For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்புமில்லாத, அறனுமில்லாத இல் வாழ்க்கை... தாமரைக்கு தியாகு எழுதிய கடிதம்!

Google Oneindia Tamil News

சென்னை: கவிஞர் தாமரைக்கு அவரது கணவர் தியாகு எழுதிய கடிதத்தின் முழு விவரம் வெளியாகியுள்ளது.

கணவர் தியாகு, வீட்டை விட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் எனக் கோரி, திரைப்பட பாடலாசிரியர் தாமரை, சென்னை, சூளைமேட்டில் உள்ள தியாகுவின் கட்சி அலுவலகம் முன் மூன்று நாட்களாக, தன் மகனுடன் தர்ணா நடத்தினார்.

Thiyagu's letter to Thamarai

இதையடுத்து நான் எங்கும் ஓடவில்லை. வேளச்சேரியில் எனது முதல் மனைவியின் மகள் வீட்டில்தான் இருக்கிறேன் என்று தியாகு கூறியிருந்தார். இதையடுத்து தனது போராட்டத்தை வேளச்சேரிக்கு மாற்றியுள்ளார் தாமரை .

இந்த நிலையில் தியாகு, தாமரைக்கு இமெயிலில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

தாமரை!

நான் விலகியிருப்பதால் உனக்கும் சமரனுக்கும் எவ்வளவுத் துன்பம் என்று எனக்குப் புரியாமலில்லை. ஆனால் அன்புமில்லாத, அறனுமில்லாத இல்வாழ்க்கையை நீட்டிக் கொண்டே போவதால் ஏற்படும் பெருங்கேட்டினைக் களைவதற்கு இது தவிர வேறு வழியில்லை. இப்போதைய துன்பம் உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும்தான்.

தொடக்கத்துக்கே திரும்பிச் சென்று நீண்ட விவாதம் செய்ய எனக்கு விருப்பமில்லை. அது முடியவே முடியாத தொடர் விவாதமாகி விடும். கடந்த ஓராண்டுக்கால நிகழ்வுகளை மட்டும் எண்ணிப் பார்த்தாலே போதும், நம்மால் மீண்டு வர முடியாத கட்டத்தை அடைந்து விட்டோம் என்பது விளங்கும்.

2013 அக்டோபர் முதல் நாள் தொடங்கிய என் உணவு மறுப்புப் போராட்டம் 15ஆம் நாள் முடிவுற்ற பின் இனி அலுவலகம்தான் என் இல்லம் என்று முடிவு செய்தேன். பிறகு அம்மா கேட்டுக் கொண்டதன் பேரில்தான் வீடு திரும்பினேன். அதன் பிறகும் எதுவும் மாறவில்லை. அதற்கோர் எடுத்துக்காட்டுதான் என் அப்பா கொடுத்த பணம் குறித்து நடந்தவையும், அதில் உன் பங்கும். உண்மையை முழுமையாக அறியவிடாமல் மறைத்து நின்றாய். ஓர் ஒளிப்படி கொடுப்பதற்கு ஓராண்டு போதவில்லை உனக்கு.

"அவர் வழக்குத் தொடர்ந்தால் தொடரட்டும்" என்று என் தம்பி கூறியதாகச் சொன்னாய். ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எப்படி? என்று எனக்கு விளங்கவில்லை. அவர் அப்படித்தான் சொன்னார் என்றால் பிரிவுக்கு வழிகாட்டுகிறார் என்று பொருள். அளவுமீறிய ஒவ்வாமைக்குப் பிரிவுதான் மருந்து. அப்படியும் குணப்படாது என்றால் முறிவுக்குத்தான் வழிகோலும். உனக்கென்று சில கடமைகளும் எனக்கென்று சில கடமைகளும் உள்ளன. அவற்றை ஒருபோதும் விட்டுத்தர முடியாது, எப்படியாவது ஒட்டியிருக்க வேண்டும் என்பதற்காக நீ நீயாக இருப்பதையும் நான் நானாக இருப்பதையும் கைவிட முடியாது. நம்மிடத்தில் வேறிருவர் இருந்து உன்னிடமோ என்னிடமோ அறிவுரை கேட்டிருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்போம். நம் கடந்தகாலமே இதற்குப் போதிய சான்றல்லவா?

இப்போது என்ன செய்வது? மற்றவர்களை அணுகிப் பேசுவதென்றால் பேசலாம், நீதிமன்றப் படியேறுவதென்றாலும் ஏறலாம். அதற்கு முன் நமக்குள் கொஞ்சம் உரையாடலாம் என்பது என் கருத்து. நேரில் பேசும் போது நீ உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதால் மின்னஞ்சல் வழியாகவே உரையாடலாம் என்கிறேன். அது சரிப்படாத போது மற்ற வழிகளை நாடலாம்.

ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: எனக்கு அகவை 64. பட்டினிப் போருக்கு முன்பே நோயாளியாகத்தான் இருந்தேன். அந்தப் போராட்டம் தந்த புதிய உடல்வருத்தங்களிலிருந்தும் இதுவரை மீண்டேனில்லை. முதுமையின் தளர்ச்சியை அண்மைக் காலமாகப் பெரிதும் உணர்கிறேன். இவை இறுதி ஆண்டுகளாகவோ மாதங்களாகவோ நாட்களாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் இறுதி என்பது மட்டும் உறுதி. இறுதிக் காலத்தை மனைவியோடு சண்டையிடுவதில் இவன் கழித்தான் என்று பேர்வாங்க விரும்பவில்லை. அமைதியான சூழலில், அக்கறையுள்ள தோழர்களின் காப்பில் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.

நமக்குள் பொது என்று எதுவும் மிச்சமில்லை, சமரன் ஒருவனைத் தவிர! அவனுக்கும் கூட உடனே இடர்ப்பாடுகள் இருந்தாலும், நெடுங்கால நோக்கில் நம் பிரிவுதான் நல்லது என்பதை எண்ணிப் பார்த்தால் நீயும் ஏற்றுக் கொள்வாய். அவனை நீ வளர்க்கும் முறை சரியோ தவறோ, என் குறுக்கீடு இல்லாமல் அதைச் செய்வதுதான் அவனுக்கும் உனக்கும் நல்லது. நம் போராட்டத்தில் சமரனை ஒரு பகடையாக உருட்ட வேண்டாம் என்பது என் விண்ணப்பம்.

நடைமுறைச் சிக்கல்கள் எனக்குப் புரியாமலில்லை. செலவு கொஞ்சம், கனிவு கொஞ்சம் சேர்ந்து கொண்டால் எல்லாவற்றுக்கும் தீர்வு காண முடியும். அம்மாவிற்கும் துன்பம்தான், அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஓராண்டு முன்பு எடுத்திருக்க வேண்டிய முடிவு அவர்கள் சொன்னதைக் கருதித்தான் தள்ளிப் போயிற்று, ஆனால் எதற்கும் எல்லை உண்டு என்பதை எண்ணி அவர்கள் ஆறுதல் அடையலாம்.

நீ உன் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளாதே. நலம்பேண உனக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. ஆனால் மனம் உடலைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்.

பொறுமையாகச் சிந்தித்து சீர்தூக்கி விடைதர வேண்டுகிறேன்.

தியாகு

English summary
Thiyagu's letter to Thamarai has been revealed to media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X