For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பள்ளிகளில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது தமிழ்.. கருணாநிதி குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை : தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒரு பாடமாகத் தமிழ் படிக்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டாலும் தற்போது தமிழ் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு ஆணை மட்டும் பிறப்பித்துவிட்டால் மட்டும் போதாது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

karunanithi

தமிழகப் பள்ளிகள் பலவற்றில் இன்னமும் தமிழ் கற்பிக்கப்படவில்லை-என்ற தலைப்பில் இன்று ஆங்கில நாளேடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் ஆணையை மட்டும் பிறப்பித்து விட்டு அலட்சியமாக இருந்தால் காரியம் நடந்து விடுமா? பிறப்பிக்கப்பட்ட ஆணை பின்பற்றப்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டாமா?

எதற்கெடுத்தாலும், நாங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டோம், ஆணை பிறப்பித்து விட்டோம், நிதி ஒதுக்கி விட்டோம் என்றெல்லாம் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொண்டால், மக்களுக்குத் தேவையானவை நிறைவேறி விட்டதாகப் பொருளல்ல.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒரு பாடமாகத் தமிழ் படிக்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. இன்னும் சொல்லப் போனால் தி.மு.கழக ஆட்சிக் காலத்திலேயே ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

2006 ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்ததும், சட்டப் பேரவையில் படிக்கப்பட்ட ஆளுநர் அறிக்கையிலேயே "பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் அனைவரும் வரும் கல்வி ஆண்டு முதல் கட்டாயமாக தமிழை ஒரு பாடமாகப் பயின்றிட எதிர்ப்படும் இடையூறுகளைக் களைந்து, விரைவில் கல்வியாளர்களைக் கலந்து பேசி ஆணை பிறப்பிக்க இந்த அரசு உறுதி அளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

ஏன், அ.தி.மு.க. ஆட்சியிலே கூட, 9-3-2002 அன்று தமிழக சட்டப் பேரவையில் ஆளுநரால் படிக்கப்பட்ட உரையில், "மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாடத் திட்டங்களில் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவது உறுதி செய்யப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் மீது எந்த நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசு ஓராண்டுக் காலம் எடுக்காமல் இருந்து 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாள் ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அந்த ஆணையில் பள்ளிகளில் அனைவரும் பயில ஏதுவாக 1-5 வகுப்புகளில் "அறிவியல் தமிழ்ப் பாடம்" கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதுவும் காலப்போக்கில் மறைந்து விட்டது.

ஆனால் தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது 27-12-1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 354 ன்படி, 24-1-1968 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண். 105 இல் உள்ள "வட்டார மொழி அல்லது தாய்மொழி" என்ற வார்த்தைகள் "தமிழ் அல்லது தாய்மொழி" என்று திருத்தப்பட்டது. இருமொழிக் கொள்கைக்கான அரசாணையில் தமிழ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை என்ற சில தமிழ்ச் சான்றோர்களின் குறைபாடு தி.மு.கழக அரசு 1999 இல் பிறப்பித்த இந்தத் திருத்தத்தின் மூலமாக நீங்கியது.

தி.மு.கழக ஆட்சியில் 27-11-1998 இல் அரசாணை எண். 421 இன்படி அனைத்து நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. அதனை அமல்படுத்துவோருக்கு பதிவுக் கட்டணம் போன்றவற்றில் 50 சதவிகித சலுகையும் அறிவிக்கப்பட்டது. இது தமிழ்க் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக தி.மு. கழக ஆட்சியில் செய்யப்பட்ட செயல் தான்.

13-1-1999 இல் அரசாணை எண்.6 இன்படி கணக்கு, விஞ்ஞானம், சமூகவியல் ஆகிய மூன்றில், இரண்டு பாடங்களை தமிழிலே நடத்தும் பள்ளிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் புதுப்பிக்கப்படும் என்றும், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு நடத்திடும் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கழக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதுவும் தமிழ்க் கல்வியை ஊக்கப்படுத்தும் மற்றொரு அறிவிப்பாகும்.

தமிழ் நாட்டிலே கல்வி கற்பவர்கள் தமிழைப் படிக்காமலேயே பல்கலைக்கழகம் வரை பட்டம் பெற்று வெளிவருகின்ற அவல நிலையை அகற்றுவதற்காக, தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி தான் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாகப் பெருகி, பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது என்ற நிலை உருவானது.

ஆனால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தி, மொழிக் கொள்கையில் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ள அ.தி.மு.க. அரசில், தற்போது என்ன நிலை?

பல பள்ளிகள், தொடர்ந்து இந்தி மொழியை இரண்டாவது மொழியாக கற்பித்து வருகின்றன; ஆனால் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக ஆக்கப்பட்டுள்ளதோடு, வாரத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் கற்பிக்கப்படும் மொழியாகவும் ஆகி விட்டது. பல ஐ.சி.எஸ்.சி., சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் வாரத்தில் 20 முதல் 40 நிமிடங்களுக்கு மட்டுமே தமிழ் மொழி வகுப்பு நடைபெறுகிறது.

தமிழ் முதல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற சட்ட ரீதியான நிலை மாறி, இன்றைக்கு ஏராளமான பள்ளிகளில் மூன்றாவது மொழி ஒன்றைக் கற்பிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய தமிழக அரசு, ஏட்டளவில் ஆணை பிறப்பித்து விட்டோம் என்று சொல்லிக்கொண்டே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

English summary
Tamil language has been pushed up to 3 rd place in all schools in Tamilnadu- said DMK leader Karunanithi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X