For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாடுகளைக் கடித்துக் குதறி, நாயைக் கொன்று தப்பி ஓடிய சிறுத்தை.. திருச்சி அருகே பீதி!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அருகே துறையூரில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தைகள் மாடுகளைக் கடித்துக் குதறி, நாயைக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த காளிப்பட்டி பகுதியில் கடந்த 2-ந் தேதி சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப் பட்டது. அந்த சிறுத்தை அருகில் இருந்த தோட்டத்தில் பட்டியில் அடைக்கப் பட்டிருந்த 5 வெள்ளாடுகளைக் கடித்துக் கொன்றது.

Thuraiyur : People fear of Leopard

அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரி சதீஷ் மற்றும் துறையூர் கோட்ட வனச்சரகர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் சிறியதும், பெரியதுமான காலடித் தடங்களை மக்கள் கண்டனர். எனவே, சிறுத்தை தனது குட்டிகளுடன் அப்பகுதியில் சுற்றி வருவதாக மக்கள் முடிவு செய்தனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

எனவே, சிறுத்தைகளைப் பிடிப்பதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு கூண்டு சிங்களாந்தபுரம் ஏரி அருகே வைக்கப்பட்டது. முதலில் அந்த கூண்டிற்குள் ஆட்டையும், பின்னர் நாயையும் அடைத்து வைத்து, சிறுத்தைகள் சிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 10 நாட்கள் ஆகியும் இதுவரை கூண்டில் சிறுத்தைகள் எதுவும் சிக்கவில்லை.

இதேபோல், சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கவனிக்க சிங்களாந்தபுரம் ஏரியின் உள்ளே உள்ள குட்டையின் கரையில் வடபுறம் மற்றும் தென்புறத்தில் என 2 கேமராக்கள் வைத்து வனத்துறையினர் கண்காணித்தனர். அதில், மயில்கள்தான் பதிவாகியிருந்ததே தவிர சிறுத்தைகளின் நடமாட்டம் இல்லை.

இந்நிலையில் ஆத்தூர் சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியின் மேல்புறம் முருகூர் ஊராட்சியும், துறையூர் நகராட்சியும் சந்திக்கும் இடத்தில் கணேசன் என்ற விவசாயியின் பருத்தி தோட்டம் உள்ளது. தனது குடும்பத்தாருடன் கணேசன் அந்த தோட்டத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். அவரது வீட்டின் ஒரு பகுதியில் மாட்டுக் கொட்டகை அமைத்து அதில் 3 பசு மாடுகளைக் கட்டி வைத்துள்ளார் கணேசன்.

இந்நிலையில், ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த கணேசன், தனது வீட்டிற்கு முன் இரவு முழுவதும் நெருப்பு எரிய வைத்திருந்தார். குடும்பத்தினரோடு இரவு முழுவதும் மாடுகளைக் காத்து வந்த கணேசன், இன்று அதிகாலை 4 மணியளவில் தூங்கச் சென்றுள்ளார்.

அதிகாலை 5 மணி அளவில் மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு கண் விழித்த கணேசன் பதறி அடித்துக்கொண்டு தகரத்தை தட்டி சத்தம் எழுப்பிவாறு வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டின் மீது சிறுத்தை பாய்ந்து, அதன் மார்பையும், பிடறி பாகத்தையும் கடித்து குதறிக்கொண்டிருந்தை கண்டு கணேசன் அதிர்ச்சியடைந்தார்.

அருகில் கட்டப்பட்டிருந்த மற்றொரு பசுமாடும் சிறுத்தை கடித்த காயத்துடன், கொம்பு இருந்த பகுதியில் ரத்தம் வழிந்தநிலையில் நின்று கொண்டிருந்தது. மற்றொரு பசுமாடு சிறுத்தையை கண்டு பயந்து கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது.

இதற்கிடையே தகரம் தட்டும் சத்தம்கேட்டவுடன் சிறுத்தை அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

கணேசனின் மாட்டுக் கொட்டகையில் ஒரே நேரத்தில் 2 மாடுகள் தாக்கப் பட்டிருப்பதால், சிறுத்தை தனது குட்டிகளோடு வந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு கோவிந்தபுரம் காலனியில் ஆட்டோ உரிமையாளரான சீனிவாசன் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி சிறுத்தை உள்ளே புகுந்துள்ளது. அப்போது சிறுத்தையை அங்கிருந்த இரண்டு நாய்கள் துரத்தியுள்ளன. அவற்றில் ஒரு நாயை, சிறுத்தை தனக்கு இரையாக்கிக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஊருக்குள் சுற்றி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பத்து நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தையின் தாக்குதல் தொடர்வதால், அப்பகுதி மக்கள் எப்போதும் பீதியிலேயே உள்ளனர்.

English summary
Near Thuraiyur the people are in fear as a leopard attacked some domestic animals in residential area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X