For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி டெல்டா விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு நடத்தவுள்ள பேச்சுவார்த்தையை தமிழக அரசு முறையாக பயன்படுத்தி காவேரி டெல்டா விவசாயத்திற்கு தேவையான தண்ணீரைப் பெறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

காவேரி நதி நீர் பிரச்சினையில் இரு மாநில முதலமைச்சர்களையும் அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

stalin facebook status about cauvey issue

மேலும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு தலா 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதும், கர்நாடக மாநில அரசுக்கு "மத்திய- மாநில உறவுகள்" குறித்து சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்திருப்பதும் தமிழக விவசாயிகளுக்கு ஆறுதலாக இருக்கிறது. குறிப்பாக "தன் மாநில மக்களின் நலனை மட்டுமல்ல. கூட்டாட்சி தத்துவத்தில் அண்டை மாநில மக்களின் நலனைக் காப்பதும் கர்நாடக மாநில அரசின் கடமை" என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்துள்ளது தமிழக விவசாயிகளின் பக்கம் உள்ள நியாயத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளது.

திமுகவை பொறுத்தவரை ஆரம்ப கட்டத்திலிருந்தே "அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்" என்றும், "இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றும், இதில் "மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது" என்றும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது.

காவேரி பிரச்சினையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு கண்டவர் என்ற முறையில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அதிமுக அரசுக்கு சுட்டிக்காட்டி வந்திருக்கிறார். ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசோ இதையெல்லாம் துளியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் வைத்த கோரிக்கைகளையும் மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதே இப்படியொரு சூழ்நிலைக்கு வித்திட்டு விட்டது.

பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் என்பது தெரிந்தும், உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கர்நாடக அரசுக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை வைக்கவில்லை. "காவேரி பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்துங்கள்" என்று மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கவில்லை. உச்சநீதிமன்றமே அமைத்த காவேரி மேற்பார்வைக்குழு கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று கூட மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை.

இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்த பிரச்சினையில் இறுதி வரை பேச்சுவார்த்தையே நடத்தாமல் அடம்பிடித்து இன்றைய தினம் தமிழக விவசாயிகளுக்கு காவேரி நீர் கிடைப்பதில் இவ்வளவு பெரிய இமாலயச் சிக்கலை ஏற்படுத்தி விட்டது அதிமுக அரசு.

"காவேரி மேற்பார்வைக்குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இன்றைய தினம் உச்சநீதிமன்றம்தான் உத்தரவிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு உச்சநீதிமன்றத்தின் முன்பு தமிழக அரசு இப்போதுதான் சம்மதம் தெரிவித்திருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இதுவரை இப்பிரச்சினையில் முறையாக செயல்படவில்லை என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் எடுத்துரைக்கின்றன.

இந்நிலையில் 29 ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆகவே இனிமேலாவது அதிமுக அரசு விழித்துக் கொண்டு, 29 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையை முறையாகப் பயன்படுத்தி, காவேரி டெல்டா விவசாயத்திற்கு தேவையான தண்ணீரைப் பெறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி வருங்காலங்களில் காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கு

"காவேரி மேலாண்மை வாரியம்" அமைப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் சுமூகமான முடிவை எட்டுவதற்கும், இரு மாநில உறவுகளை மேம்படுத்துவதற்கும் இந்த பேச்சுவார்த்தையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளின் நலன் மிக முக்கியம், காவேரி டெல்டா விவசாயம் அதை விட மிக முக்கியம் என்பதை மனதில் வைத்து இந்த பேச்சுவார்த்தையில் காவேரி இறுதித் தீர்ப்பின் முழுப் பலனையும் தமிழக விவசாயிகள் பெறுவதற்கு உரிய கவனம் செலுத்தி தமிழகத்தின் கருத்துக்களை ஆக்கபூர்வமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Opposition leader of tamilnadu MK Stalin facebook status about cauvey issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X