For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாயமான டோர்னியர் விமான கருப்பு பெட்டியில் இருந்து வெளியானது சிக்னல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம், 5 நாட்கள் முன்பு, காரைக்கால் அருகே திடீரென மாயமாகியது. இந்த விமானம் எங்கு விழுந்திருக்கும் என்று தெரியாமல் இந்திய கடற்படை, கடலோர காவல்படை என பல பிரிவினரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், விமான கருப்பு பெட்டியில் இருந்து இன்று சிக்னல் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல்படையின் நீர்மூழ்கி கப்பல், இந்த சிக்னலை கண்டுபிடித்தது. எனவே கூடுதலாக நீர்மூழ்கி கப்பல்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

3 பேர் மாயம்

3 பேர் மாயம்

பாதுகாப்பு ஒத்திகைக்காக கடந்த 8ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் வரை சென்று விட்டு திரும்பிய இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் ரக விமானம் காணாமல் போய் விட்டது. அதில் பயணம் செய்த விமானி வித்யாசாகர், துணை விமானி சுபாஷ் சுரேஷ், கண்காணிப்பாளர் எம்.கே.சோனி ஆகிய மூன்று பேரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இரவில் மாயம்

இரவில் மாயம்

நாகப்பட்டினத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் பறந்து கொண்டிருந்த போது அந்த சிறிய விமானம் மாயமானது. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பல தரப்பு தேடுதல்

பல தரப்பு தேடுதல்

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான 15 கப்பல்கள், அந்த பகுதியில் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன. நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் பாரா மோட்டார் மூலமாகவும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இன்று 5வது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது.

இஸ்ரோ உதவி

இஸ்ரோ உதவி

கன்னியாகுமரி கடல் பகுதியிலும் நேற்று தேடும் பணி நடைபெற்றது. சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதிநவீன ரோந்து படகுகளில் சென்று தேடினார்கள். ஆனால் 3 நாட்கள் ஆகியும் விமானத்தை பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியையும் கடலோர காவல்படை நாடி இருக்கிறது.

நீர்மூழ்கி கப்பலுக்கு சிக்னல்

நீர்மூழ்கி கப்பலுக்கு சிக்னல்

இந்நிலையில், தேடுதல் வேட்டைக்காக ஐஎன்எஸ் சந்த்யாக் எனப்படும் அதிநவீன நீர்மூழ்கி கப்பலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்கு, விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து இன்று காலை சிக்னல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். 37.5 Khz என்ற அலைவரிசையில், விட்டுவிட்டு இந்த சிக்னல் கிடைத்துள்ளது. எனவே விமானம் கடலுக்குள்தான் விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தேடுதல் வேட்டையை கடல்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கூடுதல் கப்பல்

கூடுதல் கப்பல்

விமானம் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில் எண்ணை மிதந்து கொண்டுள்ளது. அந்த எண்ணையை சோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அது விமான எரிபொருளா என்பதை வைத்து, விமானம் கடலுக்கடியில் உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்க முடியும். இதனிடையே கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த சிக்னலை தொடர்ந்து கூடுதல் நீர்மூழ்கி கப்பல்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

English summary
The Indian Coast Guard officials said on Saturday that INS Sandhyak, undertaking sub-surface search for the missing Dornier, detected intermittent transmission of 37.5 Khz, likely to be from the Sonar Locator Beacon (SLB) of the aircraft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X