For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் அடையாளங்களை தூக்கி எறியுங்கள்.. நெடுவாசலில் ஒன்றாக போர்க்குரல் எழுப்புவோம்- தமிழருவி மணியன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் தனித்தனியாக போராடாமல் ஒரே மேடையில் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் அடையாளங்களைத் தூக்கி எறிந்து ஒன்றாகத் திரண்டு ஒரே நாளில், ஒரே மேடையில் நெடுவாசலில் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Tamil aruvi manian statement issues about Neduvasal hydrocarbon project

மத்திய அரசு மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமல், மக்களின் கருத்தைக் கணக்கில் கொள்ளாமல் கூட்டாட்சி முறைக்கும், ஜனநாயக நடைமுறைக்கும் எதிராகத் தன் போக்கில் மேலாதிக்க உணர்வுடன் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை நெடுவாசல் பகுதியில் நடைமுறைப்படுத்த முனைகிறது. காவிரிப் பிரச்சினை முதல் நீட் தேர்வு, இயற்கை எரிவாயுத் திட்டம் வரையில் தமிழக நலன்களுக்கெதிராகவே செயற்படும் மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிரான மக்களின் மன உணர்வுகளின் கொதிநிலைதான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெளிப்பட்டது; இன்று நெடுவாசல் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது.

தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் மாண்வர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கக் கூடிய வகையில் தெருவில் போராட்டக் களத்தில் வந்து நிற்காமல் தங்கள் கவனம் முழுவதையும் தற்சமயம் கல்வியில் மட்டுமே திருப்ப வேண்டும். கலிங்கப்பட்டி ஊராட்சி டாஸ்மாக் கடையை மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்த மாநில அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இன்று உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, கிராமசபைகள் செயற்பட முடியாமற் போயினும் ஹைட்ரொ கார்பன் திட்டத்தால் பாதிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் தனித்தனியாகக் கூடி அத்திட்டத்தை எதிர்த்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு முதலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்தத் தீர்மானங்களை உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு சென்று தடையாணையை நிச்சயமாகப் பெற முடியும்.

பதவிப் போட்டியில் மக்கள் பிரச்சினைகளை மறந்து நிற்கும் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு கடுமையான நிர்பந்தத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் நெடுவாசல் பிரச்சினையில் தனித்தனியாகத் தேதி குறித்து போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அரசியல் அடையாளங்களைத் தூக்கி எறிந்து ஒன்றாகத் திரண்டு ஒரே நாளில், ஒரே மேடையில் போர்க்குரல் எழுப்ப வேண்டும்.

கோடை விடுமுறையில் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி பூரண மதுவிலக்குப் போராட்டத்திலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் ஆக்கபூர்வமான பணிகளிலும் ஈடுபடலாம். மாணவர்களும் இளைஞர்களும் முன்னின்று மேற்கொள்ளும் மக்களுக்கான நற்பணிகளில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். சட்டப்படி ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்குத் தடையாணை பெற காந்திய மக்கள் இயக்கம் இன்றே முயற்சிகளை மேற்கொள்ளும். இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilaruvi Manian, leader of Gandhiya Makkal Iyakkam has issues statement about Neduvasal hydrocarbon project protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X