For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல்.. மத்திய அரசின் நயவஞ்சகத்திற்கு வேல்முருகன் கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கைவிடப்பட்ட மீத்தேன், கைவிடுவதாகச் சொன்ன ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மீண்டும் கொண்டுவருவதா? அளித்த வாக்குறுதியை மீறி அடாவடியில் இறங்கும் மோடி அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்றார் வள்ளலார். பின்னாளில் பாஜக என்ற கட்சி வரும் என்று தெரிந்துதான் இப்படிச் சொல்லியிருப்பாரோ? சொல் வேறு செயல் வேறு என்று இருக்கும் பாஜகவின் மோடி அரசு தமிழகத்தின் உணர்வுகளை மதிப்பதாக இல்லை. மாறாக அதனை நசுக்கப் பார்க்கிறது.

மலட்டு பூமி

மலட்டு பூமி

இது ஒரு கூட்டாட்சி நாடு என்பதையே மறந்து தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கிறது. வாழ்வாதாரங்களை அழிக்கிறது. மேலை நாடுகள் தங்கள் மண்ணில் அனுமதிக்காத, கைவிட்ட திட்டங்களையும் தொழில்நுட்பத்தையும் தமிழ் மண்ணில் திணித்து நீர்வளத்தையும் நிலவளத்தையும் சுற்றுச்சூழலையுமே கெடுத்து வாழவே தகுதியற்ற ஒரு மலட்டு பூமியாக்கப் பார்க்கிறது.

காலியாகும் நிலத்தடி நீர்

காலியாகும் நிலத்தடி நீர்

இத்தகைய ஆபத்தை விளைவிப்பதுதான் மீத்தேன் திட்டம். 2500 அடி அளவுக்கு பூமியில் பெரிய துளையிட்டு எரிவாயுவை உறிஞ்சி எடுக்கும் திட்டம். இதில் நிலத்தடி நீரும் முற்றுமாக உறிஞ்சப்படுவதால் நீர்வளம் அடியோடு அற்றுப் போகும். நீருக்குப் பதில் கடல் நீர் உட்புகுந்துவிடும். அதனால் நிலம் உவர் நிலமாகிவிடும். அதில் பயிர் செய்ய முடியாது என்பதுகூட இல்லை, புல் பூண்டுகூட முளைக்காது. ஆக கால்நடைகளும் சரி மனிதர்களும் சரி வாழவே தகுதியற்ற மண்ணாகிவிடும்.

99 ஆண்டு அனுமதி

99 ஆண்டு அனுமதி

2010ல் இந்த மீத்தேன் திட்ட ஆய்விற்கான அறிவிப்பை அப்போதைய காங்கிரஸ் ஐமுகூ அரசு வெளியிட்டது. திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் ஆய்வு நடத்தி மீத்தேன் வாயு எடுக்க கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

போராட்டக் களம்

போராட்டக் களம்

இத்திட்டத்தின் ஆபத்தை அறிந்து மக்கள் கொதித்தெழுந்தனர். டெல்டா பகுதியே போராட்டக் களமானது. காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் பிரதான கோரிக்கை. இதையடுத்து 2013ல் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு இடைக்காலத் தடை விதித்தது. 2015ல் நிரந்தர தடை விதித்தது. இதைத் தோடர்ந்து மீத்தேன் திட்டத்தை ரத்து செய்வதாக மோடி அரசும் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது.

புதிய விண்ணப்பம்

புதிய விண்ணப்பம்

ஆனால் கைவிடப்பட்ட இந்தத் திட்டத்திற்கு மோடி அரசு மீண்டும் இப்போது அனுமதி வழங்கியுள்ளது. பிப்ரவரி 25, 26 தேதிகளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூடி, அதே கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து புதிய விண்ணப்பத்தை ஏற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம். இது வேறு புதிய திட்டம் இல்லை. மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டதால் புதிய பெயரில் ஏமாற்ற வந்த திட்டம். ஹைட்ரோ கார்பன் என்பது பொதுப் பெயர். இதை வைத்துக் கொண்டு மீத்தேன், ஷேல் உள்ளிட்ட பல திரவ வாயுப்பொருட்களையும் எடுப்பதுதான் திட்டம். மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் அதே பாதிப்புகள் இதிலும்தான்.

தற்காலிக நிறுத்தம்

தற்காலிக நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இத்திட்டத்தை மோடி அரசு கடந்த பிப்ரவரி 15ந் தேதி அறிவித்தது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 16ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் உறுதிமொழியை ஏற்று மார்ச் 9ந் தேதி போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதேபோல் மார்ச் 24ந் தேதி நல்லாண்டார்கொல்லையிலும் 25ந் தேதி வடகாட்டிலும் மக்கள் ஹைட்ரோ கார்பன் தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். மாவட்ட ஆட்சியரிடமிருந்து திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழிக் கடிதம் பெறப்பட்டது. போராட்ட பிரதிநிதிகள் டெல்லி சென்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் சந்தித்தனர். மக்கள் விரும்பாதவரை திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழி அவரிடமிருந்தும் பெறப்பட்டது.

ஒப்பந்தம் ரெடி

ஒப்பந்தம் ரெடி

ஆனால் மறுநாளே நேர்மாறான செய்தி வந்தது. தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக்கால் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தங்கள் டெல்லி தாஜ் மான்சிங் நட்சத்திர ஹோட்டலில் மார்ச் 27ல் கையெழுத்தாகிறதாக தகவல் வெளியானது. இது நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.

மீண்டும் போராட்டம்

மீண்டும் போராட்டம்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனமான ஜெம் லேபரட்டரீஸ், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக ரூ.12 லட்சத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளது. இதை ஆட்சியர் உடனே திருப்பி அனுப்ப வேண்டும். ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நெடுவாசலை நீக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்கிறார்கள் மக்கள்.

கார்ப்பரேட் ஆட்சி

கார்ப்பரேட் ஆட்சி

இப்படி தான் கொடுத்த வாக்குறுதியையே மீறி மோடி அரசு செயல்படுவதன் காரணம், அது மக்கள் அரசாக இல்லை; பெருமுதலாளிகள், கார்ப்பரேட்டுகளின் அரசாக இருப்பதுதான். இது மக்களாட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் நேர் எதிரானது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்வுரிமையைக் காவு கொள்ளும் உள்நோக்கமுடையது.

மோடியின் நயவஞ்சகம்

மோடியின் நயவஞ்சகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் நீராதாரத்தை முடக்கி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் திணித்து தமிழகத்தையே பாலைவனமாக்க முயற்சிக்கும் மோடி அரசின் நயவஞ்சகம் இதன் மூலம் அம்பலமாகியிருக்கிறது. இதில் பொறுமைக்கு இனி இடமில்லை. இந்த அடாவடிச் செயலை ஒன்றுபட்டு எதிர்க்க தமிழக விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவி அழைக்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
TVK leader Velmurugan condemned Union government over hydrocarbon project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X