For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய சீமான் வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்ப்பேரினத்தின் தன்னிகரற்ற கலை அடையாளமாகத் திகழ்கிற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையைச் சென்னை, மெரீனா கடற்கரை சாலையில் இருந்து அகற்றும் தமிழக அரசின் முடிவானது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல! அம்முடிவைத் தமிழக அரசானது உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட முன்வர வேண்டும்.

seeman urges tamilnadu government to review remove the Sivaji Ganesan statue from near Marina Beach

நடிகர் திலகத்தை வெறுமனே நடிகர் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்க்க இயலாது. ஐம்பதாயிரம் ஆண்டுகள் தொன்மை பெருமைமிக்கத் தமிழர் என்ற தேசிய இனத்தின் கலைமுகத்தை அடையாளப்படுத்தும் பெருங்கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். தனது அசாத்திய நடிப்புத் திறனாலும், வியக்கவைக்கும் வசன உச்சரிப்பினாலும் தலைமுறை கடந்தும் எல்லோரது மனதையும் கொள்ளைகொண்டு உலகத்தமிழர்களின் உள்ளத்தில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் புகழையும், பெருமையையும் போற்ற வேண்டியது தமிழ்த்தேசிய இன மக்களின் தலையாயக் கடமையாகும்.

மொழியே ஓர் இனத்தின் உயிர்; அம்மொழிக்கு வளமும், நலமும் சேர்ப்பவை அம்மொழி சார்ந்த கலையும், இலக்கியங்களுமாகும். ஆகவே, கலையையும், இலக்கியங்களையும் தரிசிக்கக் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பழங்கால மன்னர்கள், விடுதலைப்போராட்ட தியாகிகள் போன்றோரின் வேடங்களில் நடித்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைமொழியில் சேமித்து அடுத்தத் தலைமுறைக்கு அருளிய அளப்பெரும்பணியினைச் செய்தவர் நமது நடிகர் திலகம் ஆவார்.

தனது சிம்மக்குரல் மூலம் உச்சரித்த வசன உச்சரிப்புகள் யாவும் எக்காலத் தலைமுறைக்கும் தமிழ் உச்சரிப்பினைக் கற்றுத்தரும் அரியப்பெட்டகமாகும். தனது நடை, உடை, பாவனை, முகத்தோற்றம் என யாவற்றிலும் நடிப்பினை வெளிப்படுத்தி நவரசம் கொட்டிய அவரது நடிப்புத்திறனாது எக்கால நடிகர்களும் கற்க வேண்டிய தலையாயப் பாடமாகும். நடிப்புத்திறனுக்கே இலக்கணமாய்த் திகழும் சிவாஜி கணேசன் எனும் ஒப்பற்ற கலைஞனின் சிலையானது மெரீனா கடற்கரை வீதியில் நிறுவப்பட்டிருப்பது தமிழர்களின் கலைத்திறமையை உலகுக்குப் பறைசாற்றுவதாக அமைந்து பெருமை சேர்க்கிறது. அதனை அகற்றுவது என்பது தமிழர்களுக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக அமையும். நெடுஞ்சாலையோரம் இருந்த மதுபானக்கடைகளை அகற்ற முரண்டுபிடித்த தமிழக அரசு, மெரீனா கடற்கரை சாலையிலுள்ள நடிகர் திலகத்தின் சிலையை அகற்றுவதற்கு இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏன் என்ற கேள்வியும் எழாமலில்லை.

Recommended Video

    Sivaji Ganesan memorial to be built by Tamil Nadu Government

    நடிகர் திலகத்தின் சிலை அகற்றம் போக்குவரத்து வசதிக்காகத்தான் எனக் கூறுவது மிகச்சாதுர்யமாகவும், தந்திரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொய்யுரையாகும். கடந்த 2006ஆம் ஆண்டுச் சிலை திறக்கப்பட்டபோதே இதே காரணத்தைக்கூறி அதற்குத் தடைகோரி வழக்குத் தொடரப்பட்டபோது, போக்குவரத்து இடையூறு என்பதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் சிலைத் திறப்புக்குத் தடைவிதிக்க மறுத்து விட்டது. அதன்பிறகு, கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று நடந்த இவ்வழக்கு குறித்தான விசாரணையின்போது, சிவாஜி கணேசன் சிலையால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமில்லை; சிலையை அகற்ற வேண்டிய அவசியமுமில்லை என மாநில அரசின் தலைமை வழக்கறிஞரே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்குபிறகு, ஒரு மாதம் கழித்து, போக்குவரத்து இடையூறாக இருப்பதால் சிலையை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் மனு போட்டு முறையிட்டு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட தமிழக அரசானது அன்றிலிருந்து இன்றுவரை அதனையே சொல்லி வருகிறது.

    தற்போது சென்னை, அடையாறில் நடிகர் திலகத்துக்கு மணிமண்டபம் கட்டப்படுவதால் மெரீனா கடற்கரைச் சாலையில் இருக்கும் சிலையை அகற்றி அங்கு நிறுவிக் கொள்ளலாம் எனக் கூடுதலாக ஒரு காரணத்தையும் கூறி தனது தரப்பை நியாயப்படுத்த முயல்கிறது தமிழக அரசு. மணிமண்டபத்தில் நடிகர் திலகத்தின் சிலையை நிறுவும் மாநில அரசின் செயலை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மெரீனா கடற்கரை சாலையிலுள்ள நடிகர் திலகத்தின் சிலையை அகற்றித்தான் மணி மண்டபத்தில் நிறுவ வேண்டும் என்றில்லை. புதிதாக இன்னொரு சிலையை நிறுவி நடிகர் திலகத்தைப் பெருமைப்படுத்தலாம். தமிழர் நிலத்துக்குத் துளியும் தொடர்பற்றவர்களின் சிலையெல்லாம் தமிழக வீதிகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கிறபோது மண்ணின் மைந்தர் சிவாஜி கணேசன் அவர்களின் சிலையைக் கூடுதலாய் ஒன்றைத் திறப்பதில் பிழையொன்றுமில்லை.

    ஆகையினால், கடற்கரைச் சாலையிலுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை அகற்றும் முயற்சியினைத் தமிழக அரசானது கைவிட முன்வர வேண்டும். ஒருவேளை, அகற்றப்படும்பட்சத்தில் மெரீனா கடற்கரையிலேயே நிறுவ வேண்டும் எனவும், இதனைச் செய்வதே நடிகர் திலகத்திற்கு அவரது நினைவு நாளில் தமிழக அரசு செய்கிற உண்மையாகப் புகழ் வணக்கமாகவும், மரியாதையாகவும் இருக்கும் எனவும் அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Naam tamilar chief seeman urges tamilnadu government to review the decision of remove the Sivaji Ganesan statue from near Marina Beach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X