைகளை காக்க, நம் தாய்த் தொழில் விவசாயத்தை மீட்டெடுக்க, சாதி-மத உணர்ச்சியை சாகடிக்க, நம் மற்றொரு தாய்நிலமாக ஈழத்தின் விடுதலையை வென்றெடுக்க, இயற்கை வளச்சுரண்டல்கள்- நலச்சுரண்டல்கள், லஞ்சம்,ஊழல் ,பசி பட்டினி,தீண்டாமை, பாலியல் வன்கொடுமை இவைகளுக்கு எதிராக போராட , காசுக் கொடுத்து மகத்தான மக்கள் உரிமையான ஓட்டை விலைக்கு வாங்கும் வியாபாரத்திற்கு எதிராக தொடர்ந்து இணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

போராட்டக்களத்தில் புது வரலாறு படைத்த என் உயிர்த் தம்பி, தங்கைகளுக்கு என் அன்பை மீண்டும் தெரிவித்து புரட்சி வாழ்த்துகளை உரிதாக்குகிறேன்.
என்றென்றும் உங்கள் அண்ணனாக, உங்களில் ஒருவனாக நிற்பேன்.
நன்றி.

- செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.

English summary
Naam Tamilar chief Seeman's letter to students who participate in Jallikkattu protests
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X