For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கிலி' கிளப்பும் 12 எம்.எல்.ஏ.க்களை அலைபாய விடாமல் தடுப்பது அதிமுகவுக்கு சவால்: கருணாநிதி கணிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அதிமுகவில் அதிகம். எனவே அவர்களை எங்கும் அலைபாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அக்கட்சிக்கு உண்டு. சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு" என்று திமுக தலைவர் கருணாநிதி 'கிலி'யை கிளப்பியுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. திமுக கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. இதில் திமுக மட்டும் 89 இடங்களில் வெற்றி பெற்றது. அண்மையில் திருப்பரங்குன்றம் அதிமுக எல்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்தார். இதனால் அதிமுக எம்எல்ஏ பலம் 133 ஆக குறைந்தது.

 The AIADMK will fear on 12 MLAs, says karunanidhi

இந்த நிலையில், தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அதிமுகவில் அதிகம் என்றும், எனவே அவர்களை எங்கும் அலைபாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அக்கட்சிக்கு உண்டு என்றும், சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஆளும் கட்சி மீண்டும் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை சந்தித்து வந்த திமுக எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் யாவை? அவற்றை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? என்று கேட்கிறீர்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை எந்தச் சவாலையும் சாமர்த்தியமாக எதிர்கொள்ளும்; இப்போது தி.மு. கழகத்தை விட சவால்களைச் சந்திக்க வேண்டியவர்கள் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வினர் தான். ஆளுங்கட்சி 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், அங்கே வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் 131 பேர் தான். அதிலும் ஒருவர் இறந்தது போக மீதி 130 பேர் தான். அதாவது தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அங்கே அதிகம். எனவே அவர்களை எங்கும் அலை பாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அ.தி.மு.க. வுக்குத் தான் உண்டு. சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு!

எங்களைப் பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு வெறும் 23 இடங்களில் தான் தி.மு. கழகம் வெற்றி பெற்று, பிரதான எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாத நிலையிலே இருந்தோம். தற்போது தி.மு. கழகம் மட்டும் 89 உறுப்பினர்களைக் கொண்டு பேரவையிலே இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, கழக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை ஆளுங்கட்சி எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்!

தமிழகச் சட்டப் பேரவையின் வரலாற்றில், தி.மு. கழகம் 1971-ல் 184 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது; இப்போது 89 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க் கட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது. ஆளுங் கட்சியாகவும், எதிர்க் கட்சியாகவும் தி.மு. கழகம் ஏற்படுத்தியிருக்கும் சரித்திரச் சான்றுகளை யாராலும் மறைத்து விட முடியாது! என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அளித்த பேட்டியிலிருந்து..

கேள்வி: செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய தாங்கள் "நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் யாருக்கும் பயப்படாத அடியாக துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக எடுத்து வைக்க சபதம் ஏற்க" அழைத்தீர்கள். இதன் அடிப்படை என்ன? தேர்தலில் சில இடங்களில் உள்கட்சி பிரச்சினைகள் இட்டு சென்ற தோல்வி குறித்து பேசினீர்களா?

கருணாநதி: ஆளுங்கட்சியின் அரட்டல், உருட்டல், பயமுறுத்தல், பாய்ச்சல், பொய் வழக்குகளைப் போடுதல் போன்ற ஜனநாயக விரோதச் செயல்முறைகளைத் தொடர்ந்து பார்த்து வெறுப்பு அரசியலைப் புரிந்து கொண்டிருப்பதால், அதற்கெல்லாம் பயப்படாத அடியாக, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். தி.மு. கழகத்திற்கு துரோகம் விளைத்தவர்கள், தற்போது விளைவிக்க நினைப்பவர்கள் ஆகியோருக்கு துணை போகக் கூடாது என்பதற்காக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன்.

என்னுடைய உடன்பிறப்புகளுக்கு நான் கூறியதன் பொருள் நன்றாகவே விளங்கும். உள்கட்சி பிரச்சினையால் ஒருசில இடங்களில் கழக உறுப்பினர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தது உண்மை தான். அதுபற்றி செயற்குழுவில் சிலர் பேசத் தான் செய்தார்கள். அவ்வாறு கட்சிக்கு, கட்சியின் உறுப்பினர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் பற்றி கழகத் தலைமை நன்றாகப் புரிந்து கொள்ள இந்தச் செயற்குழு பெரிதும் உதவியாய் அமைந்தது. எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா?

