For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சபாநாயகர் உடனடியாக பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டபேரவை சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்யப்பட்டதை பற்றி உங்கள் கருத்து?

இந்த ஆட்சியில், தே.மு.தி.க. கட்சியியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பங்கேற்க முடியாமல், பணியாற்ற முடியாத சூழ்நிலையில், அவர்கள் தங்கள் பொறுப்பில் இருக்க முடியாத அளவிற்கு ஒரு சட்டத்தை சட்டமன்றத்திலே ஒரு தீர்மானமாக கொண்டு வந்து, நிறைவேற்றி, சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட அவர்கள் பங்கேற்க முடியாத நிலை இருந்து வந்தது.இந்த பிரச்சினை வந்த நேரத்திலேயே, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் நான் அப்போதே எனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறேன்.

stalin meets press at chennai

உடனடியாக இதை இந்த அரசு மறுபரிசீலனை செய்து சபாநாயகர் தான் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற்று்க் கொண்டு, அவர்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களாக தங்கள் பணிகளை ஆற்றக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று நான் கூறியிருக்ககிறேன். நான் மட்டுமல்ல சட்டமன்றத்தில் எதிர்வரிசையில் இருக்க கூடிய எல்லா கட்சி தலைவர்களும், இதே கருத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அதே போல் தலைவர் கலைஞரும் பல நேரங்களில் அதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆனால் இதுவரையில் சபாநாயகர் அதற்கு செவிசாய்க்கவில்லை. நேற்று உச்சநீதிமன்றத்தின் மூலமாக வந்திருக்க கூடிய இந்த தீர்ப்பு, இந்த ஆட்சிக்கும், குறிப்பாக, சட்ட சபையை நடத்திக் கொண்டிருக்க கூடிய சபாநாயகர் அவர்களுக்கு, ஒரு பாடம் சொல்லக் கூடிய வகையிலும், இனிமேல் இதுபோன்ற சர்வாதிகாரத்தை படுகுழிக்குத் தள்ளக் கூடிய நிலையை ஏற்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கும் வகையிலும் ஒரு அருமையான தீர்ப்பை அனைவரும் வரவேற்க கூடியதொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்றைக்கு வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பையொட்டி நியாயமாக தே.மு.தி.க.வினுடைய சட்டமன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு தீர்ப்பை கொண்டு வந்து அதனை நிறைவேற்றிய சபாநாயகர், ராஜினாமா செய்ய வேண்டியது தான் தலைசிறந்ததாக அமைந்திட முடியும். என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: ஆளுங்கட்சியினர் அனைவரும் மூத்த தலைவராய் இருக்கும் கருணாநிதியை விமர்சித்து பேசுவது பற்றி?

அதாவது வெளியில் பேசுவது என்பது ஒன்று. ஆனால் சட்டமன்றத்திலிருக்க கூடிய ஆளும்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களாக இருக்க கூடியவர்களே, அப்படித் தான் சட்டமன்றத்திலே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பேசக் கூடியவர்களுக்கு தான், அந்த கட்சியிலே, இந்த ஆட்சியிலே அமைச்சர் பதவி வழங்கப்படும் சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை அமைச்சர் பதவிக்காகவும் அதில் நீடிப்பதற்காகவும் அப்படி பேசுகிறார்களா,என்பது ஒரு சந்தேகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: விஜயகாந்த் நீதிமன்ற தீர்ப்பில் மட்டுமல்ல மக்கள் மன்றத்திலும் இந்த ஆட்சியை தூக்கியெறிய தயாராகி விட்டதாக கூறியுள்ளார் அதனை பற்றி?

நீதிமன்றம் தந்துள்ள இந்த தீர்ப்பைப் பார்த்தவுடன், அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன், சபாநாயகர் மட்டுமல்ல, இந்த ஆட்சியும், முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா உள்பட அத்தனை பேரும் பதவி விலக வேண்டுமென்பது தான் என்னுடைய எண்ணம். ஆனால் அது நடக்காது. ஏனென்றால் நீதிமன்ற தீர்ப்புகளை எப்போதுமே மதிப்பவர்கள் அல்ல இப்போது ஆட்சியிலிருக்க கூடியவர்கள்.

எனவே விஜயகாந்த் சொன்னது போல, நிச்சயமாக மக்கள் மன்றம் இந்த ஆட்சியை தூக்கி எறியக் கூடிய ஒரு நிலை விரைவில் வர இருக்கிறது என்பது தான் உண்மை. இதை 234 சட்டமன்ற தொகுதிகளில், நான் மேற்கொண்ட "நமக்கு நாமே" பயணத்தின் மூலமாக எல்லாத் தரப்பு மக்களையும் சந்தித்த பிறகு, இதை நான் அழுத்தம் திருத்தமாக, உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

English summary
Dmdk MLAs suspended issue, Stalin's Urges the immediate resignation of the Speaker
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X