For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவால் அதிகரித்துள்ள தமிழகத்தின் கடன்சுமை அவர்களுக்கு கலக்கமா? களிப்பா?- கருணாநிதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்து காணப்படுவதிற்கு அதிமுக கலக்கமடைகிறதா இல்லை களிப்படைகிறதா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க அரசின் நான்காண்டு கால ஆட்சி முடிவடைந்து ஐந்தாம் ஆண்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இந்த ஆட்சி யினர் தமிழ் நாட்டு மக்களை எந்த அளவுக்குக் கடனிலே சிக்க வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி ஆங்கில நாளேடு ஒன்று ஒரு நீண்ட கட்டுரையை வரை படத்தோடு வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான அது போன்ற செய்திகளைத் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாளேடுகள் அண்மைக் காலத்தில் முழுமையாக வெளியிடுவதில்லை. எனவே தான் அந்த ஆங்கில நாளேடுகளில் உள்ள நியாயமான விமர்சனங்களை நான் எடுத்து விளக்கிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடன்களை வாரி இறைத்ததாக குற்றச்சாட்டு:

கடன்களை வாரி இறைத்ததாக குற்றச்சாட்டு:

ஆனால் அ.தி.மு.க. வினர் 2011இல் ஆட்சிக்கு வந்த போது என்ன சொன்னார்கள்? தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தி.மு. கழக அரசு கடன்களைப் பெற்று இலவசத் திட்டங்களுக்கு வாரி இறைத்து விட்டதாகவும், அதனால் தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மீதும் கடன் சுமையை ஏற்றி வைத்து விட்டதாகவும் பேரவையில் குற்றம் சுமத்தினார்கள்.

கிளிப்பிள்ளை போன்ற கூற்று:

கிளிப்பிள்ளை போன்ற கூற்று:

அந்தக் கேள்விக்கு பல முறை அப்போதே தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டது. இருந்தாலும் உருப்படியாக வேறு எந்தக் குற்றச்சாட்டும் கூறுவதற்கு இல்லாததால், கிளிப்பிள்ளை போல இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். உண்மையில் இலவசத் திட்டங்களைச் செயல்படுத்து வதற்காகத் தி.மு. கழகத் தலைமையில் அமைந்திருந்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை.

மூலதனச் செலவு மட்டுமே அதிகம்:

மூலதனச் செலவு மட்டுமே அதிகம்:

அ.தி.மு.க. அரசு 2001-2002 ஆம் ஆண்டு முதல், 2005-2006 ஆம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். அதாவது வாங்கிய கடன் தொகையில் 54.26 சதவிகிதம். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.

ஐந்நாண்டுகளில் அடிப்படைக் கட்டமைப்பு:

ஐந்நாண்டுகளில் அடிப்படைக் கட்டமைப்பு:

2006-2007ஆம் ஆண்டு முதல் 2010-2011 ஆகிய ஐந்தாண்டுகளில் தி.மு. கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகை முழுவதுமே அதாவது நூறு சதவிகிதமும் மூலதனங்களுக்காக அதாவது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்காக செலவிடப்பட்டது. இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடப்பட வில்லை; நிரந்தரமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு மட்டுமே செலவிடப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மொத்தக் கடன் அளவு:

மொத்தக் கடன் அளவு:

2005-2006ஆம் ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு - 2010-2011இல் தி.மு. கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்தது. அ.தி.மு.க. ஆட்சியில், 2015-2016 நிதி ஆண்டின் இறுதியில் தமிழக அரசின் மொத்தக் கடன் அளவு 2,11,483 கோடி. அதாவது தி.மு. கழக ஆட்சியில் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது, தற்போது 2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அந்தக் கடன், அதாவது முன்பு இருந்ததை விட 234.98 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து:

டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து:

தமிழகத்தின் கடன் எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாகப் பார்த்தால் - 2010-2011இல் 91,050 கோடி ரூபாய் - 2011-2012இல் 1,03,999 கோடி ரூபாய் - 2012-2013இல் 1,20,205 கோடி ரூபாய் - 2013-2014இல் 1,40,042 கோடி ரூபாய் - 2014-2015இல் 1,78,171 கோடி ரூபாய் - 2015-2016இல் 2,11,483 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சியில் கடனை வெகுவாகப் பெருக்கியிருக்கிறார்கள் என்று நானல்ல, "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு எழுதியுள்ளது. அதாவது தி.மு. கழக ஆட்சியில் இருந்ததை விட, அ.தி.மு.க. ஆட்சியில் கடன் சுமார் 200 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

