ராம்குமார் செய்தி.. சன், நியூஸ் 7, சத்தியம் டிவிகளுக்கு போனில் ஆபாச அர்ச்சனை.. ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: ராம்குமார் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்ட டிவி சேனல் ஒன்றின் அலுவலகத்திற்கு போன் போட்டு சிலர் எச்சரிக்கைவிடுப்பது போன்ற உரையாடல் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

ராணுவ வீரர்கள் 17 பேர் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த செய்தியைவிட, ராம்குமார் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே.. இது நியாயமா.. என தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் ஊழியர்களுடன் போனில் பேசுவதை போல ஆரம்பிக்கும் அந்த உரையாடல் நீண்டு கடைசியில் கெட்ட வார்த்தையில் திட்டும் அளவுக்கு சென்று நிற்கிறது.

TV channel anchors got threaten phone calls over Ramkumar death issue

மற்றொருபக்கமோ, 2 முன்னணி செய்திதாள்கள் தங்கள் தலைப்பு செய்தியாக ராம்குமார் தற்கொலை செய்ததை போட்டதையும், அதற்கு கீழே ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை போட்டதையும் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களிலும் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய சிறைத்துறை வரலாற்றில் உயர் பாதுகாப்பு சிறையென வர்ணிக்கப்படும் புழல் சிறையில் தான் முதன்முதலாக விசாரணை கைதி ஒருவர் "மின் கம்பியை வாயில் கடித்து தற்கொலை" செய்துக் கொண்ட வரலாறு சமீபத்தில் அரங்கேறியது.

இது வட இந்தியாவில் நடைபெற்றிருந்தால் ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் பெரும் அளவில் விவாதித்திருக்கும். (அவர்கள் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த மாபாதக மனித உரிமை மீறலை உரிய வகையில் கண்டுக்கொள்ளவில்லை).

சகோதரர் ராம்குமார் மர்ம மரணம் தொடர்பாக பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சிகள் ஏனோ அடக்கி வாசித்தன. இம்மாபாதக மரணம் குறித்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அதே நேரத்தில் நடுநிலை தவறாது நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி செய்திகளையும் விமர்சனங்களையும் விரிவாக வழங்கியது. இதே பாணியில் சத்தியம் தொலைக்காட்சியும் சன் தொலைக்காட்சியும் செய்திகளை வழங்கின.

இந்த மூன்று தொலைக்காட்சிகளும் ராம்குமார் மர்ம மரணத்தில் தங்களை அம்பலப்படுத்தியுள்ளதை ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங் பரிவார் அமைப்பினரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. குறிப்பாக நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு அவர்கள் திட்டமிட்டு மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளார்கள். அதன் நெறியாளர்கள் செந்தில்வேல் மற்றும் நெல்சனுக்கு தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து தங்கள் சிந்தனை பயங்கரவாதத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள்.

சங்க பரிவாரின் இந்த மிரட்டல்களை முறியடிக்க அனைத்து ஊடகவியலாளர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் ஓரணியில் நிற்க வேண்டிய காலம் இது. சங் பரிவாரின் இந்த அருவருக்கத்தக்க கருத்தியல் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் தங்கள் எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
TV channel anchors got threaten phone calls over Ramkumar death issue, for which Manithaneya Makkal Katchi party chief Jawahirullah condemns.
Please Wait while comments are loading...

Videos