விவசாயிகளை சந்திக்காத முதல்வரை நாம் பெற்றிருப்பது வேதனையாக உள்ளது.. மு.க.ஸ்டாலின் சாடல்

டெல்லியில் 36 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை சென்று சந்திக்க மறுக்கும் முதல்வரை இந்த தமிழகம் பெற்றிருப்பது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் 36 நாள்களாக போராடிவரும் விவசாயிகளை தமிழக முதல்வர் சந்திக்காதது உள்ளபடியே வேதனையாக உள்ளது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ஆம் தேதி முதல் 36 நாள்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

பாம்பு கறி, எலிக் கறி உண்பது, புல்லை திண்பது, அரை நிர்வாண போராட்டம், நிர்வாண போராட்டம், பெண் வேடம் அணிந்து போராட்டம், பாடை கட்டி போராட்டம்,ஒப்பாரி போராட்டம் உள்ளிட்டவைகளை நடத்தினர். எனினும், மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும்...

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம், தண்ணீர் கேட்டு போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் என்று மாணவர்களும், இளைஞர்களும் போராடி வருகின்றனர்.

போராட்ட களமாக...

இவ்வாறு தமிழகமே போராட்டக் களமாக மாறி அளவுக்கு செயல்படாத அரசாக மாநில அரசு உள்ளது. டெல்லியில் 36 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க முதல்வர் செல்லாதது உண்மையில் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மக்களின் குறைகளை செவி மடுத்து கேட்கும் அளவுக்கு ஜனநாயக ரீதியில் அரசு இல்லை.

மக்கள் பிரச்சினைக்காக ....

இதுவரை மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்குதான் அமைச்சர்களின் கூட்டம் நடந்து வந்தது. ஆனால் இந்த பினாமி அரசில்தான் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள், அதிகாரப் போட்டிகள், ஆட்சிக்கு தலைமையை மாற்றுவது, கட்சி தலைமை மாற்றுவது உள்ளிட்டவற்றுக்கு இரவு நேரங்களில் அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக ரூ.60 கோடி பேரம் பேசியதும் தம்பிதுரை டெல்லியில் இருந்து சென்னை வந்து முதல்வர் எடப்பாடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நீட் குறித்து வாய் திறக்கவில்லை

தமிழகத்திற்கு நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தப்பின்பும் முதல்வர் எடப்பாடி வாய்திறக்காமல் உள்ளார். குடிநீர் கேட்டு அமைச்சர் செங்கோட்டையனை கோபியில் மக்கள் முற்றுகையிட்டதாக செய்திகள் வெளியாகின. முதல்வரின் தொகுதியிலேயே அடிப்படை வசதிகளுக்காக போராட்டம் நடக்கிறது. முதல்வரை பொருத்தமட்டில் அந்தப் பதவியில் நீடிப்பதே போராட்டமாக இருக்கிறது. அதிமுக அரசின் நிர்வாகம் செயலிழந்து திசைமாறி திக்குத்தெரியாத காட்டிற்குள் நுழைந்து விட்டது.

ஜனநாயகம் இல்லை

அதிமுக ஆட்சியில் சட்டமன்ற ஜனநாயகம் இல்லை என்பது ஒரு புறமிருக்க, இன்றைக்கு முதலவரும் இல்லை. அமைச்சரும் இல்லையோ என்பது போன்ற தேக்க நிலைமை நிர்வாகத்தில் புரையோடிப் போய்விட்டது மிகவும் ஆபத்தானது. அரசியல் சட்டப்படி இந்த அரசு நிர்வாகம் செயல்படுகிறதா என்ற மிகப்பெரிய சந்தேகமே இப்போது உருவாகியிருக்கிறது. இதனால் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மறைந்து வீழ்ச்சியை சந்தித்து, மாநில முன்னேற்றம் அனைத்துவகையிலும் பாதிக்கப்பட்டு நிற்கிறது என்றார் அவர்.

English summary
DMK working President MK Stalin accuses CM of TN not ready to meet farmers who protest in Delhi.
Please Wait while comments are loading...