For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளாஷ்பேக் 2014: கலர் மாறிய குஷ்பு, நெப்போலியன், ஜே.கே.ரித்திஷ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வருவது புதிய விசயமில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டியபின்னர் தமிழகத்தை ஆண்ட முதல்வர்களான அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய அனைவருமே சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான்.

அண்ணாவும், கருணாநிதியும் திரைக்குப் பின்னால் கோலோச்சியவர்கள் என்றால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அன்றைக்கு மிகப்பெரிய நடிகர்களாக மக்கள் மனங்களில் இடம்பிடித்து தமிழகத்தின் முதல்வர்கள் சிம்மாசனத்தை அலங்கரித்தனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சினிமா மீது இருந்த மோகம் வேறு. நடிகர் நடிகையர்களை தெய்வங்களாகவே போற்றினர். அவர்கள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு வாக்கு அளித்த ரசிகர்கள்தான் அன்றைக்கு இருந்தனர்.

ஆனால் இன்றைய சினிமா ரசிகனின் ரசனை மாறிவிட்டது. ஊடகங்களின் வளர்ச்சி, அறிவுப்பசிக்கு தீனி போடும் சமூகவலைதளங்கள் என சினிமா ரசிகர்களின் ரசனையும் மாறிவிட்டது. எனவேதான் இன்றைக்கு அரசியலுக்கு வரும் நடிகர்கள் அனைவரும் வெறும்பிரச்சார நாயகர்களாவே பார்க்கப்படுகின்றனர்.

நடிகர், நடிகையர்களுக்கு கூடுகின்றன கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாமல் போவதற்காக காரணம், ரசிகர்களின் முதிர்ச்சி மட்டுமல்ல வாக்காளர்களின் விரிவடைந்த அறிவும்தான்.

இந்த ஆண்டு இரண்டு சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு அரங்கேறியது. அதைத்தான் இந்த பிளாஷ் பேக் கட்டுரை அலசுகிறது.

கோவில் கட்டிய ரசிகர்கள்

கோவில் கட்டிய ரசிகர்கள்

90களில் குஷ்புவின் நடிப்பை பார்த்து கோயில் கட்டியவர்கள்தான் தமிழக ரசிகர்கள். அன்றைக்கு இருந்த சினிமா ரசிகர்களின் ரசனை இன்றைக்கு மாறிவிட்டது என்பதை குஷ்புவும் நன்றாக உணர்ந்துதான் இருக்கிறார்.

திமுகவில் குஷ்பு

திமுகவில் குஷ்பு

சினிமா வாய்ப்பு மங்கவும், ஜெயாடிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தினார். இதனால் அதிமுகவில் சேரப்போகிறார் குஷ்பு என்று கிசுகிசு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பரவியது. சிலரோ காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் என்றனர். ஆனால் இடது பக்கம் சிக்னல் காட்டி, வலது பக்க இண்டிகேட்டரை போட்ட குஷ்பு, கடைசியில் நேராக போய் திமுகவில் இணைந்து விட்டார்.

பேனா கொடுத்த ஸ்டாலின்

பேனா கொடுத்த ஸ்டாலின்

கடந்த 2010 மே 14-ஆம் தேதி கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். அப்போது குஷ்பு கையெழுத்து போட பேனா கொடுத்தது ஸ்டாலின்தான்.

தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரம்

கட்சியின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட குஷ்பு, தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். 2011 சட்டமன்ற தேர்தலில் சூறாவளி பயணம் மேற்கொண்டார். அவர் போகும் இடமெங்கும் கூட்டம் அள்ளியது.

சர்ச்சை கருத்துக்கள்

சர்ச்சை கருத்துக்கள்

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஸ்டாலின் குறித்து குஷ்பு அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது. திருச்சிக்கு சென்ற அவர் மீது, திமுகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. ஆனாலும், அவர் திமுகவிலேயே நீடித்தார்.

