‘பீட்டாவை தூக்கு.. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கு’... திருச்சியில் கொந்தளித்த மாணவ-மாணவிகள்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி திருச்சியில் மாணவ-மாணவிகள் பேரணி நடத்தினார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை முழங்கினார்கள்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்துள்ள விலங்கு ஆர்வலர் அமைப்பான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி திருச்சியில் மாணவ-மாணவிகள் பேரணி நடத்தினார்கள்.

திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் செயிண்ட் ஜோசப் பள்ளி அருகில் ஒன்று கூடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

தமிழ் பாரம்பரியத்தில் இருக்கும் ஒரு விளையாட்டை ஏன் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு மிக மோசமாக இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

எதிர்ப்பு

வடநாட்டு பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டில் தமிழ் பண்டிகையை கொண்டாடவும், பாரம்பரிய விளையாட்டை விளையாடவும் தடை விதித்துள்ளது மிக இழிவான செயல் என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமூக வலைத்தளம்

இவ்வளவு மாணவர்களும் சமூக வலைத்தளங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையிலே தன்னெழுச்சியாக ஒன்றிணைந்தனர். இதில் 11 மாணவர் அமைப்புகள் பங்கேற்றன. மாணவர்கள் மட்டுமல்லாமல் நூற்றுக் கணக்கான மாணவிகளும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்தனர்.

ஆர்ப்பரிப்பு

மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் ஆர்ப்பரிப்புடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசே மாநில அரசே ஜல்லிக்கட்டை நடத்து என்ற கோஷத்தை மாணவர்கள் எழுப்பினார்கள். பேரணியின் வழியில் ஆங்காங்கே அமர்ந்து மறியல் செய்து பேரணியை நடத்தினார்கள்.

பீட்டாவிற்கு தடை

தமிழர் பண்டிகையான பொங்கல் திருவிழாவின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கடை நடத்த வேண்டும் என்று பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் ஆவேசமாக கூறினார்கள்.

 

 

திருப்பூர் போராட்டம்

இதே போன்று திருப்பூரில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி 2000 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சியின் அருகில் ஒன்று கூடிய மாணவர்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

English summary
College student organized rally in Trichy to support Jallikkattu today.
Please Wait while comments are loading...