For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் சுயலாபத்திற்காக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதா? - திருமாவளவன் கண்டனம்

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நிரந்தரச் சட்டம் வரும் வரை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வரும் வேளையில் அதை மீறி அரசியல் சுயலாபத்திற்காகவே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த அணுகுமுறை வேதனை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Thol.Thirumavalavan demanded that the TN government give 25 lakh to the families of Bull tamer killed in Jallikattu

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் நிறைவேற்றிவிட்டோம் எனத் தமிழக அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் புதுக்கோட்டையில் தமிழக அமைச்சர் ஒருவரால் துவக்கிவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவதில் அக்கறைகாட்டாமல் அவசர சட்டம் கொண்டுவந்ததற்கு சொந்தம் கொண்டாடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டிய தமிழக அரசின் நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். உயிரிழந்த இளைஞர்களது மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஜல்லிக்கட்டில் பார்வையாளராக நின்றிருந்த ஒரு இளைஞர் உயிரிழந்ததால் அவரது தந்தை தொடர்ந்த வழக்கில்தான் முதன்முதலில் ஜல்லிக்கட்டுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. அதன்பின்னர், 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு வரன்முறை சட்டத்தில் பாதுக்காப்புக்கென பல்வேறு அம்சங்கள் இருந்தன.

தற்போது தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அவசர சட்டம் என்ன? அதில் பாதுகாப்புக்காக என்னென்ன அம்சங்கள் உள்ளன? என்ற விவரங்கள் எதையும் இதுவரை தமிழக அரசு வெளியிடாமல் மூடிமறைக்கிறது. இன்று தமிழக அரசால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் அந்த அவசர சட்டத்தின் விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பதைத் தமிழக அரசுதான் விளக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்திவரும் வேளையில் அதை மீறி அரசியல் சுயலாபத்திற்காகவே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த அணுகுமுறை வேதனை அளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் தலா ஒரு லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம். பழந்தமிழர் மரபுப்படி உயிரிழந்த வீரர்கள் இருவருக்கும் அரசு சார்பில் நடுகல் எழுப்ப வேண்டும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான முறையில் நடத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தனது தோல்வியை மறைப்பதற்காகவும், மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகவும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடக்கும் இடங்களில் கூடியிருப் போரை கலைப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. அப்படிச்செய்தால் அது நிலமையை மேலும் சீர்குலைக்கவே வழிவகுக்கும். எனவே போராட்டக்காரர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதொன்றே சுமூகமாக தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

English summary
VCK Chief Thol.Thirumavalavan demanded that the TN government give 25 lakh to the families of Bull tamer killed while playing Jallikattu near Pudukotai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X