For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதி கொலைக்கு, தமிழ் சினிமாவும் காரணம்.. வைரலாகும் கையெழுத்து இயக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுப்பதை காதல், ஹீரோயிசம் என காட்டி இளைஞர்கள், இளம் பெண்கள் மனதில் நஞ்சை கலக்கும் சினிமா காட்சிகளுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.

இந்த கையெழுத்து இயக்கத்தில் சேர்ந்து கையெழுத்திட வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வேண்டுகோள்விடுத்து வருகிறார்கள்.

Stop Glorification of Stalking in Tamil Films! Signature campaign

மனதுக்கு பிடித்த பெண்ணிடம், ஒரு ஆண், தனது காதலை சொல்லி, அது மறுக்கப்பட்டாலும்கூட, அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுப்பதும், அதை பார்த்து அந்த பெண் மயங்கி காதல் வசப்படுவதுமாக தமிழ் சினிமாவில் காட்சிகள் இடம் பெறுவது காலம் காலமாக நடந்து வருகிறது.

உண்மையிலேயே அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை எந்த இயக்குநரும் வெளிக்காட்டியது கிடையாது. மாறாக ஆணின் ஆதிக்க மனப்பான்மையில் இருந்தே அந்த காட்சிகள் விரியும். ரசிகர்களும் விசிலடித்து மகிழ்வார்கள். ஆனால் நிஜத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த பெண், வெளியே சொல்லவும் முடியாமல், எதிர்க்கவும் பயந்து, கூனி குறுகித்தான் தெருவில் நடமாடுவார்.

சுவாதி கொலை வழக்கு இந்த விவகாரத்தை தற்போது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கொலையாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்குமார், சுவாதியை தொடர்ந்து ஃபாலோ செய்து வந்தது விசாரணையில் அம்பலமானது. சினிமா காட்சிகள் அவருக்கு இந்த எண்ணத்தை கொடுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில்தாந், சேஞ்ச் என்ற கையெழுத்து இயக்க வெப்சைட்டில், ஐஸ்வர்யா என்ற பெண், பின்தொடரும் காதல் சினிமா காட்சிகளுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பின்வரும் வரிகளில் பாருங்கள்:

பெண்களை வன்தொடர்வதை (Stalking) சரியென சித்தரிக்காதீர்!

காலணி மாட்டித் தெருவில் இறங்கிய போது, எதிரில் தென்பட்ட முகம் - நேற்று கடைத்தெருவில் பார்த்த முகமா? இல்லை, இருக்க வாய்ப்பில்லை. சற்றே கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறீர்கள் . அவனே தான்! நேற்று கடைத்தெருவில்; காலை வீட்டின் எதிரில்; இப்போதோ கல்லூரியின் முன்னால். போகும் இடமெல்லாம் வருகின்றான். ஏன், காய்கறி வாங்கும் போது கூட அவன் உங்கள் பின்னால்.
வெறும் உறுத்தல், அச்சமாய் மாறுகின்றது.

திடீரென ஒரு நாள் எதிரே வந்து காதலென்கிறான். வேண்டாம் என்கிறீர்கள், விடவில்லை. விருப்பம் இல்லை என்று எடுத்துரைக்கிறீர்கள், அதற்கும் அவன் செவிசாய்க்கவில்லை. விடாமல் பின்தொடர்கிறான், விதிர்விதிர்த்து போகிறீர்கள். ஊணில்லை, உறக்கமில்லை, வேலையில் கவனமில்லை, வீட்டை விட்டு வெளியே வரவே தைரியமில்லை. அங்கே அவன் காத்திருந்தால்? முதலில் நிம்மதி போகிறது, பிறகு பாதுகாப்பும் பறிபோகிறது!

இது ஏதோ திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியல்ல. மிகச் சாதாரணமாக எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்கக்கூடிய, ஏன், நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. அண்மையில், ஸ்வாதி என்ற மென்பொறியாளர், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்ததாகக் கைதான நபர், ஸ்வாதியை இரண்டு மாதங்கள் வன்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் 'Stalking' எனப்படும் வன்தொடர்தல், ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக பின்தொடர்வதாகும். இ.பீ.கோ. 354D பிரிவின் கீழ், "ஒரு பெண்ணை, அவள் விருப்பம் இல்லை என்று தெளிவாக தெரிவித்த பின் தொடர்பு கொள்வதோ, தொடர்பு கொள்ள முயற்சி செய்வதோ, பின்தொடர்வதோ," மூன்றிலிருந்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்குரிய ஒரு கடுங்குற்றமாகும். ஆனால், சமூக அழுத்தங்களுக்குப் பயந்து இந்த குற்றம் குறித்து பெரும்பாலான பெண்கள் புகார் செய்வதில்லை.

