For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கெயில்" திட்டத்தை நிறைவேற்ற மும்முரம் காட்டுவதா? மத்திய அரசுக்கு வேல்முருகன் கண்டனம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பிக்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

TVK slams Centre on Gail project

மத்திய அரசின் கெயில் நிறுவனமானது கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு இயற்கை எரிவாயு குழாய்களை கொண்டு செல்வதற்காக தமிழ்நாட்டின் கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களை கபளீகரம் செய்ய முயற்சித்தது. இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட அனைத்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தன.

இதனைத் தொடர்ந்து கெயில் எரிவாயு குழாய் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

அத்துடன் விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றமும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து தமிழக மக்களுக்கு சற்றே ஆறுதலைத் தந்தது.

ஆனாலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் வேட்டையாடி வஞ்சிப்பது மட்டுமே தங்களது கொள்கையாகக் கொண்டிருக்கிற இந்தியப் பேரரசு தொடர்ந்தும் எப்பாடுபட்டாவது இந்த கெயில் திட்டத்தை தமிழர் தலையில் திணித்து 7 மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.

இதனடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையிலும் கூட கெயில் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் வகையில் சில இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரி பசுமைத் தீர்ப்பாயத்துக்குப் போனது இந்திய அரசு. ஆனாலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் இது தொடர்பான மற்ற மனுக்களுடன் சேர்த்து இம்மனுவை விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும் தமிழரை வேட்டையாடியே தீருவது என்ற வெறித்தனத்துடன் இந்தியப் பேரரசு தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்திய அரசின் சார்பில் ரஞ்ஜித் குமார் என்பவர் உச்சநீதிமன்றத்திலே நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அம் மனுவில் கெயில் எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய மத்திய அரசின் மனுவை முக்கிய மனுவுடன் சேர்த்து விசாரிக்காமல் தனியாக பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என்று அவசரம் காட்டியுள்ளார்.

இதுதான் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு அங்கமாக பார்க்கிற இந்தியப் பேரரசின் லட்சணமா? இதுதான் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று மங்களம் பாடிய மோடி அரசின் யோக்கியதையா? ஒரு ஒட்டுமொத்த மாநிலமே எதிர்க்கிறது... 8 கோடி தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதிர்க்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கூடங்குளம் அணு உலை, மீத்தேன் எரிவாயு, நியூட்ரினோ போன்ற நாசகார திட்டங்கள் வழியில் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தையும் தமிழ்நாட்டில் மண்ணில் நிறைவேற்றிட இந்தியப் பேரரசு முயற்சிப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய நிலைப்பாடுகளால் நடவடிக்கைகளால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை மதிக்கிற தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களில் எதிர்மறையான சிந்தனைகளை இந்தியப் பேரரசு விதைத்துக் கொண்டிருக்கிறது.. இதனால் ஏற்படப் போகிற எதிர்கால விளைவுகளுக்கு தமிழ்நாடு ஒரு போதும் பொறுப்பில்லை என்றும் கடுமையாக எச்சரிகிறேன்.

தமிழகத்தின் 7 மாவட்ட வாழ்வாதாரத்தை அடியோடு நாசமாக்கும் இந்த கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை என்ன விலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்துவோம்! இதற்காக ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் ஓரணியில் ஒன்று திரண்டு போராடி இந்திய அரசு திணிக்க முயற்சிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை விரட்டியடிப்போம் என்று அனைத்து ஜனநாயக, தமிழ்த் தேசிய சக்திகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
TVK founder T. Velmurugan has condemend Centre for trying to implement the Gail Pipe line project in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X