For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நேரத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள்... மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் என்கிறார் ராமதாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதால், பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத அவலநிலை தமிழகத்தில் காணப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன்பின்னர் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது தான் வழக்கம். ஆனால், நடப்பாண்டில் புதுமை படைப்பதாக நினைத்துக் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை தமிழக அரசின் தேர்வுத்துறை ஒரே நேரத்தில் நடத்தி வருகிறது. இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

Students suffer as 10th & 12th exams were conducted at the same time : Ramadoss

நடப்பாண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் எழுதுகின்றனர். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதற்கான கட்டமைப்பு வசதிகளையும், தளவாடங்களையும் ஏற்பாடு செய்வது எளிதான ஒன்றல்ல.

மேலும், இத்தேர்வுகளை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், பறக்கும் படையினர் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் பெரும் பணியாகும். இந்த ஏற்பாடுகளை மிகச்சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவடைந்த பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்தும் வழக்கம் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகளில் பொதுவாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள். போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பட்டதாரி ஆசிரியர்களும் இப்பணிக்கு அழைக்கப்படுவர். இவர்களில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள அனைவரும் அதன்பின் நடைபெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்பதால் பொதுத் தேர்வுகளும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெறும். இந்த நேரத்தில் மற்ற வகுப்புகளும் தடையின்றி நடைபெறும்.

ஆனால், இம்முறை இரு தேர்வுகளும் ஒரே காலகட்டத்தில் நடத்தப்படுவது மட்டுமின்றி, 6 நாள் தேர்வு மட்டுமே முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கப்பட்டு விட்டது. இதுவரை 20 பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்து விட்டதால், அப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்று விட்டனர். இன்னொரு பக்கம் கடந்த 19ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளும் தொடங்கி விட்டதால் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனுபவம் இல்லாத ஆசிரியர்களும் பொதுத் தேர்வுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பாடத் தேர்வு முடிவடைந்ததும் அதன் விடைத்தாள்களை பிரித்து அனுப்பும் பணிக்கும், திருத்தும் பணிக்கும் அப்பாடத்திற்கான ஆசிரியர்கள் அனுப்பப்படுவதால், அவர்களுக்குப் பதிலாக கண்காணிப்பு பணியில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதைப் பயன்படுத்திக் கொண்டு தான் ஓசூரில் தேர்வு கண்காணிப்பாளர் பட்டியலில் இல்லாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதும், அவர்கள் வினாத்தாள்களை வாட்ஸ் அப் (ஸ்மார்ட் செல்பேசி) மூலம் அனுப்பி மோசடியில் ஈடுபட்டதும் நடந்தது.

மிகப்பெரிய துரோகம் :
இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றும் அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வுப் பணிக்கும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்பட்டு விட்டதால் அப்பள்ளிகளில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் இம்மாணவர்கள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி இன்று வரை பள்ளிக்கு வருவதும் பாடம் கற்காமல் திரும்பிச் செல்வதுமாக உள்ளனர். ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இதே நிலை தான் தொடரும். ஒரு கல்வியாண்டில் 37 நாட்கள் (26 வேலை நாட்கள்) 4 வகுப்புகளின் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் இருப்பது மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், இரு பொதுத் தேர்வுகளின் முடிவுகளையும் ஒன்றாக வெளியிட்டு ஆட்சியாளர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தேர்வுத்துறை இயக்குனரும், வேறு சில அதிகாரிகளும் நடத்தும் துக்ளக் தர்பார் காரணமாக 35 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதுடன், மோசடிகளும் அரங்கேறியுள்ளன. இதற்கெல்லாம் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இனி வரும் ஆண்டுகளில் கடந்த கால நடைமுறையே கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The PMK founder Ramadoss has said that the students are suffering as 10th & 12th exams were conducted at the same time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X