For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணமக்கள் நெற்றியில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டி ஏழைத் தம்பதியரை அவமானப்படுத்துவதா?- ஸ்டாலின் கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திருமண உதவித் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தி விட்டு மணமக்கள் நெற்றியில் ஜெயலிலதா ஸ்டிக்கர் ஒட்டி ஏழைத் தம்பதியரை அவமானப்படுத்துவதா? என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளர்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டவும், பெண்கள் பட்டப்படிப்பு படிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முற்போக்கான திட்டங்கள் பல கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

stalin Condemned to tamilnadu government

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் என்று பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட புரட்சிகரமான தலைவர்களின் பெயர்களால் அந்தத் திட்டங்களை தி,மு.கழக ஆட்சியில் வெற்றிகரமாக அமல்படுத்தி வந்ததை தமிழக மக்களும், அதனால் பயனடைந்த இலட்சக்கணக்கான மகளிரும் அறிவார்கள்.

அதிமுக ஆட்சியில் திருமண உதவித் தொகையோடு "தாலிக்குத் தங்கம்" என்ற பெயரில் நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பை முனைப்போடு நிறைவேற்றாததால், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அரசு உதவித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என்கிற வாய்மொழி உத்தரவிடப்பட்டு, அதன் காரணமாக ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற உருவான ஒரு திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கஜானா காலியாகி விட்டதாலும், அரசின் அலட்சியத்தாலும் இந்தத் திட்டங்களுக்கான நிதியுதவி கணிசமாகக் குறைக்கப்பட்டு, அறிவிக்கப்படாத மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது.

திருமாங்கல்யத்துக்கான நான்கு கிராம் தங்கத்தையும் நிதியையும் திருமணத்துக்கு முன்பே கொடுத்தால் ஏழைப் பெற்றோர்கள் ஆறுதல் அடைவார்கள்; மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், நடைமுறையில் அந்தத் திட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் ஏறத்தாழ மூடுவிழா நடத்திவிட்டார்கள். திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகும்கூட விண்ணப்பித்தவர்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் நிதியும் தரப்படவில்லை; தங்கமும் வழங்கப்படவில்லை.

தமிழகத்தின் பல மாவட்டங்களில், திருமணம் முடிந்து இரண்டாண்டுகள் ஆகியும் நிதியுதவி கிடைக்காமல் ஏழைத் தந்தையர் அரசாங்க அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். அரசின் நிதியுதவி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி மகளுக்குத் திருமணம் செய்துவிட்டு, அந்த வட்டிக்கு கடன்கூட கட்ட முடியாமல் பலர் பரிதவிக்கிறார்கள்.

போதுமான நிதி இன்னும் வரவில்லை என்று அதிகாரிகள் அவர்களை அலைக்கழித்து வருகிறார்கள். ஆளுங்கட்சியினர் இடைத்தரகர்களாக மாறி இதற்காக லஞ்சம் கேட்டு நச்சரித்து வருவது மற்றோர் அவலம். முடக்கப்பட்ட இந்தத் திட்டத்தினால் அதிமுகவின் ஏழைத் தொண்டர்கள் பலரும்கூட பாதிக்கப்பட்டு திண்டாடி வருகின்றனர்.

ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைத்துவிட்டு, பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கும் அரசுதான் மக்கள் நல அரசா? இப்படிப்பட்ட அலங்கோல ஆட்சியைத் தந்து கொண்டிருப்பவர்தான் மக்களுக்காக வாழ்பவரா? தனது ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் உண்மையிலேயே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட காணொளிக்காட்சி ஆட்சி நடத்தும் முதல்வருக்குத் தெரியுமா என்பதே சந்தேகம் தான்.

மாநிலம் முழுவதும் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பித்துக் காத்திருப்போர் எவ்வளவு பேர்? எத்தனை மாதங்களாக, ஆண்டுகளாக, அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? தாமதத்துக்குக் காரணம் யார்? அரசின் கஜானா காலியானது இதற்குக் காரணமா? அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை? என்ற விவரங்களை வெளியிட ஆட்சியாளர்கள் தயாரா?

அரசின் நடவடிக்கை அலட்சியத்தின் உச்சம் என்றால், ஆளுங்கட்சியினரின் செயல்பாடோ அருவருப்பின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத் திட்டம் முடக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக அதிமுக சார்பில் 68 தம்பதியருக்கு உடுமலைப்பேட்டையில் அண்மையில் நடத்தப்பட்ட இலவசத் திருமண விழாவில் அக்கட்சியினர் மணமக்களின் நெற்றிப்பொட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார்கள்.

ஓர் அமைப்பின் சார்பில் மக்களுக்கு சில நல உதவிகளை வழங்குவதை நான் குறைகூறவில்லை. அதேநேரத்தில் உதவி கேட்டு வருவோரை கண்ணியத்துடனும், அவர்களது சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படாமலும் நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் உதவிக்கரம் நீட்டுவோருக்கு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மக்கள் வரிப் பணத்தில் நிறைவேற்ற வேண்டிய திருமண நிதியுதவித் திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டு, மணமக்கள் நெற்றிப்பொட்டில் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளை இழிவுபடுத்தும் அ.தி.மு.க.வின் சுயவிளம்பர மோகம் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. இந்த அநாகரிகத்தை சுயமரியாதை உள்ள யாரும் ஏற்கவும் முடியாது.அனுமதிக்கவும் முடியாது. ஏனென்றால், இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் ஏற்பட்டுள்ள பெரும் தலைக்குனிவு!

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK treasurer M.K.stalin Condemned to tamilnadu government for Marriage Assistance Scheme
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X