For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை இல்லாத தமிழக காவல்துறை: ராமதாஸ் சாடல் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காவல்துறைக்கு நிலையான தலைமை இயக்குனரை உடனே நியமிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக காவல்துறைக்கு கடந்த 10 மாதங்களாக தலைமை இயக்குனர் நியமிக்கப்படாத நிலையில், இப்போதைய பொறுப்பு இயக்குனர் டி.கே.இராஜேந்திரனுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்கு எந்த வகையிலும் துணையாக இருக்காது.

 state government immediately appointed for Director General of police- ramadoss

ஓர் அமைப்பு திறமையாக செயல்படுவதற்கு திறமையான அதிகாரியும், போதுமான அதிகாரங்களும் அவசியமாகும். ஆனால், தமிழக காவல்துறைக்கு தலைமையே இல்லை என்பது கேலிக்குரியதாகும். தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குனராக இருந்த அசோக் குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைமை இயக்குனர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரிடம் தான் அப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கருதியதால் கடந்த 10 மாதங்களாக காவல்துறை தலைமை இயக்குனர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

மாறாக, இப்போதுள்ள அதிகாரிகளில் பணி அனுபவத்தில் மிகவும் இளையவர் என்று கூறப்படும் டி.கே.இராஜேந்திரன் உளவுப் பிரிவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரிவு தலைமை இயக்குனர் பதவி அவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அவர் இம்மாதம் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், புதிய காவல்துறை தலைமை இயக்குனர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யாமல் டி.கே. இராஜேந்திரனுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதனால் தமிழக காவல்துறை தலைமை இல்லாமல் மேலும் 3 மாதங்கள் செயல்பட வேண்டும். இது தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை மிகக்கடுமையாக பாதிக்கும்.

காவல்துறை தலைமை இயக்குனராக தகுதியுடையவர்களை நியமிப்பது அரசின் உரிமை. தமிழக அரசு நினைத்திருந்தால், தலைமை இயக்குனர் நிலையில் உள்ள அர்ச்சனா இராமசுந்தரம், கே.இராதாகிருஷ்ணன், கே.பி. மகேந்திரன், எஸ். ஜார்ஜ், டி.கே.இராஜேந்திரன் ஆகியோரில் ஒருவரை கடந்த செப்டம்பர் மாதமே புதிய தலைமை இயக்குனரை நியமித்திருக்கலாம். அவ்வாறு ஒருவரை நியமித்திருந்தால் பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அவருக்கு இரு ஆண்டுகள் பணிக்காலம் கிடைத்திருக்கும். இது காவல்துறையை சீரமைக்க உதவியிருக்கும். இப்போதாவது தகுதியான ஒருவரை புதிய காவல்துறை தலைமை இயக்குனராக நியமித்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதன் பின்னணியில் சதி உள்ளது.

தமிழக காவல்துறையில் தலைமை இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரிகளில் அர்ச்சனா, ஜார்ஜ், இராதாகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த 3 மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். மகேந்திரனுக்கு மட்டுமே 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணிக்காலம் உள்ளது. எனவே, இப்போதைய நிலையில் அவரைத் தான் புதிய தலைமை இயக்குனராக நியமிக்க வேண்டும். ஆனால், மிகவும் நேர்மையான, திறமையான அதிகாரியான அவரை தலைமை இயக்குனராக நியமிக்க ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேர்தல் பணிகளுக்கான காவல்துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட அவரது பணிகளை தேர்தல் ஆணையம் பாராட்டியிருக்கிறது. அவர் தங்களின் விருப்பம் அறிந்து செயல்பட மாட்டார் என்பதாலேயே, தற்போது கூடுதல் தலைமை இயக்குனர்களாக இருக்கும் அதிகாரிகளில் சிலருக்கு அடுத்த ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கி, அவர்களில் தங்களுக்கு வசதியான ஒருவரை புதிய தலைமை இயக்குனராக நியமிக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கு வசதியாகவே தலைமை இயக்குனர் பதவி மேலும் 3 மாதங்கள் காலியாக வைக்கப்படுகிறது.

இதற்கு முன் கே.இராமானுஜத்தை தலைமை இயக்குனராக நியமிக்க ஆட்சியாளர்கள் தீர்மானித்த போது, அவரை விட அதிக அனுபவம் உள்ள அதிகாரிகள் பலர் இருந்ததால், 2011-ஆம் ஆண்டு மே மாதம் அவரை பொறுப்பு தலைமை இயக்குனராக நியமித்தனர். அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் பொறுப்பு தலைமை இயக்குனராக பணியாற்றிய அவர், ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டு மேலும் இரு ஆண்டுகள் அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கப் பட்டார்.

இவ்வாறாக தங்களுக்கு விருப்பமானவர்களை நியமிப்பதற்காக அடிக்கடி காவல்துறை தலைமை இயக்குனர் பதவி காலியாக வைக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 25 மாதங்கள் காவல்துறை தலைமை இல்லாமல் இருந்திருக்கிறது. இனியும் இந்த நிலை தொடரக்கூடாது. எனவே, காவல்துறைக்கு தகுதியும், திறமையும் உள்ள ஒருவரை புதிய தலைமை இயக்குனராக உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss urges state government immediately appointed for Director General of police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X