For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரிஸ் துயரத்துக்கும் பெருமாள் முருகன் பிரச்னைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: சீமான் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: பிரான்சில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப் பட்ட சம்பவத்திற்கும், எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்சினைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை எனத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்' நூல் சர்ச்சையில் சிக்கியது. எதிர்ப்பும், போராட்டங்களும் உண்டானதைத் தொடர்ந்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் பெருமாள் முருகன். மேலும், இனி தான் எழுதப் போவதில்லை எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார். அவரது இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து மற்ற எழுத்தாளர்கள் மற்றும் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

There is no different between Paris incident and Perumal Murugan issue : Seeman

இந்நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' மற்றும் 'ஆளண்டாப் பட்சி' நூல்களுக்கு எதிராக சிலர் பிரச்னை கிளப்பியதையும், அதையடுத்து நடந்த மிக மோசமான நிகழ்வுகளையும் பார்க்கிறபோது நாம் சுதந்திரமண்ணில்தான் வாழ்கிறோமா எனச் சந்தேகம் வருகிறது. தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான பெருமாள் முருகன் சிலரைப்போல சர்ச்சைகளுக்காகவோ வெற்று பரபரப்புகளுக்காகவோ எழுதக்கூடியவர் கிடையாது. அப்படியே அவருடைய புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருந்தால் அதனை நீதிமன்றத்தின் மூலமாக ஜனநாயக முறையில் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவதூறாகப் பேசியும், ஊரைவிட்டு குடும்பத்தையே விரட்டிவிடுவோம் என மிரட்டியும், கடையடைப்பு நடத்தியும் ஓர் எழுத்தாளரை 'நான் செத்துவிட்டேன்' என்று மனம் நோகடித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

புத்தகத்தில், தான் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் யாவும் முன்பொரு காலத்தில் நடந்தவையாகவே சொல்லப்பட்டிருப்பதாக பெருமாள் முருகன் விளக்கிய பிறகும் அவரைப் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்திருப்பது ஒரு படைப்பாளியின் எழுத்து உரிமைக்கு விடப்பட்டிருக்கும் அப்பட்டமான சவால்.

சமூகத்தின் பிரதிபலிப்பே எழுத்து, அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதையும்தாண்டி அந்த படைப்பில் மனவருத்தமோ மாற்றுக்கருத்தோ இருந்தால், அதனை நியாயமான முறையிலேயே அணுகி இருக்க வேண்டும். ஆனால், மதவாதத்துடனும், சாதிய அணுகுமுறையோடும், ஓர் எழுத்தாளரை நிர்பந்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய தொடர் நெருக்கடியால் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் இனிமேல் எழுதப்போவது கிடையாது எனவும் அறிவித்திருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

பாரிஸில் பத்திரிகையாளர்கள் ஏழு பேர் மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலுக்கும், பெருமாள் முருகன் மீது நடத்தப்படும் அடாவடிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஓர் எழுத்தாளனின் உணர்வையும் படைப்பையும் சிதைப்பது படுகொலைக்குச் சமமானதுதான்.

மதவாதமும் சாதியமும் கைகோர்த்து இருப்பதும் இந்தப் பிரச்னையின் பின்னணியாக இருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. 2009 இன அழிப்புக்கான காரணிகளை களைந்து, தமிழ்தேசியஇன இளையபிள்ளைகள், அரசியல் அதிகாரத்தின் தேவைகளையும் உனர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், இத்தகைய அநாகரிக செயலை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. எத்தகைய மிரட்டல்கள் சூழ்ந்தாலும் பெருமாள் முருகனுக்கு பாதுகாப்பு அரணாகவும் உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் திரள்வார்கள்.

அதேநேரம் தனது முடிவிலிருந்து பெருமாள் முருகனை மறுபரிசீலனை செய்யக் கோரியும் நாம் தமிழர் கட்சி வேண்டுகிறது. எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்க்கிற நெஞ்சுரம் எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை பெருமாள் முருகன் நிரூபிக்க வேண்டும். எந்நாளும் மாறாத தீரத்துடன் அவர் தொடர்ந்து எழுத்துலகில் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The Naam Thamilar party chief Seeman says that there is no different between Paris incident and Perumal Murugan issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X