For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் அடாத செயல் - அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

அதிமுக அரசு, தன் பொறுப்பில் உள்ள திருக்கோயில்களை சிதைத்துக் கொண்டிருப்பது தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் அடாத செயல் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உலக ​புகழ்மிக்க மதுரை, திருவண்ணாமலை, திருவரங்கம் கோயில்களிலும் அறநிலையத்துறையின் அலட்சியத்தால் வரலாற்றுச் சின்னங்களான சிற்பங்கள், ஓவியங்கள், மதில்கள் உள்ளிட்டவை சிதைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

Stalin condemns Historic TN temples fallinginto decay

மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பாரம்பரியச் சின்னங்களான திருக்கோயில்களைப் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தொன்மைமிக்க திராவிடக் கட்டிடக் கலையின் புகழ்வாய்ந்த அடையாளங்களாக உயர்ந்து நிற்பவை தமிழகத்தில் உள்ள கோயில் கோபுரங்கள். தமிழக அரசின் இலச்சினையாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் இடம்பெற்றிருப்பதில் இருந்தே இதனை உணர முடியும். ஆனால், தமிழகத்தை ஆளுகின்ற அதிமுக அரசு அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

திருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் அலட்சியமான செயல்களால் கோயில்கள் சிதைக்கப்படுகின்றன என வரலாற்று ஆர்வலர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு யுனெஸ்கோ அமைப்பிடம் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதன் காரணாமாக, மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவரங்கம் ரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், கும்பகோணம் நாகேசுவரன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 300 பக்க அளவிலான இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

அறநிலையத்துறையிடம் கோயில் திருப்பணிகளுக்கான விதிமுறைகள், வரைபடங்கள், திட்ட அறிக்கைகள் எதுவுமே முறையாக இல்லை என்றும், அவைகுறித்து விளக்கவும் - ஆலோசனை தரவும் தகுதியானவர்கள் இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பழங்காலச் சிற்பங்களின் தன்மையையும், பெருமையையும் அவற்றைச் சீரமைக்கும் முறைகளை அறிந்த சிற்பிகள் - ஸ்தபதிகள் யாரையும் அறநிலையத்துறை அணுகுவதில்லை.

இதன் காரணமாக, பழமையான சிற்பங்கள் பலவும் புனரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டும் யுனெஸ்கோ, தஞ்சை மாவட்டம் மானம்பாடி கிராமத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாகநாத சாமி கோவிலை, புனரமைப்பு என்ற பெயரில் வரலாற்றுத் தடயங்களே இல்லாத அளவுக்கு அறநிலையத்துறையினர் தரைமட்டமாக்கியிருக்கும் அவலத்தையும் தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக ​புகழ்மிக்க மதுரை, திருவண்ணாமலை, திருவரங்கம் கோயில்களிலும் அறநிலையத்துறையின் அலட்சியத்தால் வரலாற்றுச் சின்னங்களான சிற்பங்கள், ஓவியங்கள், மதில்கள் உள்ளிட்டவை சிதைக்கப்பட்டுள்ளதையும் யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. இடைக்கால அறிக்கையிலேயே இத்தனை அதிர்ச்சிகள் என்றால், இறுதி அறிக்கையில் இன்னும் என்னென்ன அவலங்கள் வெளிப்படுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

திமுக என்பது பகுத்தறிவு வழியில் நடைபோடுகின்ற இயக்கம். கோயில்கள் - சிற்பங்கள் உள்ளிட்டவற்றை வரலாற்றுப் பார்வையுடன் அணுகுகின்ற இயக்கம். நீதிக்கட்சி ஆட்சியாளர்களின் மக்கள் நலச் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோயில்கள் பாதுகாப்புச் சட்டத்தினால் அமைந்த அறநிலையத்துறை வாயிலாக பாரம்பரியம்மிக்க கோயில்கள் சீரமைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் மயிலாப்பூர் கோயில் குளம் முறையாகத் தூர்வாரப்பட்டது. திருவாரூர் கோயிலின் ஆழித்தேர் பழமைத்தன்மை மாறாமால் நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்டது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன.

பழந்தமிழரின் கட்டிடக் கலை இலக்கணங்களை அறிவியல் வளர்ச்சிக்கேற்ற வகையில் பயன்படுத்தி, குமரி முனையில் 133 அடியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை ஆழிப்பேரலையையும் எதிர்கொண்டு உயர்ந்து நிற்கிறது.

அதிமுக அரசின் ஆட்சியாளர்களோ தங்களின் சுயநலத்திற்காக பால்குடம், மண்சோறு, வேப்பிலை ஆடை, அங்கப்பிரதட்சணம் என ஊர் மக்களின் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு, அறநிலையத்துறையின் அலட்சியத்தால் திருக்கோயில்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அவலத்தைத்தான் யுனெஸ்கோ தனது இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டினரெல்லாம் வியந்து பார்க்கும் தமிழக கோயில்களின் பெருமைகளைச் சிதைத்து, உலக அளவிலான அமைப்பு குற்றம்சாட்டும் அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

கீழடி ஆய்வுகள் வாயிலாக வெளிப்படும் தமிழகத்தின் வரலாற்றுத் தொன்மையைப் பாதுகாக்க வேண்டும் என, மத்திய அரசை திமுக உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மாநில அரசோ, தன் பொறுப்பில் உள்ள திருக்கோயில்களை சிதைத்துக் கொண்டிருப்பது தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் அடாத செயலாகும்.

அதிமுக அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Stalin said that his statement, Many historic temples across Tamil Nadu — in the care of the Hindu religious and charitable endowments department are now in ruins, a Unesco report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X