ஸ்வாதியின் மரணத்திற்கோ, அல்லது வன்தொடர்தலால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற பெயரறியா பெண்களின் வேதனைகளுக்கோ திரைப்படங்களே காரணம் என்று கூறவில்லை. ஆனால், ஊடகங்களில் இப்படிப் பெண்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களைப் பின்தொடர்வதைக் 'காதல்' என்றும், நடைமுறையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் போன்றும் தொடர்ந்து சித்தரிப்பதால், இளைய சமூகம் அதை இயல்பான ஒன்றாகக் கருதத் தொடங்குவதற்கு வழி செய்கின்றன.

தமிழ்த் திரைப்படங்கள், பொதுவாக இப்படிப் பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு எதிராகக் காதல் என்ற பெயரில் பின்தொடர்ந்து செல்வதை சரி என்பது போலவும், அதைத் தான் பெண்கள் விரும்புகிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கின்றன. அந்தச் செயலின் தீவிரமும், அது ஒரு குற்றம் என்பதும், அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தான விளைவுகளும் திரைப்படங்களில் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

இதன் முக்கியமான ஆபத்து என்னவென்றால், இத்தகைய காட்சிகளைப் பிஞ்சுக் குழந்தைகளும், பதின்ம வயதினரும் இடையறாது காண்கிறார்கள். அவர்களின் மனதில் இது பசுமரத்தாணியாய்ப் பதிகிறது. இது சரியென்றும், இப்படிச் செய்வதால் ஒரு பெண் எப்படியும் தன்னைக் காதலித்து விடுவாள் என்ற எண்ணமும் அவர்கள் மனதில் விதைகிறது. மேலும், ஒரு பெண்ணிற்கு 'விருப்பமில்லை' என்று கூறும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு, அவளின் விருப்பங்களும் அதில் உள்ள உண்மையும் புறக்கணிக்கப்படுகின்றன; விருப்பத்திற்கெதிராய்ப் பின்தொடரப்படுவதால் அவள் அடையும் வேதனைகளும், பயமும் துச்சமாய் ஆக்கப்படுகின்றன.

சமுதாய மாற்றங்கள் அடிமட்ட அளவில் தொடங்கப்பட வேண்டுமென்பது உண்மையே. ஆனால், அத்தகைய மாற்றங்களை வெகு விரைவில் முடுக்கக்கூடிய ஆற்றல் திரைப்படத்துறை போன்ற வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு. திரைப்பட நட்சத்திரங்களும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மனது வைத்தால், இத்தகைய நல்மாற்றத்தை ஏற்படுத்தி, வன்தொடர்தல் காதல் அல்ல என்ற உண்மையை இளைய சமுதாயத்திற்கு உணர்த்த முடியும்.
திரைப்படத் துறையினருக்கு எங்களது மனமார்ந்த வேண்டுகோள்:

1.தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் / இயக்குனர்கள்: ஒரு பெண்ணை வன்தொடர்தல் சரி என்றோ, காதல் என்றோ, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்றோ சித்தரிக்காதீர்கள்.

2.நடிகர்கள்: காதல் என்கிற பெயரில் வன்தொடர்வதை நியாயப்படுத்தும் கதாபாத்திரங்களை ஏற்காதீர்கள்.

3.நடிகைகள்: வன்தொடர்பவர் மீது காதல் வயப்படுவதே இயல்பென்பது போன்ற பாத்திரங்களை மறுத்திடுங்கள்.

ஸ்வாதியின் மரணம், வெறும் நேற்றைய தலைப்புச் செய்தியாய் ஆகிவிடக்கூடாது. தமிழ்நாட்டை பெண்களுக்குப் பாதுகாப்பான ஒரு இடமாக்க நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமான வழிகளை முன்னெடுப்போம். குறிப்பு: எங்கள் நிலைப்பாட்டைக் குறித்து சந்தேகங்களோ கேள்விகளோ உண்டானால் தயவுசெய்து இந்த FAQ பகுதியைக் காண்க: https://goo.gl/87tlY6. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கையெழுத்து இயக்க லிங்க் இதோ

English summary
We do not blame films as the sole cause of what happened to Swathi and many other nameless victims. But research shows that films' constant portrayal of the pursuit of an unwilling woman as entirely normal or ‘romantic' behaviour can create a society that easily condones stalking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X