For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து கொலைகள்.. பலிபீடங்களாகும் தமிழக பள்ளிகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறையில் 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் நிலக்கோட்டை அரசு கள்ளர் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சகமாணவன் மூர்க்கத்தனமாக தாக்கியதில் மாணவன் வினோத் என்பவன் உயிரிழந்தான்.

Students stabbed to death and Suicides in TN school

இது கொலையா? விபத்தா? என்கிற தர்க்கங்கள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க,பந்தல்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவன் பாஸ்கர் கொடூரமாக கொல்லப்பட்டதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.

கொடூர கொலைக்கு காரணம்

பந்தல்குடி அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் மாரீஸ்வரன்தான் கொடூரமாக குத்தி கொன்றுள்ளான். இந்த மாரீஸ்வரன் மீது ஏற்கனவே 2 மாணவிகளையும், பாஸ்கரனையும் கடத்தி சென்றதாக, மாசார்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஓரினச்சேர்ச்சைக்கு மறுத்ததாலேயே மாணவனை கொன்றுள்ளான் மாரீஸ்வரன். பாஸ்கர் மீது நீண்ட நாட்களாவே வன்மம் வைத்திருந்த மாரீஸ்வரன் தனது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டுவிட்டான்.

மாணவர்கள் மோதல்

இந்த கொலைகளும், தாக்குதல்களும் ஒருபுறம் அரங்கேறி வரும் வேலையில் அரக்கோணம் அருகே தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசியல் கட்சி, கொடியை வரைவதில் ஏற்பட்ட போட்டா போட்டி மோதலாக வெடித்துள்ளது. கத்தி, கம்பு, கட்டைகளுடன் பள்ளி மாணவர்கள் தாக்கும் அளவிற்கு போகவே போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தக்கோலம் போலீசார் 11 மாணவர்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் தகராறில் கொலை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தம்மம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 மாணவர்களுக்கு இடையேயான காதல்தகராறில் பிரசாந்த் என்ற மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்பட்டான்.

ஆசிரியர்கள் மீது தாக்குதல்

மாணவர்கள் மோதல், கொலைகள் அரங்கேறுவது ஒருபுறம் இருக்க, பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும்,கொலை செய்யப்படுவதும் மறுபுறம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

அடியாட்களை ஏவி

கடந்த 20ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் பாஸ்கர் ராஜ் என்பவரை மூப்பதுக்கும் மேற்பட்ட குண்டர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அடித்து துவைத்து காயப்படுத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கீழ்படிதலை கற்றுக்கொடுங்கள்

சமீபத்தில் வெளியாக சிங்கம் படத்தில் மாணவனை அடித்த ஆசிரியரை அடிக்க அடியாட்களை ஏவிவிடுவார் பையனின் தந்தை. அந்த குண்டர்களை அடித்து துவைத்த ஹீரோ மாணவனை எப்படி வளர்க்கவேண்டும் என்று மூச்சுவிடாமல் வசனம் பேசுவார்.

திரையில் பார்த்து கைதட்டுவதோடு சரி, மாணவனுக்கு உரிய ஒழுக்கங்களையும், கீழ்படிதலையும் பணக்கார பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சியாக உள்ளது.

பெற்றோர்கள் போராட்டம்

ஆனால் ஆசிரியர் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பெற்றோர்களையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த போராட்டமே சென்னை மாநகர காவல்துறை ஆணையரை பள்ளிக்கு வரவழைத்தது. ஆசிரியரை தாக்கிய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வைத்தது.

ஆசிரியை கொலை

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவன், வகுப்பறையில் இந்தி ஆசிரியை ஒருவரை குத்திக் கொலை செய்தபோது ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுகளால், வெகுண்டு பதற்றப்பட்டது, பயம் கொண்டது.

கல்லூரி முதல்வர் கொலை

சில மாதங்கள் கழித்து தூத்துக்குடியில் கல்லூரி முதல்வரை மூன்று மாணவர்கள் வெட்டிக் கொலை செய்தனர். ஆசிரியர்களை தெய்வத்திற்கு சமமாக பாவித்த காலமெல்லாம் இன்றைக்கு மலையேறிவிட்டது. ஏனெனில் ஆசிரியர் திட்டினாலே போலீசில் புகார் கொடுக்கலாம் என்கிற அளவில்தானே இன்றைக்கு சட்டங்கள் இருக்கின்றன. இதையே மாணவர்களும், பெற்றோர்களும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்கின்றனர்.

மாணவர்கள் தற்கொலை

வன்புணர்வு மற்றும் வகுப்பறை வளாகக் கொலைகளுக்கு நிகராக, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பவை மாணவர்களின் தற்கொலைகள்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தாட்சாயிணி (15), மீனா (15) ஆகியோர் சூளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று மதியம் உணவு இடைவேளையின் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எத்தனை மாணவர்கள் தற்கொலை

இந்த கல்வியாண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறைகளிலும் விடுதிகளிலும் தூக்கிட்டும், விஷமருந்தியும் தற்கொலை செய்து தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இதில் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது நாமக்கல் மாவட்டத்தில்தான். காரணம் அங்குதானே விடுதிகளுடன் கூடிய தனியார் பள்ளிகள் அதிகம்.

மதிப்பெண் மிஷின்கள்

மாணவர்களின் மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுக்கும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், அவர்களுக்கு தேவையான தன்னம்பிக்கை, நல்லொழுக்கம்,நல்ல எண்ணங்களையும், தைரியத்தையும் கற்றுக்கொடுக்க மறந்து விடுகின்றனர். இதனால் பள்ளிவளாகங்களில் தற்கொலைகளும்,கொலைகளும், ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களும் நடைபெற காரணமாகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அரசின் நடவடிக்கை என்ன?

சிதம்பரம் அண்ணாமலை மருத்துவப் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர் நாவரசு கொலையின் போதே நாம் பாடம் கற்றிருக்க வேண்டும். ஆனால் 20 ஆண்டுகளாய் கல்வித்துறையில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டும் மாணவர்களை வழிமுறைப்படுத்தும் முறைகளை மட்டும் கற்பிற்க தவறிவிட்டோம்.

தனி அமைச்சரின் நிலை?

பள்ளிக்கல்வித்துறைக்கு என்று தனி அமைச்சரே இருக்கிறார். ஆனாலும் அவருக்கு மாணவர்களுக்கு அம்மா படம் போட்ட இலவச பை, இலவச லேப்டாப் ஆகியவைகளை மாணவர்களுக்கு கொடுப்பது மட்டுமே தனது கடமை என்று நினைத்து விட்டார் போலும்.

கல்வித்துறையில் கண்காணிப்பு அவசியம்

மாநிலத்தில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க ஆலோசனை நடத்தும் அரசு அதிகாரிகள், கல்வித்துறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள என்ன செய்யப்போகின்றனர். தமிழக பள்ளிகளில் இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டும். அதற்கு கல்வித்துறை சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாகும்.

English summary
13-year-old G Baskar was stabbed with a sharp-edged weapon thrice in the forehead by the assailant at Pandaludi near Aruppukottai even as fellow students watched in horror.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X