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல்

2014 லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட குஷ்பு வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. அதை குஷ்பு மறுத்தாலும், சீட் கிடைக்காததில் அவர் அதிருப்தியில் இருந்ததாகவே தகவல்கள் வெளியாயின. தேர்தல் பிரச்சாரத்திலும் சில இடங்களில் குஷ்பு சொதப்பியதால் ஓரம்கட்டப்பட்டார்.

பாஜக ஆதரவு நிலை

பாஜக ஆதரவு நிலை

திமுகவில் இருந்தாலும் பாஜக தலைவர்களின் வெற்றிக்கு வாழ்த்து கூறியதால் பாஜகவில் குஷ்பு இணையலாம் என்ற பேச்சு அடிபட்டது. வழக்கம்போல அதை மறுத்தார் குஷ்பு.

விலகிய குஷ்பு

விலகிய குஷ்பு

ஒரு கட்டத்தில் திமுகவை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் என்ற நிலை வரவே கடந்த ஜூன் மாதம் கனத்த இதயத்துடன் திமுகவைட்டு வெளியேறுவதாக கருணாநிதிக்கு கடிதம் அனுப்பினார்.

திமுக தந்த அழுத்தம்

திமுக தந்த அழுத்தம்

என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை திமுகவில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திமுகவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார் குஷ்பு

கட்சி தாவமாட்டேன்

கட்சி தாவமாட்டேன்

இதே குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் எந்தக் கட்சிக்கும் தாவவில்லை. எனவே யாரும் அப்படி கற்பனை பண்ண வேண்டாம். கருணாநிதி எனக்கு தந்தை போன்றவர். அதைத் தாண்டி வேறு எதையும் எண்ணியதில்லை என்று குறிப்பிட்டார்.

டிவி நிகழ்ச்சிகளில்

டிவி நிகழ்ச்சிகளில்

திமுகவில் இருந்து விலகிய பின்னர் வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் என பிஸியாகவே இருந்தார் குஷ்பு. பாஜக எம்.பி தருண் விஜய்க்கு தமிழ்நாட்டில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றதன் மூலம் தேசிய கட்சியில் சேரப்போவதற்கான சிக்னலை காட்டினார்.

சோனியா உடன் சந்திப்பு

சோனியா உடன் சந்திப்பு

இந்த முறை பாஜக பக்கம் போவது போல போக்கு காட்டிய குஷ்பு நவம்பர் 26ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

நிம்மதியா இருக்கேன்

நிம்மதியா இருக்கேன்

காங்கிரஸ் கட்சியையும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களையும் பார்த்து வளர்ந்தவள். அப்படி இருக்க வேறு கட்சியில் இருந்தேன். எனினும், என் மனதில் ஏதோ உறுத்தலாகவே இருந்தது. இன்று காங்கிரஸில் இணைந்த பிறகு மனதில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது என்றார்.

புலிகளுக்கு எதிரான கருத்து

புலிகளுக்கு எதிரான கருத்து

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த உடனேயே விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளே என்று கருத்து சொல்லி சர்ச்சையை கிளப்பினார். கற்பு முதல் விடுதலைப்புலிகள் வரை சர்ச்சையாகவே பேசி வளர்ந்தவர்தானே குஷ்பு.

கட் அவுட் வைத்த காங்கிரஸ்

கட் அவுட் வைத்த காங்கிரஸ்

திமுகவில் மூன்றாண்டு காலம் இருந்தபோது பொதுக்கூட்டத்தில் பேசப்போனால் போஸ்டரில் பேரும்,முரசொலியில் அறிவிப்போடும் நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உடன் குஷ்புவிற்காகவே சிறப்பு பொதுக்கூட்டத்தை விருதுநகரில் ஏற்பாடு செய்த காங்கிரசார், கட் அவுட் வைத்து குஷ்புவை வரவேற்றனர்.

கரைசேர்ப்பாரா?

கரைசேர்ப்பாரா?

நாட்டுக்கு நல்லது செய்வதற்காக காங்கிரஸில் சேர்ந்துள்ளேன். கட்சி எனக்கு தரும் பணி தமிழகம் அல்லது வேறு எங்கு இருந்தாலும் அதனை மேற்கொள்வேன் என்பது குஷ்புவின் கருத்து. 2021ல் குஷ்புதான் தமிழக முதல்வர் என்றும் ஜெயலலிதாவிற்கு கூடும் கூட்டத்தைப்போல குஷ்புவிற்கு கூடும் கூட்டமே இதற்கு சாட்சி என்றும் கூறுகின்றனர்.

