பரபரப்பான சூழலில் ஆளுநர் தமிழகம் வருகை.. அடுத்து நடக்கப்போவது என்ன?

அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் முரண்டுபிடிக்கும் நிலையில்தான் இன்று ஆளுநர் சென்னை வந்துள்ளார். இந்த நேரத்தில் ஆளுநர் சென்னை வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்து ஆளும் கட்சியில் பெரும் அமளி துமளி நிலவும் இந்த நேரத்தில் மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை தந்துள்ளதால் பல்வேறு யூகங்கள் கொடிகட்டி பறக்கின்றன.

டிடிவி தினகரன் தரப்பு பணம் பட்டுவாடா செய்தது ஆதாரத்தோடு வெளியானதால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று, பலவேறு ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், திமுக எம்.பிக்கள் மும்பை சென்று ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து, ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக, லஞ்ச புகாரில் சிக்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

முதல்வருடன் மோதல்

அமைச்சரவையிலிருந்து விஜயபாஸ்கரை விலகுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதாகவும், ஆனால் அதை ஏற்க மறுத்த விஜயபாஸ்கர், எனது பதவி பறிபோனால் ஆட்சியே கலைந்துவிடும் என எச்சரித்ததாகவும் சில தகவல்கள் வெளியாகின. கார்டன் ரகசியங்கள் அறிந்தவர் என்பதால் விஜய பாஸ்கரை பகைக்க டிடிவி தினகரன் விரும்பவில்லை.

டிடிவி தினகரன் மீது பிடி

விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து நீக்கப்போவதில்லை என்று தினகரன் திட்டவட்டமாக கூறிவிட்டார். தம்பிதுரை பேசிப்பார்த்தும் பலனில்லை. இந்த நிலையில் மத்திய அரசின் கோபம் இன்னும் அதிகமாகியுள்ளது. விஜயபாஸ்கரை பதவி விலக முட்டுக்கட்டை போட்ட டிடிவி தினகரன் மீது இப்போது, பிடி இறுகியுள்ளது.

சிக்கியுள்ள தினகரன்

இரட்டை இலை சின்னத்தை தக்க வைக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக டிடிவி தினகரன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது டெல்லி குற்றப்பிரிவு போலீசார். டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது இதில் கவனிக்கத் தக்கது.

ஆளுநர் வருகை

தொடர்ந்து விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் முரண்டுபிடிக்கும் நிலையில்தான் இன்று ஆளுநர் சென்னை வந்துள்ளார். "விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய சொல்கிறீர்களா, அல்லது திமுக கொடுக்க மனுவிலுள்ள கோரிக்கை அடிப்படையில், நானே அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்யட்டுமா" என முதல்வரிடம் ஆளுநர் தகவல் தெரிவிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

ஆட்சி கலைப்பு கோரிக்கை

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள, டிடிவி தினகரன் வழிநடத்தும் இந்த தமிழக அரசை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் வைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஆளுநர் சென்னை வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. "இடையூறாக உள்ள ஒவ்வொரு காயாக வெட்டி எறிவதே மத்திய அரசின் நோக்கம், ஒரேடியாக ஆட்சியை கலைக்க முயலமாட்டார்கள்" என வந்துள்ள டெல்லி வட்டார தகவல்கள் வேண்டுமானால் சசிகலா தரப்புக்கு தற்காலிக நிம்மதியாக இருக்கலாம்.

English summary
TN Governor's arriving at Chennai getting political importance as RK Nagar, IT raids, TTV Dinakaran issues on the raise.
Please Wait while comments are loading...