பெருக்கியுள்ள அதிமுக:

பெருக்கியுள்ள அதிமுக:

தி.மு. கழக ஆட்சியில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா, "தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனோடு பிறக்கிறது" என்றார். அப்படிக் கேலி பேசிய ஜெயலலிதா, தற்போது நான்காண்டு கால ஆட்சிக்குப் பிறகு அந்தக் கடன் சுமையை இறக்கி விட்டாரா? அல்லது குறைத்து விட்டாரா? இரண்டு மடங்குக்கு மேல் அல்லவா பெருக்கியிருக்கிறார்?

முன்னணியில் தமிழ்நாடு:

முன்னணியில் தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் தனி நபரின் கடன் சுமை தற்போது எவ்வளவு தெரியுமா? கிராமப்புறத் தனிநபராக இருந்தால், 45,803 ரூபாய் கடனும், நகர்ப்புறத் தனி நபராக இருந்தால் 1,16,404 ரூபாய் கடனும் தற்போது இருப்பதாக அந்த ஏடு சுட்டிக்காட்டியுள்ளது. அது மாத்திரமல்ல, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தனி நபர் கடன் என்று பார்த்தால், மேற்கு வங்கத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 11,253 ரூபாய்; நகரத்தில் 34,279 ரூபாய் - குஜராத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 25,536 ரூபாய்; நகரத்தில் 71,618 ரூபாய் - உத்தர பிரதேசத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 22,199 ரூபாய், நகரத்தில் 87,038 ரூபாய் - மராட்டியத்தில் தனி நபர் கடன் கிராமத்தில் 33,893 ரூபாய், நகரத்தில் 99,428 ரூபாய் - ஆனால் எல்லா மாநிலங்களையும் விட தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சியிலே தான் தனி நபர் கடன் கிராமங்களில் 45,803 ரூபாயாகவும், நகரங்களில் 1,16,404 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது என்றும்; இந்தப் புள்ளி விவரங்களை யெல்லாம் "நேஷனல் சாம்பிள் சர்வே" அலுவலகம் தந்திருப்பதாகவும் ஆதாரத்தோடு "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு எழுதியுள்ளது. இந்தப் புள்ளி விவரங்களின்படி, தனி நபர் பட்டிருக்கும் கடனைப் பொறுத்தவரை, தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று ஜெயலலிதா பெருமைப்பட்டுக் கொள்ளலாமா?

கலக்கமா? களிப்பா:

கலக்கமா? களிப்பா:

தி.மு. கழக ஆட்சியில் 2010-2011ஆம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை 3,396.45 கோடி ரூபாய் ஏற்படும் என்றும், நிதிப் பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.72 சதவிகிதமாக இருக்கும் என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு வருவாய்ப் பற்றாக்குறையோ, நிதிப் பற்றாக்குறையோ தி.மு. கழக ஆட்சியில் இருந்ததை விடக் குறைந்திருக்கிறதா என்று பார்த்தால், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், 2015-2016ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை 4,616,02 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், நிதிப் பற்றாக்குறை 31,829.19 கோடி ரூபாயாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் புள்ளி விவரங்களையும், அந்த ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியுள்ள விவரங்களையும் பார்க்கும்போது, அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தலையிலே ஓசையின்றிக் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது என்பதை ஐயம் திரிபறத் தெரிந்து கொள்ளலாம். "கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான்" என்றான் கம்பன். தமிழகத்தில், மிகப் பெரிய கடன் சுமைக்குக் காரணமான அ.தி.மு.க. அரசு, கலக்கமடையப் போகிறதா? அல்லது, நமது ஆட்சி தான் முடியப் போகிறதே, அடுத்து ஆட்சிக்கு வரப் போகிறவர்கள் மாட்டிக் கொண்டு விழிக்கட்டுமே என்று களிப்படையப் போகிறதா?"

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
TN in high credits rate; ADMK will suffer or joy for this impact - DMK Leader Karunanidhi asks question in his statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X