உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நீதியை அவமதிப்பதா?: கர்நாடகாவிற்கு திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா ஏற்க மறுப்பது நீதியை அவமதிக்கும் செயல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ராம்குமார் மரணம் தொடர்பாக கூறப்படும் காரணங்கள் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ள திருநாவுக்கரசர், ராம்குமார் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்இன்று திடீரென திமுக பொருளாளர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் திருநாவுக்கரசர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆர்.எம்.வீரப்பனையும், நடிகர் ரஜினிகாந்த்தையும் அவர்களது இல்லத்தில் சந்தித்தார் திருநாவுக்கரசர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும்படி இல்லை என்று கூறினார். இதன் மூலம் குற்றம்சாட்டப்பட்டு தமிழக சிறைகளில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என்றார்.

நீதி விசாரணை தேவை

சிறையில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு சிறைத்துறை மற்றும் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவர், சுவாதி கொலை துவங்கி ராம்குமார் மரணம் வரை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறினார்.

நீதியை அவமதிப்பதா?

காவிரி மேலாண்ம வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்திய திருநாவுக்கரசர், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து 6,000 கனஅடி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறக்க வலியுறுத்தினார். சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மறுக்காமல் எடுக்க வேண்டும் என்ற திருநாவுக்கரசர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா ஏற்க மறுப்பது நீதியை அவமதிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடன் கூட்டணி தொடர்வதாகவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். திமுகவுடன் வாசன் கூட்டணி வைத்தால், காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வியெழுந்தது. அதற்கு யூகங்களுக்கு பதில் கூற வாய்ப்பில்லை என்றும், கூட்டணி குறித்து திமுகதான் அறிவிக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார். இப்போது கூட்டணி நீடிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், அகில இந்திய தலைமையிடம் ஆலோசிப்பதற்காக, இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
TNCC pesident Thirunavukkarasar has urged the centre to constitute the Cauvery management board as soon as possible.
Please Wait while comments are loading...

Videos