For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: முதல்வர் ஓ.பி.எஸ்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துக் குரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும்" என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, உழைப்பாளியை ஊக்குவிக்கும் வகையில், ஊதிய உயர்வு, போனஸ், கருணைத்தொகை, ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா.

Tamil Nadu govt announces Diwali bonus for employees

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டுகளில் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தியவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கியதுபோல் 2013-2014-ம் ஆண்டிற்கும் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்குவது என முடிவு செய்துள்ளது.

இதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், இணையம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையுடன் கூடுதலாக 10 விழுக்காடு கருணைத்தொகை தற்போது வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், கூட்டுறவு தொடக்க சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத்தொகை வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக் காடு கருணைத்தொகை என 10 விழுக்காடு வழங்கப்படும்.

குடிநீர், மின்சார வாரியம்..

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி' மற்றும் ‘டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி' மற்றும் ‘டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும் வழங்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி' மற்றும் ‘டி' பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ‘சி' மற்றும் ‘டி' பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

ரூ221 கோடி போனஸ்

மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு 221 கோடியே 75 லட்சம் ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும்.

ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி புரிந்துவரும் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகை செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government on Monday announced Diwali bonus and ex gratia to employees of transport, electricity and other public sector and cooperative undertakings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X