For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு- தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் முழு அடைப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுவித்திருந்த இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்புடன் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தி கைதாகினர். மாலை 6 மணிக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டு இயல்பு நிலைமை திரும்பியது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு புதிதாக அணைகளை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி புதிய அணைகளைக் கட்ட கர்நாடகா அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. கர்நாடகாவின் இந்தப் போக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் சங்கங்கள் ஒன்று திரண்டு இன்று காலை 6 மணி முதல் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

அரசியல் கட்சிகள் ஆதரவு

அரசியல் கட்சிகள் ஆதரவு

இம்முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வணிகர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அரசும் அண்ணா தி.மு.க.வும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என தெரிவிக்கவில்லை. இருப்பினும் போராட்டக் குழு உறுப்பினர்கள் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும் ஆனால் முழு அடைப்பு தேவையில்லை என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி கூறியிருந்தது.

முழு கடை அடைப்பு

முழு கடை அடைப்பு

பொதுவாக காவிரி டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த முழு அடைப்புப் போராட்டம் முழு அளவில் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மிகக் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளிலும் மக்கள் மிகக் குறைவான அளவிலேயே பயணித்தனர்.

சரக்கு போக்குவரத்து நிறுத்தம்

சரக்கு போக்குவரத்து நிறுத்தம்

தமிழகம்- கர்நாடகா இடையேயான சரக்குப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டது. தமிழகம்- கர்நாடகா எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டங்கள்..

மறியல் போராட்டங்கள்..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தி கைதாகினர். இந்தப் போராட்டங்களில் அரசியல் கட்சியினர் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தி.மு.க, த.மா.கா உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதேபோல் காரைக்காலில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் எர்ணாகுளத்தில் இருந்து நாகூர் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க விவசாயிகள் முயற்சித்தனர். இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் நாகை, குளித்தலை உள்ளிட்ட பல இடங்களிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர்.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

வன்முறை சம்பவங்கள் எங்கும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. சென்னையில் 12 ஆயிரம் போலீசார் நேற்று இரவில் இருந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநில பேருந்துகள் நேற்று இரவு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு மேல் கர்நாடக மாநில பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படவில்லை. மாலை 6 மணிவரை இந்த பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சட்டசபை ஒத்திவைப்பு

சட்டசபை ஒத்திவைப்பு

காவிரியில் அணை கட்டும் கர்நாடகாவைக் கண்டித்தும் இதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக சட்டசபை நிகழ்ச்சிகளை இன்று ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மேலும் தாங்கள் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம் என்றும் அறிவித்தனர். இதன் பின்னர் நேற்று இரவு திடீரென இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாவட்டங்களில்...

வடமாவட்டங்களில்...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே ஒருசில சிறிய கடைகள் தவிர பெரும்பாலானவை மூடப்பட்டிருந்தன. சென்னையின் பிரதான கடைகள், புறநகர் கடைவீதிகள் பலவுமே இன்று காற்று வாங்கின.

காவிரி டெல்டா மாவட்டங்களில்..

காவிரி டெல்டா மாவட்டங்களில்..


பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் 100% முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கானோர் கைதாகினர். திருச்சி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர். அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் காலை முதலே அமர்க்களப்பட்டன.

தென்மாவட்டங்களில்..

தென்மாவட்டங்களில்..

மதுரையில் பாதி கடைகள் திறந்தும் மூடப்பட்டுமாக இருந்தது. வாடிப்பட்டி, மேலூர், கம்பம், கூடலூர், உத்தமபாளையத்தில் போராட்டத்துக்கு முழு அளவிலான ஆதரவை அளித்தனர். சிவகங்கையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பு இல்லை. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் கடை அடைப்பு முழுமையாக நடந்தது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பெரும்பாலான கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன. பாளையங்கோட்டை சந்தையில் அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு இருந்தன.

மேற்கு மாவட்டத்தில் 100%

மேற்கு மாவட்டத்தில் 100%

சேலத்தில், தருமபுரியில் கடைகள் மூடப்பட்டிருந்தன. நாமக்கல் மாவட்டத்தில் தேநீர் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் முழு அளவில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

English summary
The Opposition parties-backed state-wide farmers' bandh over the Mekedatu dam row underway on Saturday, though the state government has distanced itself from it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X