இரட்டை இலை வழக்கு: பாஜகவிடம் சரணாகதியடையும் சசிஅதிமுக!

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற வழக்கில் நாளை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. தற்போது பாஜக எங்களின் தோழமை கட்சி எனக் கூறி சரணடைய துடிக்கிறது சசிகலா அதிமுக,

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னம் யாருக்கு என தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜகவை தமிழகத்தில் நாங்களே வளர்த்துவிட்டோம்; பாஜக எங்களுக்கு எதிராக எதுவும் செய்துவிடாது என கெஞ்சும் பாணியை கையிலெடுத்துள்ளது சசிகலா அதிமுக.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக அணிகளை தேர்தல் ஆணையம் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலையை முடக்க பாஜக சதி செய்கிறது என ஓலமிடத் தொடங்கியுள்ளது சசிகலா அதிமுக. இப்படி ஒருபக்கம் ஓலமிட்டுக் கொண்டே மறுபக்கம் பாஜகவிடம் சரணாகதி அடையவும் தயார் என்கிற ரேஞ்சில் பேசிவருகிறது சசிகலா அதிமுக.

ஜெ. வீட்டுக்கு வந்த மோடி

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நெறியாளர் மு. குணசேகரன் நேற்று இரவு நடத்திய காலத்தில் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா அதிமுகவின் வி.பி. கலைராஜன் கூறியதாவது:

எங்களைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து எப்படி மத்திய அரசுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தார்களோ அதேபோல் ஒரு உறவை பேணுகிற ஒரு கட்சியாக ஜெயலலிதா காலத்திலும் இருந்தது. நரேந்திர மோடி ஜெயலலிதாவின் வீட்டுக்கே வந்தவர்.

 

ஜெ.வின் உற்ற நண்பர் மோடி

ஜெயலலிதாவின் பதவியேற்புக்கும் வந்து கலந்து கொண்டவர். மோடிக்கு உற்ற நண்பராக இருந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இறப்புக்கும் வந்து பங்கேற்றவர் நரேந்திர மோடி. அதனால் மோடி மீது எங்களுக்கு தனிப்பட்ட மரியாதை இருக்கிறது.

மோடிக்கு தெரியுமா?

இந்த நிலையில் இரட்டை இலை முடங்கும் என தமிழிசை, ஹெச். ராஜா போன்றோர் சொல்வது மோடிக்கு தெரியாமல் சொல்கிறார்களா? அல்லது இவர்கள் பேசுவதை மோடி ஆமோதிக்கிறாரா? என்கிற சந்தேகம் எங்களுக்கு வருகிறது. இதே பாஜக தமிழகத்தில் காலூன்றுவதற்கு முதன் முதலில் காரணமாக இருந்தவர் ஜெயலலிதாதான்.

அத்வானியை அழைத்து...

1991-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நெல்லையில் அத்வானியை அழைத்து மிகப் பெரிய மாநாடு நடத்தியவர் ஜெயலலிதா. அந்த தேர்தலில் பாஜகவுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தவர் ஜெயலலிதா. அப்போது பாஜகவுக்கு இங்கே யாருமே கிடையாது.

பணிவோடுதான் சொல்கிறோம்

இப்படி சொல்வதால் பாஜகவுக்கு எந்த சமிக்ஞ்சையும் கொடுக்கவில்லை. நாங்கள் யாருக்கும் அஞ்சுவதும் இல்லை... கெஞ்சுவதும் இல்லை... முடிந்தவரை சமாதானமாக, பணிவோடு பாஜகவுக்கு சொல்லுகிறேன்...

ஜெ. இல்லையெனில்...

1998-ல் பாஜகவுக்கு இங்கே ஒரு ஊன்று கோலாக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு டெல்லிக்கு வழிகாட்டியதும் ஜெயலலிதாதான். ஜெயலலிதா இல்லையென்றால் தமிழகத்தில் பாஜக வந்திருக்கவே முடியாது.

இவ்வாறு வி.பி. கலைராஜன் பேசினார்.

 

English summary
Team Sasikala has appealed to BJP on the Two leaves symbol issue. Team Sasikala's Ex MLA VP Kalairajan said that ADMK party was introduced the BJP to TamilNadu.
Please Wait while comments are loading...