For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக தலைவர்கள் பேச்சால் பீதி.. நெடுவாசல் போராட்டத்தை அரசு ஒடுக்க கூடாது: ராமதாஸ் கோரிக்கை

ஒடுக்குமுறை எனும் ஆயுதத்தை வீசி எறிந்து விட்டு, நெடுவாசல் திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நெடுவாசல் பிரச்சினை குறித்து பாஜக தலைவர்கள் பேசி வருவது அச்சமூட்டுவதாக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக மாறியிருக்கிறது.

நெடுவாசல் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவும், எழுச்சியும் மத்திய, மாநில அரசுகளை பதற்றமடைய செய்திருப்பதை அவர்களின் பேச்சு மற்றும் செயல்களில் இருந்தே நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

போராட்டம்

போராட்டம்

தமிழகத்தின் நெடுவாசலிலும், புதுவை மாநிலத்தின் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாமக போராட்டம்

பாமக போராட்டம்

நெடுவாசல் அருகிலுள்ள கோட்டைக்காடு கிராமத்திலும் இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்களும் நேற்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இத்திட்டத்திற்கு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, வரும் 3ம் தேதி நெடுவாசலில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி அன்புமணி ராமதாஸ் தலைமையிலும், காரைக்காலில் புதுவை மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ் தலைமையிலும் அறவழியில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

நெடுவாசல் உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக போராட்டம் நடத்துவது இயற்கையானது தான். அவர்களின் அச்சத்தைப் போக்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் அதை பாராட்டலாம். மாறாக, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா தலைவர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசத் தொடங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.

தியாகம்

தியாகம்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன் "ஹைட்ரோகார்பன் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தால் அத்திட்டத்தை என்ன ஆகாயத்திலா செயல்படுத்த முடியும். நாடு நலம் பெறுவதற்காக ஒரு மாநிலம் தியாகம் செய்து தான் ஆக வேண்டும்'' என்று எச்சரித்திருக்கிறார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, ‘‘நெடுவாசல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் எல்லாம் விஞ்ஞானிகளா?'' என்று நிதானம் இழந்து பேசியிருக்கிறார். பொறுப்பில்லாத இந்தப் பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கவை.

ஆகயத்திலா செயல்படுத்த முடியும்

ஆகயத்திலா செயல்படுத்த முடியும்

நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்படிப்பட்டது? எந்த முறையில் செயல்படுத்தப்படவுள்ளது? அத்திட்டத்தை செயல்படுத்துவதால் சாதகமா.. பாதகமா? இதனால் விவசாயம் பாதிக்கப்படுமா? என்பது குறித்தெல்லாம் விளக்கி இத்திட்டத்திற்கு மக்களின் ஒப்புதலை பெற மத்திய அரசு முயற்சி செய்திருந்தால் அது பாராட்டத்தக்க செயலாக இருந்திருக்கும். அதை விடுத்து,‘‘இத்திட்டத்தை ஆகாயத்திலா செயல்படுத்த முடியும்? , நாட்டுக்காக மாநிலம் தியாகம் செய்து தான் தீர வேண்டும்'' என்று கூறுவதும், திட்டத்தை எதிர்ப்போரெல்லாம் அனைத்தும் தெரிந்த விஞ்ஞானிகளா? என்று கிண்டலடிப்பதும் அவர்களின் அகந்தையைத் தான் காட்டுமே தவிர, மக்களின் அச்சத்தைப் போக்காது. இதை உணர்ந்து மத்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

காவல்துறை நடவடிக்கை

காவல்துறை நடவடிக்கை

மற்றொருபுறம் மாநில அரசும் போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி இரு சக்கர ஊர்தியில் பேரணி சென்ற 13 பேரை திருச்சி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

கமல்ஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகி கைது

கமல்ஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகி கைது

சென்னை, புதுவை, மதுரை கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக செல்லும் இளைஞர்களும், மாணவர்களும் பாதி வழியில் திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் கிடைக்கின்றன. ஏற்கனவே, நெடுவாசலில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி கேட்க காவல் நிலையம் சென்ற கமலஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகி கமல் சுதாகர் உள்ளிட்ட 4பேர் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை மிரட்டும் வகையில், நெடுவாசல் கிராமத்தைச் சுற்றிலும் காவல்துறை மற்றும் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டுக்காக கடற்கரையில் நடந்த போராட்டத்தை போன்று விஸ்வரூபம் எடுத்து விடுமோ என்ற அச்சத்தில் தான் இப்போராட்டத்திற்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. பொதுநலனுக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு அளிப்பது தான் நல்ல ஆட்சிக்கு அழகு ஆகும். அதைவிடுத்து அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், அது போராட்டம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வழி செய்துவிடும். எனவே, ஒடுக்குமுறை எனும் ஆயுதத்தை வீசி எறிந்து விட்டு, மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, நெடுவாசல் திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.''இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu government should not stop Neduvasal protesters from participate, says PMK founder Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X