For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் கருணாநிதி குரல் ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்திருக்கிறது.. ஸ்டாலின் உருக்கமான கடிதம்

தமிழக சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள் என்றென்றும் வைரம் போல மிளிரும்-ஒளிரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள் என்றென்றும் வைரம் போல மிளிரும்-ஒளிரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி விரைந்து நலன்பெற்று மீண்டும் அவர் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்திருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு, தமிழ், தமிழர் நலன் காக்கும் திராவிடப் பேரியக்கமாம் கழகத்தின் சீரிய வரலாற்றில் ஒவ்வொரு நாளுமே பெருமைக்குரியவைதான். இன்றைய இனிய நாள் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக அயராது உழைத்து-இன்றும் நம்மை வழிநடத்துகிற ஆற்றல் மிக்க தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 60ஆம் ஆண்டு நிறைவு பெறுகிற தருணம் இது.

சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13 முறை போட்டியிட்டவர். 13 முறையும் வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாதவர். அத்தனை தேர்தல்களிலும் அண்ணா கண்ட ஒரே இயக்கம், அண்ணா தந்த ஒரே சின்னம் என தி.மு.கழகத்தையும் உதயசூரியனையும் வரலாற்று அடையாளங்களாகக் கொண்டு களம் கண்டு வெற்றிகளைக் குவித்தவர். இந்தப் பெருமை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடையாது என்பது தனிச் சிறப்பு.

முதல் தேர்தலிலேயே வெற்றி

முதல் தேர்தலிலேயே வெற்றி

1957ஆம் ஆண்டு தி.மு.கழகம் முதன்முதலாகப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. அதுவும், 1956ஆம் ஆண்டு திருச்சியிலே நடந்த கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் திரண்டிருந்த தொண்டர்களிடம் ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் பெருவாரியான தொண்டர்கள் தீர்ப்பளித்தபடி, 1957ல் தேர்தல் களம் கண்டது. அந்தத் தேர்தலில் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட 15 பேர் சட்டமன்றத்திற்கும், திரு.ஈ.வெ.கி.சம்பத், திரு.தர்மலிங்கம் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குளித்தலையில் களம் கண்ட முதல் தேர்தலிலேயே வென்ற தலைவர் கலைஞர் அவர்கள் 1957 ஏப்ரல் 1ஆம் நாள் சட்டமன்றத்தில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார்.

வெற்றி பெற்ற சாதனையாளர்

வெற்றி பெற்ற சாதனையாளர்

அதன் 60ஆம் ஆண்டு நிறைவு விழாதான் இன்று. 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 19671, 1971 தேர்தல்களிலே சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணாநகர், 1989, 1991 தேர்தல் களங்களில் துறைமுகம், 1996, 2001, 2006 என மும்முறை சேப்பாக்கம், 2011ல் தன்னை வளர்த்தெடுத்த திருவாரூர், 2016ல் மீண்டும் அதே திருவாரூர் தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையுடன் இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றி பெற்ற சாதனையாளர்தான் நம் தலைவர்.

பேருந்துகள் நாட்டுடைமை

பேருந்துகள் நாட்டுடைமை

முதன்முதலில் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியைச் சேர்ந்த நங்கவரம் உழவர்களின் உரிமைப்போராட்டத்தில் அவர்களுடன் நேரடியாகக் களத்தில் பங்கேற்றதுடன், அது தொடர்பாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்து ஆட்சியாளர்களின் கவனத்தை அதன்பக்கம் திருப்பியவர் நம் தலைவர், கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையிலும் ஆளுங்கட்சி வரிசையிலும் மாறி மாறி அமர்ந்தபோதும் தன் சிந்தனையால் சொல்லால் செயல்திறத்தால் சட்டமன்ற வரலாற்றில் தனித்துவமான முத்திரைகளைப் பதித்தவர்.

எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளுந்தரப்பின் கவனத்திற்கே வராமல் இருக்கும் மக்கள் பிரச்சினைகளை முன்வைப்பதும், ஆளுங்கட்சியாக இருந்தால் மக்களின் கோரிக்கைக்கு முன்பாகவே அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதும் தலைவர் கலைஞர் அவர்களின் தனிச்சிறப்பு. அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை-போக்குவரத்துத் துறைக்கு அமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தபோதுதான், இந்தியாவிலேயே முதன்முதறையாக தமிழகத்தில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

