For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதா? ஸ்டாலின் கண்டனம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையை வைத்து தடியடி நடத்தியது 'பீட்டா' அமைப்பின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட நடவடிக்கையா? என தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை. "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்று ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறார். அதுவும் ஜனவரி 3ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தலைமையேற்று நான் அலங்காநல்லூரில் ஆற்றிய உரைக்கு 8 நாட்கள் கழித்து பதிலறிக்கை கொடுத்திருக்கிறார்.

 stalin Condemned on tamilnadu government

ஆனாலும் கூட முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான கோப்புகள் எல்லாம் கிடைத்திருக்கும் என்பதால் அவருக்கு இது குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அறிக்கையைப் படித்தேன். ஆனால் படித்த பிறகு முதலமைச்சர் ஏற்றுக்கொண்ட புதிய பொதுச் செயலாளர் போல் இவருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முழு உண்மைகள் தெரியவில்லையே என்று வேதனைப்படுகிறேன்.

முதலமைச்சரின் இன்றைய அறிக்கைக்கு நான் தனியாக பதில் சொல்வதை விட அவரே தமிழக சட்டமன்றத்தில் கடந்த 23.2.2015 அன்று ஆளுனர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தில் ஜல்லிக்கட்டு பற்றி அளித்த பதிலை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். "09.03.2007 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அமர்வு பிறப்பித்த உத்தரவில் முழுமையாக கிராமப்புற விளையாட்டின் மீது தடை விதித்தது தவறு.

இதை முறைப்படுத்தி நடத்தலாம்" என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். "15.01.2008 அன்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் ஜல்லிக்கட்டு நடைமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பிராணிகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்" என்று ஆணையிடப்பட்டது.

இதையும் அவர் தான் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். "25.11.2010 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால ஆணையில் ஜல்லிக்கட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான நெறிமுறை" வழங்கப்பட்டது. இப்படி சட்டமன்றத்தில் கூறியதும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான். முதலமைச்சர் சொன்ன மூன்று தேதிகளிலும் திமுக ஆட்சி நடைபெற்றது.

ஆகவே ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று மதுரைஉயர்நீதிமன்ற கிளை அமர்வும், உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் என்பதை முதலமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அதே போல் "7.5.2014 அன்று உச்சநீதிமன்றத்தால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த முழுமையான தடை பிறப்பித்து ஆணை வழங்கப்பட்டது" என்றும் முதலமைச்சர் தான் சட்டமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஜல்லிக்கட்டு விழாவிற்கு முழு தடை வந்ததது அதிமுக ஆட்சியில் தான் - குறிப்பாக முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த தீவிர முயற்சி எடுத்தார் என்று கூறியிருக்கிறாரே அவர் தலைமையிலான அதிமுக ஆட்சி தான் என்பதை சட்டமன்றத்தில் முதலமைச்சர் .ஓ.பன்னீர்செல்வம் அவர்களே பதிவு செய்திருக்கிறார் என்பதையும் இந்த நேரத்தில் நான் குத்திக்காட்ட விரும்பவில்லை, சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு பாதுகாப்புடன் நடந்தது என்றும், அதிமுக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு முற்றிலும் தடைபட்டது என்றும் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒப்புக் கொண்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தி.மு.க. மீது வீண் பழி சுமத்துகிறார்.

உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு முழு மனதோடு, தமிழர்களின் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான உத்தரவுகளைப் பெற்றது என்பதும், தமிழர் உணர்வு பற்றியோ, பண்பாடு பற்றியோ கவலைப்படாத அதிமுக அரசு

நீதிமன்றங்களில் முறையாக வாதிடாமல் கோட்டை விட்டது என்பதும் ஜல்லிக்கட்டிற்காக போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும். அதிமுக இந்த விளையாட்டை நடத்த மனப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு பல உதாரணங்களை எடுத்துக் கூற முடியும். அதில் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஜல்லிக்கட்டு வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்ற நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தம் காரணமாக அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் "11.7.2011 அன்று வெளியிட்ட அறிவிக்கையிலிருந்து காளைகளை நீக்குவதற்கு தயார்" என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட்டே தாக்கல் செய்தது. அதை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறந்து விட்டு இப்போது தி.மு.க.வை குறை கூறி அறிக்கை விடுகிறார்.

