For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை பயணத்தை தவிர்த்திருப்பது ரஜினியின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது: திருமாவளவன்

ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்திருப்பது அவர் மீதான நன்மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி தனது இலங்கை பயணத்தைத் தவிர்த்திருப்பது அவரது பெருந்தன்மையையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தைத் தவிர்த்திருப்பது அவரது பெருந்தன்மையையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. வறட்டுக் கவுரவம் பார்க்காமல், வீண்பிடிவாதம் செய்யாமல், எவருடையத் தூண்டுதலுக்கும் இரையாகாமல், மிகவும் தன்னியல்பான வகையில், எமது வேண்டுகோளை ஏற்று, தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து, இலங்கை செல்லும் திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

Thirumavalavan has welcomed the decison of Rajinikanth for dropping his Lanka visit

அவரின் இந்த முடிவு அவர் மீதான நன்மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. அவர் மாற்றார் பேச்சைக் கேட்டு முடிவெடுப்பவரல்ல; சுயமாக சிந்தித்து முடிவெடுப்பவர் என்பது இம்முடிவிலிருந்து உணரமுடிகிறது.

நாம் இந்தவேண்டுகோளை விடுத்ததில் அரசியல் உள்நோக்கமோ விளம்பர நாட்டமோ ஏதுமில்லை. இலங்கை மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்தான் வெகுமக்களின் ஊடகங்கள் வாயிலாக இந்த வேண்டுகோளைப் பொதுவெளியில் முன்வைத்தோம். இதனைச் சிலர் வழக்கம் போல கொச்சைப்படுத்துகின்றனர். ஆனால், அவர்களைப்போல ரஜினிகாந்த் எமது வேண்டுகோளைக் குதர்க்கமாகப் பார்க்கவில்லை என்பதை அவரது முடிவு உறுதிப்படுத்துகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் ரஜினிகாந்த இலங்கை வருவது, தமிழர் விரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கும் இலங்கை இனவெறியர்களின் முயற்சிக்குத் துணை போவதாக அமைந்து விடுமென்பது தான் அங்கிருக்கும் தமிழர்களின் ஒரே அச்சமாகும். மற்றபடி, அவர் இலங்கைக்குப் பயணம் செய்வதையோ, பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் காண வேண்டுமென்பதையோ யாரும் எதிர்க்கவில்லை. எதிர் காலத்திலும் அப்படி எதிர்க்க வாய்ப்பில்லை.

ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை இனவெறி அரசை நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கண்டித்துள்ளன. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளையோ, போர்க்குற்றங்கள் மீதான பன்னாட்டு நீதிபதிகளைக்கொண்ட உள்ளக விசாரணையையோ செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிக் கண்டனம் செய்துள்ளன. வழக்கம்போல இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவாக நின்றுள்ளன.

இந்நிலையில் தான், இலங்கை அரசுக்கு நெருக்கமான 'லைக்கா' நிறுவனத்தினர் தமிழர்களுக்கென கட்டப்பட்டுள்ள 150 வீடுகளைத் திறக்கும் விழாவுக்கு ரஜினிகாந்தை அழைத்துள்ளனர். உலகத் தமிழர்களிடையே மிகுந்த செல்வாக்குமிக்கவாராக விளங்கும் அவரைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்திய- இலங்கை அரசுகள் 'லைக்கா' நிறுவனத்தின் மூலம் மறைமுகமான முயற்சியில் ஈடுபடுகின்றனவோ என்கிற அச்சமே இந்த எதிர்ப்புக்கு அடிப்படையாகும்.

இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டு ரஜினிகாந்த், பெரும் பொருட்செலவிலான ஏற்பாடுகளைச் செய்து தனக்கு அழைப்பு விடுத்த, தனது '2.0' என்னும் படத் தயாரிப்பாள்களின் வருத்தத்தையும் பொருட்படுத்தாமல், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு முதன்மையிடம் அளித்து, இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவை எடுத்த ரஜினிக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
VCK chief Thol.Thirumavalavan has welcomed the decison of Rajinikanth for dropping his Lanka visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X