கோப கணைகளுக்கு நகைச்சுவை பதில்

கோப கணைகளுக்கு நகைச்சுவை பதில்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் அவரது தோளில் சுமத்தப்பட்ட நிலையில் குடிசைமாற்று வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கை ரிக் ஷா ஒழிப்பு, கண்ணொளித்திட்டம், தொழுநோய் மறுவாழ்வு இல்லம் என பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்கு வாய்த்த காலங்களில் பெண்களுக்கான சொத்துரிமை, சமத்துவபுரம், அனைத்து சாதியினரும் அர்ச்சராவதற்கான சட்டம், 69% இடஒதுக்கீடு, சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணமில்லாத் தொழிற்கல்வி, நுழைவுத்தேர்வு ரத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமைச்சரவை, திருநங்களைகளுக்குத் தனி வாரியம், விவசாயிகளின் பயிர்க் கடன் முழுவதும் தள்ளுபடி என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் நிலைநாட்டும் திட்டங்களை செயல்படுத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
எத்தனையோ அனல் பறக்கும் வாதங்களை சட்டமன்றத்தில் எடுத்து வைத்திருக்கிறார். இயக்கத்தின் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு ஆணித்தரமாக பதில் அளித்திருக்கிறார். அவர் மீது கோபத்துடன் வீசப்பட்ட கணைகளுக்கு புன்சிரிப்புடன் நகைச்சுவையாகப் பதில் தந்திருக்கிறார்.

சூத்திரர்களின் பஞ்சமர்களின் அரசு

சூத்திரர்களின் பஞ்சமர்களின் அரசு

இது மூன்றாம் தர அரசு என கழக ஆட்சியை எதிர்க்கட்சி உறுப்பினர் விமர்சித்தபோது, நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர். முதல்வர் பொறுப்பில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், "இது மூன்றாம் தர அரசு அல்ல. நாலாந்தர அரசு. ஆம்.. நான்காம் வருணமான சூத்திரர்களின் பஞ்சமர்களின் அரசு" என்று பக்குவமாகப் பதில் அளித்தவர். இடியையும் மின்னலையும் கண்டு பதறாமல், அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் கலை அறிந்தவர் அவர்.
கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோவில் வைரவேல் களவு போனது குறித்தும், அறங்காவல் அதிகாரி சுப்ரமணியம் மர்ம மரணம் குறித்தும் கேள்வி எழுப்பியதுடன், தலைவர் கலைஞர் அவர்கள் நீதி கேட்டு நெடும்பயணமும் மேற்கொண்டார். அதன்பின நடந்த திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தில் கடைசி சுற்று வரை கழகம் முன்னேறியது. ஆனால், சொற்ப வாக்குகளில் ஆளும்தரப்பின் வெற்றி அறிவிப்பு வெளியானது.

ஆளுந்தரப்பினரையும் சிரிக்க வைத்தார்

ஆளுந்தரப்பினரையும் சிரிக்க வைத்தார்

இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய ஆளுந்தரப்பு உறுப்பினர், "சிலர் திருச்செந்தூர் வரை நடைபயணம் சென்றார்கள். ஆனால் இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் திருச்செந்தூர் முருகனே எங்கள் பக்கம்தான் இருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது" என்றார். அதற்கு பதிலளித்த தலைவர் கலைஞர் அவர்கள், "முருகனின் வேல் மட்டும்தான் காணாமல் போனது என்று நினைத்தோம். முருகனே காணாமல் போய்விட்டார் என்பது இப்போது தெரிகிறது" என்று பதிலளித்து ஆளுந்தரப்பினரையும் சிரிக்க வைத்தார்.
சட்டப்பேரவையில் மட்டுமின்றி, சட்ட மேலவையிலும் உறுப்பினராக இருந்த சிறப்பு தலைவர் கலைஞர் அவர்களுக்குண்டு. எந்த அவையில் இருந்தாலும் அவருடைய சட்டமன்றப் பணிகள் மக்கள் நலன் சார்ந்தும், ஜனநாயகத்தின் மாண்புகளை மதிக்கும் வகையிலும் இருக்கும்.

வைரம் போல மிளிரும்-ஒளிரும்!

வைரம் போல மிளிரும்-ஒளிரும்!

கழகம் ஆளுங்கட்சியாக இருந்தபோது எதிர்க்கட்சிகள் எவ்வளவோ அமளிதுமளிகளை உண்டாக்கியபோதும், அவையின் கண்ணியத்தை காப்பதற்காக பேரவைத்தலைவர் நடவடிக்கைகளை எடுத்தபோதும், அவற்றையெல்லாம் கடந்து, எதிர்க்கட்சியினர் இல்லாமல் அவை நடைபெறக்கூடாது என அவர்களையும் பங்கேற்கச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். உடல்நலக்குறைவால் தலைவர் அவர்கள் இப்போது சட்டமன்ற நிகழ்வுகளில் முன்புபோல பங்கேற்க முடியாமல் இருந்தாலும், 60ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் அவர் செயல்பட்ட விதமும் தனித்துவமும் பேராற்றலும் பேரவையிலே பலம் மிக்க எதிர்க்கட்சியாக விளங்கும் தி.மு.க உறுப்பினர்களுக்கு இன்றைக்கும் வழிகாட்டுகிறது. விரைந்து நலன்பெற்று மீண்டும் அவர் குரல் அங்கே ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்திருக்கிறது. பெருமைமிக்க தமிழக சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள் என்றென்றும் வைரம் போல மிளிரும்-ஒளிரும்! இவ்வாறு ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Stalin writes letter to DMK workers on the Diamond Jubilee of DMK Leader Karunanidhi. He believes that Karunanidhi will be getting well and work in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X