பரபர ராஜ்பவன்.... தம்பிதுரை, ஜெயகுமார் மாறி மாறி ஆளுநரை சந்தித்தது இதற்குத்தானாம்!

லோக்சபா துணை சபாநாயர் தம்பிதுரை மற்றும் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரின் ஆளுநருடனான அடுத்தத்த சந்திப்புகள் அமைச்சரவை மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் இணைந்து அதிமுகவை ஒன்று சேர்ப்பதன் முன்னோட்டமாக அமைச்சரவையில் மாற்றம் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ் கோஷ்டியைச் சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி அளித்த தகவல்களைத் தான் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடுத்து சொன்னதாகத் தெரிகிறது.

தம்பிதுரை மும்முரம்

அதிமுகவை இணைப்பதில்முழு மூச்சாக இருக்கும் தம்பிதுரை கடந்த வாரம் முதலமைச்சருடன் ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்து பேசி, சூட்டோடு சூட்டாக அந்தத் தகவலை டெல்லியிடம் கொண்டு சேர்த்தார். ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா என்ற ரீதியில் மீடியாக்களிடம் மழுப்பலாக அரசியல் தலைவர்களுக்கே உரிய வார்த்தையான நட்பு ரீதியாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தாகக் கூறிவிட்டு புறப்பட்டார்.

ஆளுநர் மாளிகையில் ஜெயக்குமார்

தம்பிதுரை போன வேகத்தில் ஆளுநர் மாளிகையில் நுழைந்த நிதியமைச்சர் ஜெயகுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வித்யாசாகர் ராவுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து ஜெயகுமார் ஆளுநரிடம் விளக்கியதாகத் தெரிகிறது.

மழுப்பல்

இருப்பினும் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநரை சந்தித்தேன் என ஜெயக்குமாரும் மழுப்பிவிட்டார். அதுவும் ஆளுநரே துணைவேந்தர்களுக்கான நேர்காணலை நடத்தினார் என்றார் ஜெயக்குமார்.

அமைச்சரவை மாற்றம் உறுதி

இந்த ஆலோசனை தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில், ஓபிஎஸ் தரப்பில் இருந்து இணைப்புக்கு முன்னோட்டமா 3 பேருக்கு அமைச்சர் பதவி கோரியுள்ளனராம். இன்று மாலையோ அல்லது நாளையோ அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்பது எதிர்பார்த்த செய்தி தான் என்றாலும் யார் தலைமையில் ஆட்சி என்பதில் தான் இழுபறி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.

English summary
on behalf of admk merger first would be a change in tn cabinet
Please Wait while comments are loading...