அந்த அபிடவிட்டை சாதகமாக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு முழு தடை வராமல் தடுத்து இருக்க வேண்டிய அதிமுக அரசு அப்போதும் உச்சநீதிமன்றத்தில் கோட்டை விட்டது. அதே போல் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்காக கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட " 2009-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நெறிமுறைச் சட்டத்தின் படியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தியது என்பதை நான் சொல்லவில்லை. அலங்காநல்லூர் கூட்டத்திலேயே நான் தெளிவாக கூறியிருக்கிறேன்.

அதிமுக அரசின் மீதான அந்த குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் 07.05.2014 அன்று அளித்த தீர்ப்பிலேயே பதிவு செய்திருக்கிறது. அதை ஏனோ முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படிக்கத் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உரிய வாய்ப்புகள் கழக அரசு கொண்டு வந்த சட்டம் மூலமும், உச்சநீதிமன்றமே கொடுத்த அனுமதி மூலமும் இருந்தது என்றாலும் அதை தமிழர்களின் வீர விளையாட்டு தானே என்று அலட்சியத்தில் பொறுப்பற்ற முறையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு ஜல்லிக்கட்டு தடை வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது அதிமுக அரசுதான்!

மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு கடிதங்கள் எழுதியதையும், கோரிக்கை மனுக்கள் அனுப்பியதையும் ஏதோ அதிமுகவின் "சாதனை" போல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான். திமுகவால் உயர்நீதிமன்றத்தில் சாதகமான ஆணை பெற முடிந்தது. உச்சநீதிமன்றத்தில் முறைப்படி வாதாடி தமிழக மக்களின் வீர விளையாட்டை நடத்திக் காட்டியது கழக ஆட்சி.

அன்றைக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அழுத்தம் கொடுத்து "காளைகளை அறிவிக்கையிலிருந்து நீக்கிக் கொள்ளத் தயார்" என்று அபிடவிட்டே தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்திக் காட்டியது.

ஆனால் இன்று வரை ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் இருக்கும் அதிமுக அரசு, "ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்" என்று அநியாயமாக வாதிட்டுக் கொண்டிருக்கும் "பீட்டா" அமைப்புக்கு உதவும் நோக்கில் தான் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற நியாயமான கேள்வி எனக்கு மட்டுல்ல - இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சோபலட்சம் இளைஞர்களுக்கும் இன்றைக்கு வந்திருக்கிறது!

உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் மார்கண்டேய கட்ஜு "ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்" என்று தமிழக இளைஞர்கள் மீதான ஆர்வத்தில் சொன்ன கருத்தைக் கூட கொச்சைப்படுத்தி அறிக்கைவிடும் அளவிற்கு பன்னீர்செல்வத்திற்கு என்ன நெருக்கடி? எந்த மாதிரியான தர்மசங்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்?

"மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி" என்பது போன்ற இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறாரா என்ற மர்மம் புரியவில்லை. முதலமைச்சரின் அறிக்கை முழுவதுமே "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை என்ன" என்பது போல் இருக்கிறதே தவிர, ஜல்லிக்கட்டு

விளையாட்டை நடத்த வேண்டும் என்ற உணர்வு அதில் எங்கும் இல்லை. குறிப்பாக தன்னை அமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதற்காக என்னை முன்னிறுத்தி ஒரு அறிக்கை விட்டு தன்னை முன்னிறுத்திக் கொள்ள முதலமைச்சர் விரும்பினால் அதை தாராளமாக செய்து கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை.

ஆனால் லட்சோப லட்சம் தமிழ் இளைஞர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு பீட்டா அமைப்புக்கு வலு சேர்க்காதீர்கள். அதை விட இன்றைக்கு ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையை வைத்து தடியடி நடத்தியிருக்கிறீர்களே!

இந்த நடவடிக்கை "பீட்டா" அமைப்பின் தூண்டுதலினால் எடுக்கப்பட்ட நடவடிக்கையா? ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரிக்கை வைத்து குரல் கொடுப்பதற்கு கூட தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிமை இல்லையா? மாணவர்களின் மீதான தடியடிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், லாவணி பாடுவதை நிறுத்திவிட்டு வருகின்ற தை பொங்கல் தினத்திலாவது ஜல்லிக்கட்டு நடத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu's opposition party leader m.k.stalin Condemned on College Students were attacked by Police in rally to lift ban on Jallikkattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X