விலகிய நெப்போலியன்

விலகிய நெப்போலியன்

கிழக்கு சிவக்கயிலே... கீரை அறுக்கையிலே... என்று பிரசாரத்தில் பாட்டு பாடி ஓட்டு கேட்டே எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும் வெற்றி பெற்றார் நெப்போலியன். அவரை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தது திமுக.

கோஷ்டியில் சிக்கி

கோஷ்டியில் சிக்கி

கே.என்.நேரு மூலமாகத்தான் திமுகவிற்குள் நுழைந்தார் நெப்போலியன். எம்.எல்.ஏ, எம்.பி. மத்திய அமைச்சர் என்று உயரவே வளர்த்து விட்டவருக்கே வளர்ச்சி பிடிக்கவில்லை கருத்து வேறுபாடு களை கட்டியது.

அழகிரி ஆதரவு நிலை

அழகிரி ஆதரவு நிலை

ஸ்டாலின் ஆதரவாளரான கே.என்.நேரு உடனான பிரச்சினையில் அழகிரி ஆதரவு நிலையை எடுத்தார் நெப்போலியன். திமுகவை விட்டு நீக்கப்பட்ட அழகிரிக்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதி பிறந்தநாள் வாழ்த்து சொன்னதன் மூலம் அப்போதே நெப்போலியலின் நகர்வு திமுகவினருக்கு புலப்பட ஆரம்பித்து விட்டது.

விலகல் கடிதம்

விலகல் கடிதம்

திமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சனிக்கிழமையன்று கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். உடனே சென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவரது விலகலும், இணைவும் ஒரே நாளில் நிகழ்ந்தது போல தெரிந்தாலும் பல மாதங்களாக பேச்சு வார்த்தை நிகழ்ந்துள்ளது.

ஜனநாயகம் செத்துப்போச்சு

ஜனநாயகம் செத்துப்போச்சு

திமுகவில் எனது கடமைகளை செய்யக்கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. திமுகவில் ஜனநாயகம் என்பதே கிடையாது" என பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் நெப்போலியன்.

ரித்திஷ் வளர்ச்சி

ரித்திஷ் வளர்ச்சி

இதேபோல திமுகவில் இருந்து இந்த ஆண்டு விலகிய இன்னொரு நடிகர்(!) ஜே.கே.ரித்திஷ். நாயகன் படத்தில் மூலம் சினிமா நடிகராக தன்னை காட்டிக்கொண்ட ரித்திஷ், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அள்ளி இறைத்து வள்ளலாக காட்டிக்கொண்டார்.

எம்.பி தேர்தலில் போட்டி

எம்.பி தேர்தலில் போட்டி

கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராமநாதாபுரம் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கியது திமுக. வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் அடிஎடுத்து வைத்தார் ரித்திஷ். 5 ஆண்டுகாலம் எம்.பியாக இருந்த அவர், கடந்த ஜனவரியில் அழகிரியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னதால் ஓரம்கட்டப்பட்டார்.

அதிமுகவில் ரித்திஷ்

அதிமுகவில் ரித்திஷ்

திமுகவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் விலகிய ரித்திஷ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

நடிகர்களின் கலர் மாற்றம்

நடிகர்களின் கலர் மாற்றம்

திமுகவில் இருந்து நடிகர்கள் விலகுவது புதிதல்ல.. எம்.ஜி.ஆர் காலம் தொட்டே இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு திமுகவில் இருந்து விலகிய குஷ்பு, நெப்போலியன்,ரித்திஷ் தங்களின் வண்ணங்களை மாற்றிக்கொண்டு எதிர் எதிரான பாதைகளில் தங்களின் பயணத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் அரசியல் கடலில் கரையேறுவார்களா? காலம்தான் பதில் சொல்லும்.

English summary
Various film stars changed their loyalty from their parent parties to some other parties in the year 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X