கேள்வி: பெரும்பாலும் தமிழகம் முழவதும் சிறப்பாக வாக்குகளை பெற்ற திமுக மேற்கு பகுதியில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் மட்டும் பின் தங்கியது. இதன் காரணம் என்ன? ஏனெனில் திமுக உருவாகிய போது அண்ணாவுக்கு ஆதரவாக அதிக அளவில் தீர்மானம் நிறைவேற்ற கிளைகள் இருந்த பகுதியான கொங்கு மண்டலத்தை எப்படி மீட்கப் போகிறீர்கள்?

கருணாநிதி:- தி.மு. கழகம், மேற்கு பகுதியில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; கடந்த சில தேர்தல்களில் பின் தங்கி யிருப்பது உண்மை தான்! ஆனால் தேர்தலுக்கு முன்பு வந்த கருத்துக் கணிப்பு கள் இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு. கழகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றே அறிவித்திருந்தது. மேற்கு மண்டலம் பெருந்தொழில்கள், சிறு மற்றும் குறுந்தொழில்களைச் சார்ந்துள்ள மண்டலமாகும்.

மின்வெட்டு, அ.தி.மு.க. அரசின் தொழில் நேயமற்ற அணுகுமுறை ஆகியவற்றினால், மேற்கு மண்டலத் தொழில்கள் சிதைந்து, முதலீடுகள் நோய்வாய்ப்பட்டு, தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைக் காரணமாகச் சொல்லப்பட்டது. அந்தக் கணிப்பையும் மீறி இந்த முறை அங்கே தி.மு.கழகம் பெருமளவில் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம் "கன்டெய்னர்கள்" தானோ என்ற சந்தேகமும் உள்ளது. இத்தகைய கொடுமைகளிலிருந்து கொங்கு மண்டலத்தை மீட்டெடுக்க கழகம் உடனடியாக ஆக்க பூர்வமானதும், ஆரோக்கியமானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கழகத் தலைமை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.

கேள்வி: தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

கருணாநிதி: தேர்தல் தள்ளி வைக்கப்படாமல் அந்த இரண்டு இடங்களிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெற்றிருக்குமானால், இரண்டு இடங்களிலுமே தி.மு.கழகம் வெற்றி பெற்றிருக்கும். இருந்தாலும், தற்போது அங்கே தேர்தல் தள்ளி வைக்கப் பட்டதால் கழகத்தின் வெற்றி வாய்ப்பு குன்றிப் போய் விடாது என்றே நினைக்கிறேன்.

கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்காமல் திமுக கூடுதலான இடங்களில் தேர்தலில் நின்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அது குறித்து உங்கள் நிலைபாடு என்ன?

கருணாநிதி: அப்படி ஒரு கருத்து நிலவுவது உண்மை தான். 172 இடங்களில் போட்டியிட்ட தி.மு.கழகம் 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 51.74 சதவிகிதம். தி.மு. கழகக் கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டி யிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 15 சதவிகிதம்தான். இதற்குக் காரணமாக கூட்டணி கட்சிகளை நான் சிறிதும் குறை கூறவிரும்பவில்லை. அந்தத் தொகுதிகளில் தி.மு. கழக உறுப்பினர்கள் அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்று தான் கருதுகிறேன்.

கேள்வி: அதிமுக அரசு பதவியேற்பு விழாவின் போது எதிர்க்கட்சித் தலைவரான முக. ஸ்டாலினுக்கும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாற்றியிருந்தீர்கள். அதற்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா வேண்டுமென்று அதை செய்யவில்லை என்றும் தமிழகத்தின் நலன்களுக்காக திமுகவுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் இது ஒரு புது தொடக்கமாக இருக்குமா?

கருணாநிதி: முன்பொரு முறை, ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் சென்றிருந்த போதும் உரிய மரியாதை கொடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப் படவில்லை. ஒவ்வொரு முறையும் தவறு நிகழ்வதும், அதற்கு நொண்டிச் சமாதானம் சொல்வதும் வாடிக்கையாகி விட்டது என்பதை மறந்து விட முடியாது.

எனினும் இந்த முறை, தமிழகத்தின் நலன்களுக்காக தி.மு.க. வுடன் இணைந்து செயல்பட இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் நலன் களுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஜெயலலிதா வோடு மட்டுமல்ல; யாருடனும் இணைந்து பணியாற்றத் தி.மு.கழகம் தயங்கியதில்லை என்பதை அதன் கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டும். என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
The AIADMK will fear on 12 MLAs, Dmk chief karunanidhi predict
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X