தமிழக வரலாற்றில் முதல்முறையாக 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு - வெடித்த டிரான்ஸ்பார்மர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வரலாற்றில் முதல்முறையாக செவ்வாய்கிழமையன்று 114 டிகிரி ஃபாரன்ஹீட் அதாவது 45.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பதிவானது. டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.

தமிழக மக்கள் வெயிலுக்கு அஞ்சியவர்கள் இல்லை. வருடத்தில் 8 மாதங்கள் வெயிலோடுதான் விளையாடி உறவாடி வருகிறார்கள். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த வரலாறு காணாத மழை போல இப்போது வரலாறு காணாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

திருத்தணியில் 114 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணியில் நேற்று பதிவான 114 டிகிரி வெயிலே தமிழகத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகும். இந்த வெப்பத்தின் வேகத்தை தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர் வெடித்து நால்வர் காயமடைந்தனர்.

வரலாறு காணாத வெப்பம்

தமிழகத்தில் இதுவரை தமிழகத்தில் 113 டிகிரி வெயில் பதிவானதே அதிக பட்சமாகும். கடந்த 2003ஆம் ஆண்டு சென்னை மற்றும் வேலூரில் இந்தளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. திருத்தணி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பதிவாகி வரும் வரலாறு காணாத வெயிலின் காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

பல நகரங்களில் சதமடித்த வெயில்

வேலூரில் 109 டிகிரி, திருச்சியில் 108 டிகிரி, சென்னை, கரூரில் 107 டிகிரி, பாளையங்கோட்டையில் 106 டிகிரி, புதுச்சேரி, பரங்கிப்பேட்டையில் 105 டிகிரி, மதுரை, சேலத்தில் 104 டிகிரி, கடலூர், தருமபுரியில் 103 டிகிரி, காரைக்காலில் 102 டிகிரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

வெடித்த டிரான்ஸ்பார்மர்கள்

வெயிலின் வேகத்தை தாங்க முடியாமல் பல பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்தன. இதனால் மின்வெட்டு ஏற்பட்டு இரவு நேரங்களில் மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். எப்போது மின்சாரம் வரும் என்று பனையோலை விசிறிகளுடன் இரவுகளை கழித்தனர் சென்னைவாசிகள்.

வறண்ட காற்று

பொதுவாக காலை நேரங்களில் கடலில் இருந்து குளிர்ந்த காற்று நிலப்பகுதியை நோக்கி வீசும். அந்த காற்று சரியான நேரத்தில் வீசினால் வெப்பம் சற்று குறைந்து காணப்படும். தாமதமாக கடல்காற்று வீசினால் வெப்பம் அதிகரிக்கும். தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வறண்ட காற்று தமிழகத்தை நோக்கி வீசுவதாலும் மேற்கு திசையை நோக்கி தரைக்காற்று வீசுவதாலும் கடற்காற்று வர தாமதமாகிறது. இதனால் தற்போது வெப்பம் அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடல்காற்று வீசுவது தாமதம் ஆவதாலும், தரைக்காற்று வீசுவதாலும் வெயில் அதிகரித்துள்ளது. இந்தநிலை மேலும் 2 அல்லது 3 தினங்களுக்கு நீடிக்கும். திருத்தணியில் பதிவான வெயில், நம்மிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் பதிவானதிலேயே அதிகமாகும் என்று கூறியுள்ளார்.

அனல் காற்று வீசும்

தமிழகத்தில் ஆங்காங்கே இன்று மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆனால் காலை முதலே சென்னையில் சாரல் மழை பெய்வதால் அனலின் தாக்கத்தில் இருந்து மக்கள் சற்றே தப்பித்துள்ளனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Tiruttani records 45.5 C today making it one of the hottest day recorded anywhere in Tamil Nadu in the last 15 years, but its not the hottest day ever.
Please Wait while comments are loading...